Saturday 14 March 2015

சான்றோர் சமூகம் - வணிகம் - ஒரு ஆய்வு - பகுதி - 1

சான்றோர் சமூகத்தவருள் சில பிரிவினர் முழு அளவில் வாணிகத்தினை மேற்கொள்ளத் தொடங்கியது எந்த நூற்றாண்டில் என ஆராயும்போது, கி.பி. 11-12ஆம் நூற்றாண்டுகளிலிருந்தே இந்தப் போக்குக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. வணிகக் குழுக்களுக்குப் பாதுகாப்புப் படையினராகச் செயல்பட்ட வலங்கை உய்யக்கொண்டார் பிரிவுப் போர் வீரர்கள் மற்றும் முன்னூற்றுவர், எழுநூற்றுவர் என்று எண்ணிக்கை அடிப்படையில் பெயர் பெற்றிருந்த படைப்பிரிவினர் பற்றிக் கி.பி. 11ஆம் நூற்றாண்டிலிருந்தே கல்வெட்டுக் குறிப்புகள் கிடைக்கின்றன.


 கி.பி. 13ஆம் நூற்றாண்டில் சோழராட்சி முழுமையாக வீழ்ச்சியடைந்து பாண்டியர் ஆட்சி, கர்நாடக ஹொய்சளர் மேலாதிக்கம் ஆகியவை ஏற்பட்ட போது, மேற்குறித்த படைப்பிரிவினருள் பலர் தமது வணிகத் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டு தாமே வாணிகத்தில் இறங்கியிருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. எடுத்துக்காட்டாகத் திருச்செந்தூர் அருகிலுள்ள அங்கமங்கலம் என்ற ஊர் அங்கைப் போர் எனப்படும் வர்மக் கலையும் களரிப் பயிற்சியும் கலந்த மிக உயரிய போர்க்கலையில் தேர்ச்சி பெற்ற அங்கக் காரர்கள் எனப்பட்ட சான்றோர் சமுக போர் வீரர்களுக்காக வழங்கப்பட்ட மானிய கிராமமாகும் (சதுர்வேதி மங்கலம் என்ற தொடர் பிராம்மணர்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட ஊர்களைக் குறித்தது போல, அங்கை மங்கலம் என்பது அங்கக்காரர்களுக்கு வழங்கப்பட்ட மானிய கிராமமாகும்).




 இவ்வூர் "அங்கைமங்கலமான வீரபாண்டியன் மடிகை மாநகரம்" எனக் கி.பி. 13ஆம் நூற்றாண்டையப் பாண்டிய மன்னர்கள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. மடிகை என்ற சொல் மளிகைப் பொருள்களைக் குறிக்கும். நகரம் என்ற சொல் வணிக முதன்மையுடைய ஊரைக் குறிக்கும் (நகரத்தார் என வணிகர்கள் அழைக்கப்படுவதை நினைவு கூர்க). அங்கமங்கலம் என்ற இவ்வூரில் புன்செய்ப் பயிர்களான நவதானியங்கள், புளி, கடற்கரையில் காய்ச்சப்பட்ட உப்பு, கருப்புக்கட்டி, வெற்றிலை போன்ற பல்வேறு பொருள்கள் சேமித்து வைக்கப்படும் காவலோடு கூடிய கிடங்குகள் இருந்தன என்பதை மடிகை மாநகரம் என்ற சொல்லாட்சியின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம் (Angamangalam - Its historical perspective, S. Ramachandran, Studies in Indian Place Names Vol XVI, Published by the Place Names Society of India, Mysore, 1996).


 இவற்றுள் உப்பு குறித்த வரலாற்றுச் செய்தி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியதாகும். "உப்புக் கோச் செய்கை" என்ற தொடர் கல்வெட்டுகளில் இடம் பெறுவது வழக்கம். உப்பு என்பது முதன்மையான ஒரு பண்டமாகக் கருதப்பட்டதால் உப்பளத் தொழில் என்பது அரசரின் நேரடிக் கண்காணிப்பில் நிகழ்ந்த ஒரு தொழிலாக இருந்தது. எனவே, வீரபாண்டியன் மடிகை மாநகரத்தில் இருந்த வீரர்கள்/வணிகர்கள் பாண்டிய அரச குலத்துடன் ரத்த சம்மந்தமுடையவர்களே எனத் தெரிகிறது. (இப் பகுதியில் உப்பளத் தொழிலில் ஈடுபட்ட தொழிற் சாதியினர் பண்ணையார் என்றும் சித்திரவில்லி என்றும் அழைக்கப்பட்டனர்). அங்கை மங்கலத்தை ஒட்டி மூக்குப்பீறி என்று அழைக்கப்படும் ஓர் ஊர் உள்ளது. சடையவர்மன் சுந்தர பாண்டியனின் மனைவியர் பலருள் ஒரு பெண்மணியின் பெயர் தேசி முக்ய நாச்சியார் என்பதாகும்.





 இது தேசி முக்க நாச்சியார் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசி முக்யர் அல்லது தேஷ்முக் என்ற பட்டப்பெயர் வணிக சமூகத்தவருக்கு உரியதாகும். தேசி முக்ய நாச்சியார் பேரேரி என்பதே மூக்குப்பீறி என்று திரிந்திருக்க வேண்டும். இதே போல், கச்சி நாச்சியார் என்ற அரசியின் பெயர்த் தொடர்பில் கச்சி நாச்சியார் விளை என்ற ஊர் (தற்போது கச்சினா விளை) இவ்வூரை அடுத்துள்ளது. மேற்குறித்த மடிகைப் பொருள்களில் ஏற்றுமதிக்குரிய பணப்பயிரான பருத்தி இடம் பெற்றிருந்ததா என்பது நமக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், இம்மாவட்டத்தின் பிற பகுதிகளிலுள்ள கல்வெட்டுகளில் கரிசல் நிலம் எனப் பொருள்படும் கருஞ்செய் நிலம் என்ற குறிப்பும், பஞ்சு பீலி என்ற வரி இனமும் குறிப்பிடப்படுவதிலிருந்து பருத்தி முக்கியமான ஒரு விளை பொருளாகவும், வணிகப் பொருளாகவும் இருந்துள்ளது எனத் தெரிகிறது. பஞ்சு பீலி என்ற தொடர்தான் Cotton Bale என ஐரோப்பியர்களால் வழங்கப்பட்டது.



 இந்த இடத்தில் நாம் விவாதிக்கின்ற தலைப்புப் பொருளிலிருந்து சற்று விலகி ஒரு குறளுக்கான பொழிப்புரை கூறும் முயற்சியில் இறங்குவது தவறாகாது என நினைக்கிறோம். "பீலி பெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்" என்று திருக்குறளில் குறிப்பிடப்படும் பீலி பஞ்சு பீலி என்று பொருள் கொள்வதே பொருத்தமாகும் எனக் கருதுகிறோம். மயிற் பீலி (துகிம்) என்பதும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது என்றாலும், வண்டி வண்டியாகச் சுமையேற்றிச் சென்று விற்கக் கூடிய எடை குறைந்த பொருள் பஞ்சு பீலியாகவே இருக்க முடியும். 

நன்றி-S.D. நெல்லை நெடுமாறன், அ. கணேசன்

No comments: