Sunday 22 March 2015

பெருந்தலைவர் - கல்வித்தந்தை

அரசின் மொத்த வருவாய் குறைவாக இருந்தாலும், நாட்டின் நல்ல, பரந்த உள்ளம் படைத்த செல்வந்தர்களையும் கல்விப் பெருக்கத்திற்க்கு அழைத்துவர திட்டமிட்டு மாநிலம் முழுவதும் பள்ளி சீரமைப்பு மாநாடு நடந்த நேரமது. 

அப்படி நடந்த பரமக்குடி கல்வி மாநாட்டில், கல்வியின் பெருமையையும், நாட்டோர் அதை பெருக்குவதில் ஆர்வங்கொள்ள வேண்டிய அவசியத்தையும் அழகுத் தமிழில் எழுதி, அச்சடித்து விநியோகம் செய்திருந்தார் துணை ஆய்வாளர் திரு. கந்தசாமி அவர்கள். மாநாட்டின் போது தன்னிடம் தந்த ஒரு அச்சுப் பிரதியை படித்த காமராஜ், சட்டமன்ற உறுப்பினரைக் கூப்பிட்டு அதைப் பத்தாயிரம் படிவங்களெடுத்து தொகுதி பூராவும் விநியோகிக்கும்படி கூறினார்.

மாநாடு முடித்து புறப்படும் போது, " எங்கே அந்த கல்வி அதிகாரித் தம்பி, அவரை கூப்பிடுங்க" என்றார். விரைந்து ஜீப் அருகே வந்த கந்தசாமியை " வாங்க தம்பி, காருலே ஏறுங்க... உங்ககிட்ட சில விவரங்கள் கேட்கணும்" என்றார்.

ஏற்கனவே முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி வண்டியின் முன்னிருக்கையில் அமர்ந்துவிட, இவர் சற்றே யோசித்தார்.





" இங்கே ...என் பக்கத்தில் உட்காருங்க" என்றழைக்க, இவர் ஒரு கணம் மலைத்துவிட்டார். நாட்டின் முதல்வருடன் அமர ஜீப் வண்டி புறப்பட்டது. போகும் போதே அவ்வட்டாரத்தில் இவரது சரகத்தில் உள்ள் பள்ளிகளைப் பற்றியும் கிராமங்கள் காட்டும் ஆர்வத்தையும் பற்றி விசாரித்துக் கொண்டே வந்தார். அப்பொது காட்டாற்றின் தரைப் பாலத்தை வண்டி தாண்டிக் கொண்டிருந்தது.

உடனே காமராஜ் வண்டியை நிறுத்த சொல்லி " ஆமா... இந்தக் காட்டாற்றில் தண்ணி போகும் போது இந்தப் பக்கத்து மாணவர்கள் எப்படிப் பள்ளிக் கூடத்துக்கு வருவாங்க?" என்று கேட்க.

" மழைக் காலத்தைல் வெள்ளம் போகும் போது மாணவர்களால் வர முடியாதையா" என்றார். அப்போது காமராஜ் "கல்வித்துறை உத்தரவுப்படி 3 மைலுக்குள்ள் பள்ளிக்கூடம் இருந்தா, பக்கத்தில் வேற பள்ளிக் கூடத்துக்கு அனுமதி கிடையாது. அப்படித்தானே. அப்போ நீங்க ஒன்னு செய்யுங்க. இந்த காட்டாற்றைக் காரணமாகக் காட்டி இந்தப் பக்கத்தில் ஒரு பள்ளிக் கூடத்துக்கு அனுமதி கேளுங்க... நானும் சொல்லி அதற்கு ஒப்புதல் தரச்சொல்லிடறேன்" என்றார். 

கல்வி அதிகாரி திரு. கந்தசாமி ஆச்சர்யத்தால் உறைந்து போனார்.


ஏன்... நாங்களும் உறைந்துதான் போயிருக்கிறோம் ஐயா!! நின் புகழ் பரப்பிக் கொண்டே இருப்போம்....!!

No comments: