Wednesday 11 March 2015

முயற்சிக்கு இல்லை காலவரை

ரைட் சகோதரர்கள் யார் என்று கேட்டால், சட்டென்று சொல்லி விடுவோம் விமானத்தைக் கண்டுபிடித்த வித்தகர்கள் என்று. சரி,சாமுவேல் பி. லாங்லே யார் என்று கேட்டால் என்ன செய்வோம்? விட்டத்தைப் பார்ப்போம். நெற்றியைச் சுருக்கி தலையைச் சொறிந்து அசட்டுச் சிரிப்பு சிரித்து, ‘தெரியலையே, யார் அது?’ என்போம். பாவம், அவரும் கிட்டத்தட்ட விமானத்தைக் கண்டுபிடித்தவர்தான். ஆனால், சரித்திரத்தில் அவர் பெயர் இடம் பெறவில்லை. ஆர்வில், வில்பர், ரைட் சகோதரர்களின் பெயர்கள்—தான் விமானக் கண்டுபிடிப்பாளர்கள் என்று இடம் பெற்றிருக்கிறது.

காரணம்...ரைட் சகோதரர்கள் விமானத்தை உருவாக்க சோதனைகள் செய்து கொண்டிருந்த காலத்தில்தான் பேராசிரியர் லாங்லேயும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தார். சொல்லப் போனால், அவர்களைவிட லாங்லே சிறப்பாகப் படித்தவர். கணிதமும் வானவியல் சாஸ்திரமும் அவருக்கு அத்துப்படி. விமான ஆராய்ச்சிக்காக அவர் பணிபுரிந்த ஸ்மித்ஸோனியன் இன்ஸ்டிடியூட்டே பெரும் பணம் கொடுத்திருந்தது. லாங்லேயும் மிகச் சிறப்பாக ஆராய்ச்சிகள் செய்து ஏறத்தாழ ஒரு விமானத்தை உருவாக்கி விட்டார். ஆளில்லாத விமானத்தைப் பறக்க வைத்தும் காட்டினார். ஆனால், விமானியுடன் பறக்க அவர் தயாரித்திருந்த விமானம் தண்ணீருக்குள் விழுந்தது. விமானம் பறக்கப் போவதை வேடிக்கை பார்க்க வந்திருந்த மக்களெல்லாம் கேலியாய்ப் பார்க்க, பத்திரிகைகள் விமர்சனம் செய்ய... லாங்லேயால் தாங்க இயலவில்லை. இருந்தாலும் மனதைத் தேற்றிக் கொண்டு இன்னொரு முறை அதே போன்று விமானத்தை விமானியுடன் பறக்க வைக்க முயன்றார். இந்த முறையும் தோல்வி. கேலியும் விமரிசனங்களும் அதிகமாய் வர, மனம் நொந்தார் லாங்லே. பல வருடங்களாய் தான் செய்து வந்த ஆராய்ச்சிகளையெல்லாம் விமர்சனங்களுக்குப் பயந்து மூட்டை கட்டி வைத்தார். முயற்சிகளை கைவிட்டார். விமான ஆராய்ச்சியே தனக்கு வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டார்.

இந்தச் சம்பவம் நடந்து சில மாதங்களுக்குள்ளாகவே ரைட் சகோதரர்கள் விமானத்தில் பறந்து வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார்கள். அவர்களும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறவில்லை. பல முயற்சிகள், பல தோல்விகள், பல பாடங்கள். ஆனால், தளரவில்லை; முயற்சிகளைக் கைவிடவில்லை. அதற்கு பலன், இன்று அவர்களது பெயரை உலகம் உச்சரித்துக் கொண்டிருக்கிறது.

இதில் இன்னுமொரு பரிதாபமான விஷயம் இருக்கிறது. லாங்லே தயாரித்த விமானத்தைப் போலவே சில வருடங்கள் கழித்து ஒரு விமானம் தயாரித்தார்கள். அந்த விமானம் பறந்தது. லாங்லே தரையிலிருந்து விமானத்தைப் பறக்க விட முயற்சிக்காமல் ஒரு பெரிய படகின் மேல் இருந்து பறக்க முயற்சி செய்தார். அதனாலேயே அது செயல்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் பிறகு கூறினார்கள்.

அன்று, லாங்லே மட்டும் விடாமல் தொடர்ந்து முயற்சித்திருந்தால்... முயற்சித்திருந்தால்...?

யெஸ்... முயற்சி... வெற்றிக்கான வழிகளில் மிக முக்கியமானது.

No comments: