Monday 16 March 2015

சான்றோர் சமூகம் - வணிகம் - ஒரு ஆய்வு - பகுதி 3

கி.பி. 18-19ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியரின் ஆவணங்களிலும், பின்னர் பிரிட்டிஷ் நிர்வாகத்தினரின் ஆவணங்களிலும் நெல்லைச் சீமையிலிருந்த மூன்று வகையான தறி நெசவு நிலையங்கள் குறிப்பிடப்படுகின்றன. செங்குந்தர் தறி, இஸ்லாமியர் தறி, சாணார் தறி என்பவையே அவை. இவற்றுள் சாணார் தறி என்பது சான்றோர் குலத்து நெசவாளர்களின் தொழிற்கூடங்களாக இருந்த தறி மையங்கள் அல்ல. சான்றோர்களின் சிறு குடியினராகிய இல்லத்துப் பிள்ளைமார் என்றும், நெசவுப் பணிக்கர் என்றும், சிறுகுடி வேளாளர் என்றும் அழைக்கப்படுகின்ற ஈழவர் குலத்தவரின் தறிகளே இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன. ஈழவர்கள் நெய்து கொடுத்த ஆடையை உடுத்துக் கொண்டு ஊர்ப் பஞ்சாயத்தில் அமர்ந்து நீதி செய்த சான்றோர்களைக் குறித்து "ஈழவன் கொடுத்த முண்டுடுத்து நாட்டாமை செய்யறாரு நாடார்" என்று நெல்லை மாவட்டம் ஆலங்குளம் வட்டாரத்திலுள்ள கீழப்பாவூரில் நாட்டுப் பாடல் ஒன்று வழங்குகிறது.



18ஆம் நூற்றாண்டிலேயே சான்றோர்கள் பருத்தி மட்டுமின்றிப் புகையிலை போன்ற பணப் பயிர்களையும் விளைவித்து, வணிகம் செய்து வந்திருக்கிறார்கள் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன. கி.பி. 1729ஆம் ஆண்டுக்குரிய இராமநாதபுரம் மாவட்டம் ஏறுவாடிக்கு அருகிலுள்ள வைகை சுப்பிரமணியர் கோயிலிலைச் சேர்ந்த செப்பேடு ஒன்று குமாரமுத்து ரகுநாத சேதுபதி காத்ததேவரால் வெளியிடப்பட்ட ஆவணமாகும். இப் பட்டயத்தில் வரி 48-39இல் தன்ம முக்குந்தர் புகையிலைத் தோட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்குந்தர் அல்லது முக்கந்தர் என்பது சான்றோர் சமூகத்தவரில் ஒரு பிரிவினருக்குரிய சாதிப் பட்டமாகும். இதற்கான ஆதாரம் சான்றோர் சமூகச் செப்புப் பட்டயங்களில் உள்ளது. "மாவலி வாணண் ஆட்சிப் பகுதியான வைகைக் கரைப் பகுதியில் முகுந்துப் பட்டம் பெற்றவர்கள்" என்று சான்றோர் சமூகத்தவர்கள் தம்மைக் குறிப்பிட்டுக் கொள்கின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்பூவணம் அருகிலுள்ள மடப்புறத்தில் முக்கந்தமார்களுக்கு மட்டுமே பாத்தியப்பட்ட பத்ர காளியம்மன் கோயில் உள்ளது. இக் கோயில் மருது சகோதர்கள் வரலாற்றில் இடம் பெற்ற கோயிலாகும். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியையடுத்து இராமநாதபுரம் மாவட்டத்தின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள ஓரியூர்ச்சீமையில் 18ஆம் நூற்றாண்டில் ஓரியூர், மங்கலக்குடி ஆரக்கோட்டைப் பகுதிகளில் பெருநிலக்கிழார்களான பிள்ளைமார், அம்பலக்காரர்களோடு நிலக்கிழார்-வணிகர்களாகச் சான்றார் குல முக்கந்தர்கள் இருந்தனர் என்பதைப் பொன்னெட்டிமாலைச் சக்கரைப் புலவர் பட்டயம் குறிப்பிடுகிறது. ('நாட்டார் பட்டயம்' - பா. சுப்பிரமணியன், சீ. இலட்சுமணன், ஆவணம் - இதழ் 2, ஏப்ரல் 1992, தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.)


சான்றோர் குலத்தின் மகமைப் பேட்டைகளின் தோற்றம் என்பது இந்தப் பின்னணியில் பார்க்கப்பட வேண்டியதாகும். கி.பி. 17ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர் ஆட்சியின் விளைவாகத் தமிழ் மூவேந்தர் ஆட்சியின் எச்சமாக ஊசலாடிக் கொண்டிருந்த பாண்டியர் ஆட்சியின் உயிரும் ஓய்ந்து போனதால் சான்றோர் சமூகத்தவர்கள் தமது அடையாளத்தை மீட்டெடுக்கின்ற முயற்சியாக முற்கால மடிகை மாநகரங்கள் போன்ற வணிகப் பேட்டைகள், வண்டிப் பேட்டைகள் அமைத்துப் பொதி மாட்டு வாணிகம் போன்ற சுதந்திரமான வணிக முயற்சிகளில் ஈடுபட்டுத் தம்மை நிலை நிறுத்திக் கொண்டனர். இக் காலகட்டத்தில் வணிகம் மட்டுமின்றி, தொழிற் சாதியினராகிய பட்டடையார் எனப்பட்ட ஈழவர் (நெசவுப் பட்டடையார்), விஸ்வகர்மாக்கள் முதலிய சமூகத்தவரை வைத்துத் தொழிற் கூடங்கள் அல்லது பட்டறைகள் அமைத்து முதலாளித்துவ சமூக அமைப்பை நோக்கி இச் சமூக அமைப்பு முன்னேறுவதற்கும் வழிகண்டனர். இப் பகுதிகளிலெல்லாம் பெரும்பாலான இஸ்லாமிய நெசவாளர்கள் ஈழவர் சமூகத்தவராகவே இருந்திருக்க வேண்டும். கி.பி. 17ஆம் நூற்றாண்டில் இவர்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறியிருக்கலாம்.

நன்றி-S.D. நெல்லை நெடுமாறன், அ. கணேசன்

No comments: