Friday 6 March 2015

பெருந்தலைவர் - பண்பாளர்

அது ரேசன் காலம், ஒரு சிற்றூரில் பொதுக்கூட்டம் ஏற்பாடாகி இருந்தது. அந்த ஊரில் உள்ள முக்கியப் புள்ளி ஒருவர் வீட்டுக்கு சென்றுவிட்டு, அவரது உபசரிப்பை காமராஜர் ஏற்றார். அதன் பிறகு, எட்டரை மணிக்கு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பெட்ரோமாக்ஸ் விளக்குதான் எரிந்தது; மைக் கூட கிடையாது. நல்ல இருட்டு, காமராஜர் பேச தொடங்கியதும், ஒரு மூலையில் இருந்து ஒரு குரல் எழுந்தது. பெரிய புள்ளியின் வீட்டு உபசரிப்பை காமராஜர் ஏற்றதற்கு கண்டனக் குரல் அது. "கருப்பு சந்தை ஒழிக" என்று அந்த குரல் ஒழித்தது. காமராஜர் பேச்சை நிறுத்தினார். கூட்டத்தின் மூலையில் இருந்த உருவத்தைப் பார்த்து "உனக்கு எவ்வளவு நாளா என்னைத் தெரியும்?" என்று கேட்டார். "முப்பது வருசமா" என்று பதில் வந்தது. " அப்புறம் என்னாண்ணேன்? உட்காரு" என்றார். காமராஜர் சொன்னபடி அந்த உருவமும் உட்கார்ந்தது. பிறகு காமராஜர் பேசினார். கூட்டம் முடிந்தது. கூட்டத்தில் குரலெழுப்பிய நபருக்கு காமராஜர் ஒரு பதிலும் சொல்லவில்லை.

சென்னை நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்த போது, காமராஜரை ஒருவர் கேட்டார் " நீங்கள் வந்து...". அதற்குள் பெருந்தலைவரே "கூட்டத்தில் சத்தம் போட்ட ஆளுக்கு பதில் சொல்லலேயே என்று கேட்கிறீங்களா? என கேட்டார். ஆமாம், அந்த ஆள் சத்தம் போட்டது நியாயம்தானே!" என்ற காமராஜ் விவரமாக சொன்னார்.

"அந்த ஆள் ஒரு தியாகி. சுதந்திரப் போராட்டத்தில் சிறைக்கு சென்றவர். எனக்கு 30 வருஷமாக தெரியும். நம்மை இந்த ஊரில் வரவேற்ற பெரிய புள்ளி, நெல்லை ஒழுங்கா ரேஷனுக்கு கொடுப்பதில்லை. அந்த ஆளுக்கும் இந்த தியாகிக்கும் ஆகாது. இந்த தியாகியை விலைக்கு வாங்க அந்தப் புள்ளியால் முடியவில்லை; முடியாது! இந்த தியாகி ஏதோ கடை வைத்துக்கொண்டு இருக்கிறார்.'அப்புறம் ஏன் அந்தப் பெரிய புள்ளியின் வரவேற்பை நாம ஏற்றுக்கொள்ளணும்னு' கேட்கிறீங்களா? நாம இங்கே வர்றோம்ணு இந்தத் தியாகிக்கு தெரிஞ்சா, கடன் வாங்கியாவது செலவு செய்வார். அப்போ அந்த பெரிய புள்ளியிகிட்ட போய்தான் கடன் வாங்குவார். இந்த தியாகி கடன்பட்டுத் தவிக்கிறதை நான் விரும்பலே! அதே நேரத்தில இவரோட தொண்டுக்கு நான் என்னைக்கும் மதிப்பு தர்றவன்! அது அந்த தியாகிக்கே தெரியும். இன்னும் மூனு நாள்ல, அங்கே நம்மை வந்து பார்பார், பாருங்க" என்று சொல்லி பேச்சை முடித்தார்.

காமராஜ் சொன்னபடியே மூன்றாவது நாள், காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு அந்த தியாகி வந்துவிட்டார். 

No comments: