Tuesday 17 March 2015

பெருந்தலைவர் - யதார்த்தவாதி

சென்னை நகரின் புறநகர் பகுதியில் குட்டி நகரங்களை மேலை நாட்டுப் பாணியில் திட்டமிட்டு அமைக்க நகர அபிவிருத்திக் கழக அதிகாரிகள் திட்டமிட்டனர். ஒரு குழுவினர் மேலை நாடுகள் சென்று அவர்கள் புதிதாகத் திட்டமிட்டுக் கட்டிய நகரங்களை நேரிலே பார்த்து வடிவமைப்புப் படங்கள் தாயாரித்து வந்து, அதை தமிழகத்தில் செயல்படுத்த கூடிப்பேசினர். துறைசார்ந்த அமைச்சரையும் நேரில் சந்தித்துக் கோப்பில் ஒப்புதலும் பெற்றுவிட்டனர்.

இனி முதலமைச்சரின் பார்வைக்கு அனுப்பி அவர் ஒப்புதல் பெற்றுவிட்டால் விமானத்தில் பறக்க வேண்டியத்துதான் பாக்கி. 

காமராஜரிடம் வந்த கோப்பை பரிந்துரைத்தவர்கள் அக்கால ஐ.சி.எஸ் என்ற உயரிய அரசு பணிப்பட்டத்தை பெற்றவர்கள், லண்டணிலே படித்தவர்கள்.

அதே போல மேனாட்டுப் பயணத்துக்கு தயார் நிலையிலேயிருந்த அதிகாரிகளும் காமராஜர் நிச்சயம் இதில் கையெழுத்திட்டு விடுவார் என்றே நம்பினர். கோப்பை படித்து முடித்த காமராஜர் ஒரு கணம் சிந்தித்தார்.

ஒரு நகரை திட்டமிட்டு அமைத்த நிலை நமது தமிழ் நாட்டிலோ, இந்தியாவிலோ இல்லவே இல்லையா! இதில் கூட மேல் நாட்டுக்காரன் தானா நமக்கு வழிகாட்டி? இந்த அதிகாரிகள் சென்று பார்த்து வருவதாகச் சொல்லும் இடங்கள் நம் பண்பாட்டுக்கு ஒத்து வரக் கூடியவைதானா? நாமும் நாடு பூராவும் சுத்தி வந்திருக்கிறோமே. நம் மூதாதையர்கள் இந்த நகரமைப்புக் கலையில் நம்மைப் பிற நாட்டைப் பார்த்து ஏங்க வைக்கவா செய்திருப்பார்கள்? மக்கள் ஒரு துட்டு , ரெண்டு துட்டாக கொடுத்த வரிப்பணத்தில் இந்த உலக சுற்றுலா தேவைதானா? என்று சிந்தித்தபோது, அவரது அவர் மனதிலே மதுரை மாநகர் தோன்றியது.

ஊரின் மையப்பகுதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சுற்றிலும் தேரோடும் ரதவீதிகள், அடுத்த சுற்றில் அளவெடுத்து அமைத்தாற்போல நான்கு மாட வீதிகள், அதற்கடுத்து ஆவண வீதிகள், இடையில் இவைகளை இணைக்கும் சாலைகள். அக்காலத்திலேயே எவ்வளவு தொலைநோக்கோடு நகரை அமைத்திருக்கிறார்கள் நம்முன்னோர். இந்த அமைப்புக்கு மேல் திட்டமிடல் என்ன இருக்கிறது? என்று சிந்தித்தவுடன் கோப்பிலே எழுதினார். " இதற்காக மேலை நாட்டுப்பயணம் தேவையில்லை, எக்காலத்துக்கும் ஏற்றாற்போல அமைக்கப்பட்டிருக்கும் நம் மதுரை நகரைச் சென்று கண்டு ஆய்வு செய்து வாருங்கள்" என்று குறிப்பெழுதிக் கையெழுத்திட்டு சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்பினார். 

No comments: