Saturday 21 March 2015

தமிழர் வாழ்வோடு கலந்த பறை

துக்க வீடுகளில் ஏன் பறை‬ அடிக்கப்படுகிறது?
துக்க வீடுகளில் பறை அடிப்பதன் அவசியம் என்ன?
சுமார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில் (பொதுவாக உலகில்) மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் மிகக் குறைவு தான். பேச்சு மூச்சில்லாமல் ஒருவர் சும்மா கிடந்தால் அவர் இறந்து விட்டார் என்ற முடிவுக்கு வ்ருவது மிகவும் சிரமமான காரியமாய் இருந்தது. இப்பிரச்சனையை போக்க சிலர் கண்டுபிடித்தது தான் பறை.

அப்படினா அதுக்கு மருத்துவ குணங்கள் இருக்கானெல்லாம் நீங்க கேட்கக் கூடாது. மேல படிங்க.
பறையோசை என சொல்லப்படும், பறையிலிருந்து வரும் ஓசைக்கு அசைவு கொடுக்காத மனிதர்களே கிடையாதாம். அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்டவுடன் நாடி, நரம்புகள் அனைத்தும் துள்ளி குதித்துக் கொண்டு ஒரு வித வைப்ரேஷனைக் கொடுக்குமாம்.
யார் ஒருவர் பறை சத்தத்திற்க்கும் ஆடாமல் அசையாமல் பிணம் போல் இருக்கிறாரோ, அவர் உயிர் இறந்து விட்டார் என்ற முடிவிற்க்கு வந்தார்களாம் நம் முன்னோர்கள். இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பபடும் ஓசைக்கு அப்பேர்பட்ட சக்தி இருக்கிறதாம்...


தமிழகத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் முக்கிய இசைக்கருவி பறை. அதன் மற்றொரு பெயர் தப்பு. இது தோல் இசைக்கருவி. எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று உறுதியாகத் தெரியவில்லை. கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனமாக இருந்து வந்துள்ளது. பறையடித்து தகவல் சொல்லுதல் பழங்காலத்தில் ஒரு முக்கிய தகவல் பரப்பு முறையாகவும்,பறையர்குடியின் குறயீடாகவும், தொழிலாகவும் அமைந்தது. பண்டைய காலத்தில் வாழ்ந்த தொல்குடித் தமிழர்களின் நிலவியல் பாகுபாட்டின் அடிப்படையிலும் 'பறை' பயன்படுத்தப்பட்ட வரலாறு உண்டு. குறிஞ்சிப்பறை, முல்லைப்பறை, மருதப்பறை, நெய்தற்பறை, பாலைப்பறை எனஐந்திணைகளிலும் பறை முழக்கிய செய்திகள் காணக் கிடைக்கின்றன. 'பறை' என்ற சொல்லே இசைக் கருவியையும், செய்தி அறிவிக்கும் முறையையும் குறித்தது எனத் தொல்காப்பியம்கூறுகிறது. ஆனால் தற்போதும் நாட்டுப்புற இசையில் இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தோற்கருவிகளின் பொதுப் பெயராகப் பறை என்பது வழங்கபட்டுள்ளது. பறை என்ற சொல்லுக்குக் கூறு, சொல் என்ற பொருள்களில் இருக்கின்றன. மலையாளத்தில் பறைதல் என்பது சொல்லுதல் என்ற பொருளில் வழங்கி வருவதை இன்றும காணலாம். தீட்டைப்பறை, தொண்டகச் சிறு பறை, தொண்டகப்பறை, அரிப்பறை, மன்றோல் சிறுபறை, மென்பறை, இன்னிசைப்பறை, பொருநர்பறை, ஆடுகளப்பறை எனப் பல பெயர்களில் சங்க இலக்கியங்களில் பறை குறிப்பிட்டப்பட்டுள்ளது.
இவற்றினை மாற்றி மாற்றி அடிப்பதன் மூலம் புதிய மெட்டுக்கள், சொற்கட்டுக்கள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் தனித்தனி அடியென வைத்திருக்கின்றார்கள். சப்பரத்தடி, டப்பா அடி, பாடல் அடி, சினிமா அடி, ஜாய்ண்ட் அடி, மருள் அடி, சாமி சாட்டுதல், மாரடித்தல், வாழ்த்து அடி என ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ப தாளங்கள் மாறுகின்றன. எனினும் இசைக்கப்படும் இசைக்கருவி ஒன்றுதான்.

தப்பு கருவி மரக்கட்டையால் செய்யப்பட்ட வட்டவடிவமான சட்டகத்தில் புளியங்கொட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட பசையினைக் கொண்டு பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தோலை இழுத்து ஒட்டி ஆக்கப்பட்டது. பறையில் மூன்று அடிப்படை பாகங்கள் உள்ளன. வட்டச் சட்டம், மாட்டுத் தோல், சட்டத்தின் உட்புறத்தில் பொருத்தப்படும் உலோகத் தட்டு ஆகியன. 35 செ.மீ. விட்டம் கொண்ட வட்டச்சட்டத்தில் தோல் இழுத்துக் கட்டப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும். சட்டம் பொதுவாக வேப்பமரத்தில் செய்யப்பட்டிருக்கும்.

தப்பு கருவியினை இசைக்க இருவிதமான குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றது. இடது கையில் வைத்திருக்கும் குச்சி 'சிம்புக்குச்சி' அல்லது சுண்டுகுச்சி எனப்படும். இது மூங்கிலால் செய்யப்பட்டிருக்கும், இக்குச்சியானது ஒன்றே கால் அடி நீளமும் ஒரு செ.மீ. அகலமும் கொண்டது. வலது கையில் வைத்திருக்கும் குச்சிக்கு அடிக்குச்சி அல்லது உருட்டுக்குச்சி என்று பெயர். இது பூவரசங்கம்பில் செதுக்கப்பட்டிருக்கும். இந்தக் குச்சி அரை அடி நீளமும், மூன்று செ.மீ சுற்றளவும் கொண்டதாக இருக்கும் இவற்றை அடித்து ஓசை எழுப்பப்படும். சிம்புக்குச்சி நீண்ட தட்டையானதாகவும் அடிகுச்சி குட்டையாக பருத்ததாகவும் அமைந்திருக்கும். கட்டைவிரல், மற்ற விரல்களுக்கு இடையில் குட்டைக்குச்சியை பிடித்துக் கொண்டு கீழ்ப்புறத்தில் இருந்து அடிப்பர். இடதுகையின் கட்டைவிரல், ஆட்காட்டி விரல்களில் நீண்ட குச்சியை பிடித்துக் கொண்டு மேல் பகுதியில் இருந்து அடிப்பர். அடிகுச்சியால் தப்பின் மத்தியில் அடிப்பது ஒரு வகை அடி. தப்பினைப் பிடித்துள்ள இடதுகையில் வைத்துள்ள சிம்புகுச்சியால் அடிப்பது இரண்டாவது வகை அடி. இவைதான் அடிப்படை அடிகளாகும்.
குச்சிகளால் அடித்து ஒலியெழுப்பி இசைக்கப்படும் கருவி இது. வலது கையில் வைத்திருக்கும் குட்டைக் குச்சியால் பறையின் மத்தியில் அடிப்பது ஒரு வகை அடி. பறையைப் பிடித்துள்ள இடது கையில் வைத்துள்ள நீண்ட குச்சியால் அடிப்பது இரண்டாவது வகை அடி. இரண்டு குச்சிகளாலும் அடுத்தடுத்து அடிப்பது மூன்றாவது வகை அடி. இவைதான் அடிப்படை அடிகள். இவற்றை மாற்றி மாற்றி அடித்து புதிய மெட்டுகள், சொற்கட்டுகள் உருவாக்கப்படுகின்றன.

தமிழகத்தின் பண்டைய இசைக்கருவிகள் சொற்கட்டு எனப்படும் மெட்டுக்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்தச் சொற்கட்டுகள் பல்வேறு வகைகளில் பெற்ற அனுபவம், முன்மாதிரிகளால் உருவானவை. பறை என்பது 'பேசு' அல்லது 'சொல்' என்ற பொருள் தரும். வாய்மொழி மரபை அடிப்படையாகக் கொண்ட தமிழகப் பண்பாட்டில், பறையடிப்பது தொடர்பான மெட்டுகள் எழுதி வைக்கப்படவில்லை. பறை இசைப்பவர்களின் கூர்ந்த கவனிப்பு, போலச் செய்தல், பயிற்சி, இசையின் மீதுள்ள ஈர்ப்பு காரணமாக சொற்கட்டுகள் உருவாக்கப்படுகின்றன.
  • டன்டனக்கு டனக்குனக்கு
  • டன் டன் டன் டன்டனக்கு
  • ரக்கட்ட ரக்கட்ட ரக்கட்ட
  • ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
என்ற வகையில் பறை இசைப்பதற்கான சொற்கட்டுகள் அமைகின்றன. சொற்கட்டுகள் அடிப்படை அடிகளைத்தான் சுட்டுகின்றனவே தவிர மொத்த மெட்டையும் சுட்டுவதில்லை. அதேநேரம் ஒரு அடிப்படை சொற்கட்டைக் கொண்டு, இசைப்பவர் தனது கற்பனைக்கு ஏற்ப புதிய இசைக்கோலங்களை உருவாக்கலாம்.

பறையானது மாட்டுத்தோலில் செய்யப்படுவதால் இசைக்க ஆரம்பிக்கும் முன் பறையடிப்பவர்கள் பறையைத் தீயில் காட்டுவார்கள். அது தோலில் உள்ள ஈரப்பதத்தை அகற்றி, தோலை இறுகச் செய்யும். தோல் உறுதியாகி, அடிக்கும்போது உயர் சுருதியில் நல்ல ஓசையை எழுப்பும்.

பறையோடு இணைக்கப்பட்ட தோலை இடதுப்பக்க கைக்குள் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டும். பிடிக்க எளிதாக இருப்பதால் பறையை கையில் வைத்துக் கொண்டு நிற்கலாம், நடக்கலாம், நடனமும் ஆடலாம். அதிலிருந்துதான்பறையாட்டம் பிறந்தது. பறை இசையில் பல வகை அடிகள் உண்டு. இவ்வாறு அடித்தலால் ஏற்படும் பறை இசைக்கேற்ப நேர்நின்று, எதிர்நின்று, வளைந்து நின்று ஆடுதல், அடிவகைகளை மாற்றுதல் என ஆடும் கலை பறையாட்டம் எனப்படுகிறது.

பறையின் இசையும், வடிவமும் நுணுக்கமாக வேறுபடுகிறது. அவற்றில் முக்கியமானவை வருமாறு;-
  • அரிப்பறை - அரித்தெழும் ஓசையையுடைய பறை.
அரிப்பறை மேகலை யாகி யார்த்தவே (சீவக சிந்தாமணி. 2688).
  • ஆறெறிப் பறை - வழிப்பறி செய்வோர் கொட்டும் பறை.
ஆறெறிபறையுஞ் சூறைச் சின்னமும் (சிலப்பதிகாரம். 12, 40).
  • உவகைப்பறை - மகிழ்ச்சியைக்குறிக்கும் பறை. (திவாகர நிகண்டு)
  • சாப்பறை - சாவில் அடிக்கப்படும் பறை. (திவாகர நிகண்டு)
  • சாக்காட்டுப் பறை - இறுதிச் சடங்கின் போது இசைக்கும் பறை.
  • வெட்டியான்பறை - சில விசேடகாலங்களிற் கொட்டும் பறை.
  • நெய்தற்பறை - நெய்தல் நிலத்துக்குரிய பறை.திருக்குறள்-1115
  • பம்பை - நெய்தனிலங்கட்குரிய பறை. (திவாகர நிகண்டு).
தழங்குரற் பம்பையிற் சாற்றி (சீவக சிந்தாமணி.40).
  • மீன்கோட்பறை - நெய்தனிலப் பறை. (இறை. 1, பக். 17.)
  • மருதநிலப்பறை - மருதநிலத்திற்குரிய பறை.
  • கல்லவடம் - ஒரு வகைப்பறை
நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்
பலரு மிட்ட கல்ல வடங்கள் பரந்தெங்குங் கலவ மஞ்ஞை காரென் றெண்ணிக் களித்துவந் தலம ராரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
கல்லவடமிட்டுத் திசைதொழு தாடியும் (தேவாரம். 576, 6).
  • குரவைப்பறை - குறிஞ்சிநிலத்துக்குரியது. குறிஞ்சிப்பறை = குறிஞ்சிநிலத்துக்குரிய தொண்டகப் பறை.
  • தடறு - தொண்டகப் பறை. (அக. நி.)
  • குறும்பறை - குறும்பறை யசைஇ (புறநானூறு. 67, 9)
  • கொடுகொட்டி - ஒரு வகைப்பறை
கொடுகொட்டி யாடலும் (சிலப்பதிகாரம். 6, 43), குடமுழவங் கொடு கொட்டி குழலு மோங்க (தேவாரம். 225, 2).
  • கோட்பறை - செய்திகளை நகரத் தார்க்குத் தெரிவிக்கும் பறை.
  • தமுக்கு - செய்தி தெரிவிக்க முழக்கும் ஒருகட் பறை.
  • நிசாளம் - ஒருகட் பறை. நிசாளந் துடுமை (சிலப். 3, 27, உரை).
  • சூசிகம் - ஒருவகைப் பறை. தகுதியெனக் கூறும் நெறி.
  • தக்கை - அகப்புறமுழவு மூன்றனுள் ஒன்றாகிய ஒருவகைப் பறை. (பிங்கல நிகண்டு); (சிலப்பதிகாரம். 3, 26, உரை.)
  • தடாரி - பம்பையென்னும் பறை. (பிங்கல நிகண்டு)
  • பறைத்தப்பட்டை, தண்ணம், தம்பட்டம், திடும், திண்டிமம், நாவாய்ப்பறை, திமிலை (சிலப்பதிகாரம். 3, 27, உரை)
  • தலைப்பறை - யானை முதலியவற்றின் முன்னே கொட்டும் பறை.
  • படலை - வாயகன்ற பறை. (சூடாமணி நிகண்டு)
  • பண்டாரமேளம் - அரச விளம்பரங் குறிக்கும் பறை.
  • பன்றிப்பறை - காட்டுப்பன்றிகளை வெருட்டக் கொட்டும் பறை. (பிங்கல நிகண்டு)
  • முரசம், வெருப்பறை - போர்ப் பறைகள்.
முரச மிடைப்புலத் திரங்க வாரமர் மயங்கிய ஞாட்பில் (புறநானூறு. 288).
  • பூசற்றண்ணுமை - பகைவருடன் போர்புரிதற்காக, வீரரை அழைத்தற்குக் கொட்டும் பறை. (நன்னூல்)
  • முருகியம் - குறிஞ்சிநிலத்தில் முருகனுக்குரிய வெறியாட்டுப் பறை. (தொல்காப்பியம். பொ. 18, உரை.)
  • வெறியாட்டுப்பறை - குறிஞ்சிநிலப் பறை.
  • வீராணம் - ஒருவகைப் பெரிய பறை.
வீராணம் வெற்றிமுரசு (திருப்புகழ். 264).
  • பஞ்சமாசத்தம் - சேகண்டி கைத்தாளம் காளம் என்றும் தத்தளி மத்தளி கரடிகை தாளம் காகளம் என்றும் இருவிதமாகச் சொல்லும் ஐவகைப் பறை.


சங்க காலம், சோழ, பாண்டிய அரசர்கள் காலத்தில் பறை இசைக்கப்பட்டது தொடர்பான குறிப்புகள் உள்ளன. அரசர்களது அறிவிப்புகளை மக்களுக்கு முரசு அறைந்து அல்லது பறையடித்துச் சொல்வது மரபு.
  • ஒரு மன்னன் எதிர்நாட்டுக்கு சென்று போர் புரியும் முன் அங்குள்ள போர் புரியவியலாத மக்களை வெளியேர வேண்ட,
  • பெருகிவரும் புனலை அடைக்க,
  • உழவர் மக்களை அழைக்க,
  • போர்க்கெழுமாறு வீரர்களை அணிதிரட்ட,
  • வெற்றி தோல்வியை அறிவிக்க,
  • வயல்களில் உழவு வேலை செய்வோருக்கு ஊக்கமளிக்க,
  • விதைக்க,
  • அறுவடை செய்ய,
  • காடுகளில் விலங்குகளை விரட்ட,
  • மன்னரின் செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க,
  • இயற்கை வழிபாட்டில்,
  • கூத்துகளில்,
  • விழாக்களில்,
  • இறப்பில்
எனப் பல்வேறு வாழ்வியல் கூறுகளுடன் 'பறை' இணைந்து இயங்கியுள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன. தற்காலத்தில் பறை தலித் மக்களின் இசைக்கருவியாக உள்ளது. பறையர்கள் மற்றும் ஆந்திராவிலிருந்து நீண்ட காலத்துக்கு முன் குடியேறிய அருந்ததியர்கள் என்ற இரு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இவ்விசைக்கருவியை இசைக்கிறார்கள். அருந்ததியர்கள் இதை தப்பு என்றழைக்கிறார்கள்.

நன்றி: கலையரசி
                தினகரன் செய்தித் தாள்

No comments: