Saturday 26 September 2015

சான்றோர் போராளிகள்....

சுதந்திர போராட்டத்தில் தூக்கு மேடை வரை சென்ற குலசேகரபட்டிணம் இராஜகோபால் நாடார், காசிராஜன் நாடார்,

மொழிப் போராட்டத்தில் உயிர் நீத்த தாளமுத்து நாடார்,

தெற்கு எல்லைப் போராட்டத்தில் மார்ஷல் நேசமணி, குஞ்சன் நாடார், தாணுலிங்க நாடார,்பொன்னப்ப நாடார்,சிதம்பர நாதன் நாடார், வில்லியம் நாடார்,

வடக்கு எல்லை போராட்டத்தில் ம.பொ.சி போன்றோர்,

பிராமணிய எதிர்ப்பு, சாதி பாகுபாட்டு ஒழிப்பில் பட்டிவீரன்பட்டி சௌந்திர பாண்டியன் நாடார்,

தமிழ்நாடு பெயர் வைக்க உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்த சங்கரலிங்க நாடார்

என தமிழுக்காகவும், தமிழகத்திறகாகவும் பாடுபட்ட அனைவரும் சான்றோர் சமூகமாயிருக்க....
வரலாற்றிலும், அரசியலிலும் மட்டும் எப்படி திராவிட அரசியல்??

உண்மையான சரித்திரம் அறிவோம் சான்றோர் குல மக்களே...

கதை அல்ல உண்மையான வீரம் பொதிந்தது சான்றோர் சமூக வரலாறு....

அரிவாள், வேல் கம்பின் அவசியமில்லாமலேயே சாத்வீகமாக உண்மையான வீரம் காட்டியவர்கள் நம் முன்னோர்கள்!

வாழ்க சான்றோர் குலம்...

Sunday 20 September 2015

தங்க மீன்கள்... படத்தின் கரு சரியா.....???


சில நாட்களாகவே கடும் பிரச்சினைகளுக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகி இருந்த சூழ்நிலையில், நேற்றைக்கு முதல் நாள் தொலைக்காட்சியில் தங்க மீன்கள் படத்தை நிதானமாக பார்க்கும் வாய்ப்பு கிட்டியது!

கவர்ச்சி சமாச்சாரங்கள் இல்லாத திரைக்கதை, சராசரியான படங்களில் வருவதைப் போல கதாநாயகன், கதாநாயகி, வில்லன் போன்ற சாமாச்சாரங்கள் கிடையாது. முக்கியமாக வன்முறை கிடையாது. விரசமான நகைச்சுவைகள் கிடையாது. மெல்லிய இழையோடும் திரைக்கதை என பல பாராட்டும்படியான் அம்சங்கள். மெல்லிய திரைக்கதை இழையாடும் திரைப்படங்களில் கூட டூயட் உண்டு. ஆனால் இந்த படத்தில் அதுவும் இல்லை! இயக்குனர் ராம், ஷெல்லி நாபு குமார், பத்மபிரியா, குழந்தை சாதனா என அனைவரின் நடிப்புமே பிரமாதம். இயக்குனர் மற்றும் அனைத்து தொழில்நுட்ப வல்லுனர்களுமே (ஒளிப்பதிவு உட்பட) பாராட்டுகுறியவர்களே. திரைக்கதையும் காட்சிப்படுத்துதலும் மிகவும் சிறப்பு.

 ஆனால் படத்தின் கதை மிகவும் சர்ச்சைக்குறியது. தந்தை என்பவரே ஒரு குடும்பத்தில் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டியவர். அதற்கு ஒரு தந்தை செய்யும் தியாகம் அளப்பறியாதது. அதுதான் பாசத்தையே தியாகம் செய்வது! பிள்ளைகள் மீது அளவு கடந்த பாசம் இருந்தாலும் கண்டிப்பை காட்ட வேண்டிய தருனங்களில் பாசத்தை முழுமையாக மறைத்து கடுமை காட்டுவது ஒரு தந்தையின் கடமையாகும். என் தந்தை இதை எனக்கு செய்த பொழுது எனக்கு அவர் மீது அந்த விநாடி தருனங்களில் அவர் மீது வெறுப்பு உண்டானாலும் அந்த வயதில் அது உடனே மறைந்து விடும்.

 ஆனால் கல்லூரி காலங்களிலும், திருமணத்திற்கு முன்னரும் அவர் நம் மீது காட்டும் கண்டிப்பு நமக்கு அவர் மீது அளவு கடந்த வெறுப்பை உண்டாக்குவதும் உண்டு. திருமணம் செய்து பிள்ளை பெறும் ஒவ்வொரு மகனும், தன் பிள்ளைகளின் அந்தந்த பருவத்தில் அவன் தந்தையின் நிலையை உணர்வான். அவன் பிள்ளைகள் வளரும் அந்த நேரத்தில் அவனுக்கு தன் தந்தை மீது மிகுந்த கரிசனமும், அவர் கண்டிப்புக்குள் இருந்த பாசமும் புரியும்! பெரும்பாலான தந்தைகள் தாங்கள் செய்த தவறை தங்கள் பிள்ளைகள் செய்து விடக்கூடாது என்பதில் அதிக கவணமாய் இருப்பர். ஆனால் பிள்ளைகளுக்கு இது தெரியும் பொழுது, அவர் செய்யாததையா நாம் செய்து விட்டோம் என்ற எண்ணம் ஏற்படும்.

 பிள்ளைகளுக்கு தன் சம்பாத்தியத்தையும் தன் வாங்கும் சக்தியையும் உணர்த்தி, குடும்பத்தின் கஷ்டத்தையோ அல்லது சூழ்நிலையையோ புரிய வைப்பதும் தந்தையின் கடமையே. அதை மென்மையாக உணர வைக்க வேண்டியது தாயின் கடமை. பிள்ளைகளுக்குள் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி குடுக்கும் அதே பெற்றோர்தான் பிள்ளைகளிடம் சில விஷயங்களை மறுத்தும் பழக்க வேண்டும். உலகத்தில் இல்லை, கிடையாது போன்ற விசயங்கள் இருக்கின்றன, தோல்வி என்ற ஒன்று இருக்கின்றது அதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதை பிள்ளைகளை உணர வைக்க வேண்டும் என்பதும் பெற்றோரின் கடமையாகும்.

 ஆனால் இந்த படத்தில் பொறுப்பற்ற ஒரு தந்தையையும் அவரால் கெடுத்து குட்டிச்சுவராக்கப்படும் குழந்தையையும் நியாயப் படுத்த முயற்சித்துள்ளனர். தனது வருமானத்திற்கு வழி பார்க்காமல் தந்தையிடம் இருந்து கோபித்துக் கொண்டு தனியாக (குடும்பத்தை மட்டும் தந்தையின் பொறுப்பில் விட்டு விட்டு) கிளம்பும் ஒரு வாலிபரின் மற்றும் அவரின் மகளின் கதை. தன்னை அவமானப்படுத்தும் நன்பனை சகித்துக்கொண்டு அவரிடம் கைமாற்று கேட்கும் கதாநாயகனால் தந்தையிடம் மட்டும் அதிகம் ஈகோ பார்க்க முடிகிறது. இரண்டாயிரம் ரூபாய் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத தந்தை மகளுக்கு இருபத்தி மூன்றாயிரம் ரூபாய்க்கு நாய்க்குட்டி வாங்கி தர முயல்வது அதை விட கொடுமை. கதாநாயகனின் இயலாமையை நியாப்படுத்தி அதன் மூலம் படம் பார்ப்பவர்களிடம் கருனை எதிர்பார்க்கிறார். பிள்ளையின் எதிர்காலத்திற்கு பணம் சேர்க்க வேண்டிய கடமை உள்ள தந்தை, பிள்ளையின் எதிர்காலத்திற்கு கல்வி குடுக்க வேண்டிய தந்தை இரண்டாயிரம் ரூபாய் கூட கைமாற்றும் வாங்கும் நிலையில் இருபத்தி மூவாயிரம் ரூபாய்க்கு நாய்க்குட்டி வாங்க முயற்சிப்பதை கொடுமை என்று தலையில்தான் அடித்துக் கொள்ள முடியும்!!

   அதே போல் தனது மகள் தனக்கு கிடைகாத பொருட்களை தனது உடன் படிக்கும் நன்பர்களிடம் இருந்து களவாடுவதை நியாயப்படுத்த முயற்ச்சிப்பது கொடுமையிலும் கொடுமை. அதற்கு மகள் சொல்லும் காரணம் "இதெல்லாம் காஸ்ட்லியான பொருளா... எங்க அப்பாவால வாங்க முடியாதா... அதனால நான் திருடிட்டேன்"! இப்படி எல்லா பிள்ளைகளும் கிளம்பி விட்டாள் ஊரு தாங்குமா? இல்லை நாடுதான் தாங்குமா? தனது மகளுக்கு சுத்தமாக படிப்பு வரவில்லை என்பதால் கண்டிக்கும் ஆசிரியைகளிடம் கோபிக்கும் அந்த இளைஞன் தனது மகளின் வேறு திறமைகளை வெளிக்கொணர முயற்சிக்கவும் இல்லை! இந்த படம் கண்டிப்பாக போற்றப்பட வேண்டிய படம் இல்லை. நம் பிள்ளைகள் இதை பார்த்து மாற்று மன நிலைக்கு வந்து கெட்டுபோகத்தான் வாய்ப்பு அதிகம்!

எனக்கும் என் பிள்ளைகளை அடித்து விட்டு அலுவலகம் வந்த பின் மனம் மிகவும் படாதபாடு படத்தான் செய்யும். ஆனால் தப்பு செய்யும் பிள்ளைகளை சரியான நேரத்தில் தண்டிப்பதும் கண்டிப்பதும் த்ந்தையின் கடமை என்பது எம்மை நிலைக்கு கொண்டு வரும், படிக்கவில்லை என்று என் பிள்ளைகளை நான் கண்டித்ததில்லை. ஆனால் தீய பழக்கவழக்கங்களை எப்பொழுதும் ஏற்றுக் கொண்டதில்லை. இந்தப் படம் இது ஒரு பொறுப்பற்ற ஊதாரி தகப்பனால் கெட்டு குட்டி சுவராகும் பிள்ளையின் கதை என்று வேண்டுமானால் கூறலாம். வித்தியாசமான கதை, நேர்த்தியான படப்பிடிப்பு, ஒளிப்பதிவு போன்ற அம்சங்களுக்காக பாராட்டலாமே ஒழிய நல்ல படம் என்று பாராட்டவே முடியாது. மண்ணிக்கவும் இயக்குனர் ராம் அவர்களே.....

Wednesday 16 September 2015

சான்றோர்களும்... உழைப்பும்....

பல சரக்கு கடை தொழிலில் அதிகம் சான்றோர் மக்கள் இருப்பதன் ரகசியம் என்ன? காலை நான்கு மணிக்கு ஆரம்பித்து இரவு பண்ணிரண்டு மணி வரை வாரத்தில் ஏழு நாட்களும் உழைக்கும் பெருமை பெற்ற சமூகம் சான்றோர் சமூகம் மட்டுமே! வி.ஜி.பி, வசந்த்&கோ, சரவனா ஸ்டோர் என பலரி்ன் தொழில் ரகசியம் உண்மையான  உழைப்பே!

உண்மை, உழைப்பு, உயர்வு இதுவே சான்றோர்களின் தாரக மந்திரம். உழைப்பை மட்டும் நம்புபவர்கள் அல்ல சான்றோர்கள், உழைப்பவர்களையும் மட்டுமே நம்புபவர்கள் சான்றோர்கள். முன்பெல்லாம் விருதுநகர் கடைவீதிகளில் தங்கள் கடைகளில் தங்கள் பிள்ளைகளை நேரடியாக முதலாளி ஸ்தானத்தில் உட்கார வைக்க மாட்டார்கள்! பிறர் கடைகளுக்கு ஒரு வருடமோ இரண்டு வருடமோ தங்கள் பிள்ளைகளை பிறர் கடைக்கு தொழில் பழக அனுப்பி வைப்பார்கள். அதன் பின்னர் தங்கள் கடைகளிலும் நேரடியாக கல்லாவில் உட்கார வைக்கமாட்டார்கள். பெட்டி தூக்குவது, மூடைகளை அடுக்குவது, லைணுக்கு போவது (வெளியூர் வசூல்),  திட்டம் பார்ப்பது (கணக்கு பார்ப்பது) என வரிசைப்படி பொறுப்புக்கள் ஒப்படைத்து சரி பார்க்கப்பட்ட பின்னரே சொந்த பிள்ளைகளையே கல்லாவின் அருகில் அனுமதிபபர்! இரு நாள் பள்ளி விடுமுறை என்றால் ஒரு நாள் கண்டிப்பாக கடைக்கு வேலைக்கு வந்தாக வேண்டும்.

சான்றோர் பெரு மக்கள் நான் முன்பு சொன்னது போல் உழைப்பை மட்டுமல்ல உழைப்பவர்களையும் மட்டுமே நம்புபவரகள். உழைக்காமல் ஊதாரித்தனமாக சுற்றுவது அண்ணனோ, தம்பியோ, தகப்பனோ இல்லை பெற்ற மகனாகவே இருந்தாலும் உழைக்காமல் ஊதாரித்தனமாக சுற்றுபவர்கள் சொந்தங்களால் நிராகரிக்கப்படுவார்கள். இது இன்று வரை நிலவுகிறது! நாடார் கடைவீதிகளில் மிக சாதாரனமாக 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கடைகளுக்கு வருவதை இன்றும் பார்க்கலாம். வீட்டில் அவர்களால் சும்மா உட்கார முடியாதென்பர்! கடை வீதிகளில் மட்டுமல்ல மிதி வணடிகளில், தள்ளு வண்டியில் வியாபாரம் செய்த சான்றோர் பெருமக்கள் தங்கள் பிள்ளைகள் நல்ல நிலைக்கு வந்த பின்னரும் தங்கள் தொழிலை தொடருவதை இன்றும் காணலாம். பணம் பொருட்டல்ல உழைக்காமல் உண்பதை விரும்பாத சமூகம் சான்றோர் சமூகம். தன் சமூகத்தவர் என்றில்லை உழைப்பை நம்பும் எந்த சமூகத்தவர்க்கும் தங்கள் நிறுவணங்களில் பொறுப்பை குடுத்து அழகு பார்க்கும் சமூகம் சான்றோர் சமூகம் மட்டுமே!

உண்மையான உழைப்னை நம்பி கெட்டவர்கள் என எவருமில்லை. ஆகவே சான்றோர் மக்களே உண்மையாய் உழைப்போம், நேர்மையாய் முன்னேறுவோம்!!

Friday 11 September 2015

திறன்மிகு தொழிலாளர்கள் (Skilled Labours)

வெளிநாட்டு முதலீடுகள் தமிழகத்திற்கு வேலை வாய்ப்பினை வழங்குமா? Skilled Labours என அழைக்கப்படும் திறன்மிகு தொழிலாளர்களுக்கு தமிழத்தில் முன்பு பஞ்சமே இருக்காது. ஆனால் தற்பொழுது இவர்களுக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு இருப்பது போல் தெரிகிறது. திறன்மிகு தொழிலாளர் என்பர் ஐ.டி.ஐயில் முறைப்படி பட்டயப்படிப்பு கற்ற எலக்ரீசியன், பிளம்பர், லேத் மெக்காணிக், மெக்காணிக், வெல்டர் போன்ற பணியாளர்களாகும். இவற்றுக்கு முன்பு நல்ல மதிப்பு இருந்தது! டி.வி.எஸ் போன்ற சில நிறுவணங்களில் அவர்களே பயிற்சியும் அளித்து, சான்றிதல் குடுத்து, பணியிலும் தமிழர்களை அமர்த்திக் கொண்ட காலம் உண்டு.

ஆனால் சமீபகாலமாக இது போன்ற பணிகளில் தமிழர்கள் அமர்ததப்படுவது இல்லை. இதில் பீகாரிகள், ஒரியர்கள் மட்டுமில்லாமல் நேபாளிகளும் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். நாமோ இங்கே பட்டயக்கல்லூரிகளை மொத்தமாக மூடிக்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் மட்டுமில்லாமல், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் திறன்மிகு பணியாளர்களை அனுப்பிக் கொண்டிருந்த தமிழகத்திற்கு என்னாயிற்று? முன்பெல்லாம் வெளிமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தொழிர்ச்சாலை அதிபர்கள் கூறும் காரணம் குறைந்த கூலி என்பதாக இருக்கும். அது உண்மையும் கூட வெளிமாநிலத்தவர்கள் தமிழகத்தில் மிக குறைந்த கூலிக்கு (மூனறு வேளையும் சப்பாத்தி உண்டுவிட்டு) வேலை பார்த்த காலம் உண்டு. ஆனால் அவர்கள் இப்போது தமிழக்த்தில் லேபர் காண்ட்ராக்ட் எடுத்து வேலை பார்க்கும் அளவுக்கு தேர்ந்து விட்டார்கள்! அதாவது குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பணியை முடித்து குடு்க்க இவ்வளவு கூலி என நிர்ணயம் செய்தல்!

தற்போது வாங்கும் கூலியை பார்த்தால் நம் தொழிலாளர்களுக்கும் அவர்களுக்கும் பெரிய கூலி வித்தியாசம் கிடையாது. அப்புறம் ஏன் வெளிமாநில தொழிலாளர்கள்? மதல் காரணம் "டாஸ்மாக்"! நம் ஆட்கள் மூன்று நாட்கள் வேலை பார்த்து கூலி வாங்கி காசு பார்த்து விட்டால் மீண்டும் கையில் காசு தீரும் வரை தொழிர்ச்சாலை பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. அதிலும் தறாபொழுது அனைத்து தொழிர்ச்சாலைகளின் அருகிலும் டாஸ்மாக் உள்ளது! சரிங்க நம்ம ஆளுங்க மட்டும்தான் குடிக்கிறார்களா அவர்கள் குடிப்பதில்லையா? இங்கு பல சேட்டைகள் செய்யும் நம் மக்கள் வெளிநாடுகள் சென்றால் கையையும் வாயையும் கட்டி வைததுக் கொண்டு சும்மா இருப்பார்கள். காரணம் ஊருக்கு பணம் அனுப்ப வேண்டும், கடனை அடைக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி. அது இங்கே இருக்கும் போது வராது! அது போலவே வெளிமாநிலத்தவரும் இங்கே வேலை பார்க்கும் போது அடக்கி வாசிக்கிறார்கள்.

அடுத்தது கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் நிலவிய மிண்வெட்டு பிரச்சினை பல தமிழக திறன்மிகு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு வேட்டு வைத்து விட்டது. அதனால் பட்டயப்படிப்புகளும், பட்டயக்கல்லூரிகளும் மதிப்பிழந்தன. உண்மையிலேயே திறனமிகு தொழிலாளரகள் மிகுதியாக இருந்த மாநிலத்தில் அந்த மிண்வெட்டு தட்டுப்பாடை ஏற்ப்படுத்திவிட்டது! அடுத்தது பணிச்சுமை. நம் தொழிலாளர்கள் பதது மணி நேரத்திறகு மேல் தாக்குப்பிடிக்க மாட்டார்கள். ஆனால் வெளிமாநிலத்தவர்கள் அங்கேயே தங்கியிருப்பதாலும், பணத்தேவையிருப்பதாலும் பதினாறு மணி நேரம் கூட வேலை பா்க்கின்றனர்! அதிக பணிநேரத்திற்கு அதிக கூலி உண்டு! ஆக திரைகடல் ஓடி திரவியம் தேடிய தமிழன் தமிழகத்திலேயே வேலை வாய்ப்புகளை பறி கொடுத்து விட்டு நிற்கிறான்! இதனால் வெளிமாநிலத்தவரை இங்கு வேலைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என் போராடினால் முட்டாள்த்தனம்! எல்லா தொழிர்ச்சாலைகளும் வேறு மாநிலங்களுக்கு சென்று விடும்! இதற்கு  தீர்வு டாஸ்மாக்குகளை முறைப்படுத்துவதும், பட்டயக்கல்லூரிகளை அரசாங்கம் நல்லபடியாக திறந்து நடத்துவதும், தமிழக்த்தில் திறன்மிகு தொழிலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதுமேயாகும்!

இவற்றையெல்லாம் தமிழ்நாட்டு அரசாங்கம் சரி செய்யாமல் என்ன வெளிநாட்டு முதலீடுகளை இங்கு கொண்டு வந்து குவித்தாலும், அது வெளிமாநித்தவருக்குதான் பயணளிக்கப் போகின்றதே ஒழிய நமக்கில்லை! செய்யுமா தமிழக அரசு? செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா??

Friday 4 September 2015

சரிய வைக்குமா தோல்விகள்?!

இன்றைய தொழிலில் லாபத்தை விட செலவினங்கள் அதிகமாகி விட்டன. பரம்பரையாய் தொழில் செய்பவர்களும், அனுபவசாலிகளும் இதை புரிந்து தொழிலின் தன்மைகளை மாற்றி, செலவினங்களை குறைக்க வழி செய்து, குறுகியகாலத்தில் அதிக திருப்பதல்களை (Highest turnover in short period) செய்து தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால் புதியவர்கள் திணறித்தான் போகிறார்கள். கடன் வாங்கி தொழில் செய்யலாம் ஆனால் நான் முன்னர் குறிப்பிட்டது போல் குறுகிய காலத்தில் அதிக திருப்புதல்களை செய்தால் தப்பிக்கலாம்!

சிங்கங்கள் (Lions) கூட்டமாய் வேட்டையாடும் போது அவற்றின் வெற்றி வாய்ப்பு 30%. அதாவது 10 வேட்டை முயற்சிகளில் ஒன்றிலேயே அவற்றுக்கு இரை கிட்டுகிறது! தனியாய் வேட்டையாடும் சிங்கத்தின் வெற்றி வாய்ப்பு 17%. புலிகளின் (Tiger) வேட்டை வாய்ப்பு 10% மட்டுமே. அதிவது 10 முயற்சிகளில் ஒன்று மட்டுமே! மரம் ஏறும் சிறுத்தைகளின் (Leopard) வெற்றி வாய்ப்பு 16%. வேங்கை சிறுத்தைகளின் (Cheetah) வெற்றி வாய்ப்பு 50%. ஆனால் அவற்றின் 50% இரையை பெரிய மிருகங்கள் பறித்து சென்று விடுகின்றன! சிங்கங்களும்,வேங்கை சிறுத்தைளும் சமவெளிகளில் (Plains) வாழ்பவை. புலி மழைக்காடுகளில் (Tropical Forests) வாழ்பவை. சிறுத்தைகள் எல்லா வகை காடுகளிலும் வாழ்பவை!

இவற்றை படிக்கும் போது ஒன்று புரியும், இவைகள் ஒவவொன்றும் வாழும் இடம் வேறு வகை, ஒரு வேலை உணவுக்கு இவைகள் சந்திக்கும் தோல்விகள் கடுமையானவை! ஒரு வேளை உணவுக்கு 10 முயற்சிகளில் 9 தோல்வி என்பது கொடுமையே! ஆனால் இவை மீண்டும் முயற்சிக்காமல் இருந்தால் அதன் நல்ல கொழுப்புகளை அவற்றின் உடலே  தின்று அவற்றை சாகடித்துவிடும்! அதனால் மக்களே நமது தொழில் வரும் சறுக்கல்களே நாம் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் என்பதன் சான்று! தோல்வி நம்மை தோக்கடிப்பதில்லை. தோல்வியினால் நாம் துவண்டால் மட்டுமே நாம் தோற்கடிக்கப் படுகிறோம்.

நம் வெற்றியை இன்னொருவர் தட்டிப் பறித்து விட்டார்,அவர் அதற்கான தகுதியற்றவர் என கருதி துவல்கிறோம்! ஆனால் வேங்கை சிறுத்ததைகள் அதன் 50% இரைகளை பறி குடுத்த பின்னரும் வேட்டையாடி உண்டு உயிர் வாழத்தான் செய்கிறது! இது இயற்கையின் நியதி! ஆகவே துரோகம் என கூறிக் கொண்டு புலம்பாமல் அடுத்த முயற்சிக்கு தயாராகுங்கள்! இந்த மிருகங்களை போல் நம் களமும், தொழிலும் வேறாய் இருக்கலாம், ஆனால் தொழில் முயற்சியில் நம் மக்கள் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகறேன். நன்றி!

தோலாண்டி.

Wednesday 2 September 2015

பெருந்தலைவர் எனும் கல்வி விளக்கு.


ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்த காலத்தில், 100-க்கு ஏழு குழந்தைகள்தான் தமிழகத்தின் பள்ளிகளின் வாசல்படியில் கால்வைத்தன. அரசுப் பள்ளிகளில் அனைவரும் சமமாகக் கல்வி பயிலலாம் என்ற அரசின் ஆணை ஏட்டளவில்தான் அப்போது இருந்தது.
ஆங்கிலேயர் ஆட்சியில் 1939-லேயே ராஜாஜி சென்னை மாகாண முதலமைச்சராகிவிட்டார். அப்போது மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் தலித் சமூகத்தின் பெண் குழந்தைகளைப் பள்ளியில் மூன்று மணிநேரம் மட்டுமே அனுமதித்தால் போதும். மற்ற நேரம் அவர்களின் அம்மா, அப்பாவின் வேலைகளில் உதவிசெய்யட்டும் என்று ஆணையிட்டார்.
1950-ல் இந்தியா குடியரசானது. அனைவருக்கும் கல்வி தர வேண்டியது அரசின் கடமை என்று சொன்னது, சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனம். சென்னை மாகாணத்தில் 1951-ல் 80% பேர் கைநாட்டுகள்தான். 1946-ல் முதல் வகுப்பில் சேர்ந்த 12 லட்சத்து 22 ஆயிரத்து 775 குழந்தைகள் 5-ம் வகுப்பு வருவதற்குள் 100-க்கு 63 பேர் பாதியிலே நின்றுவிட்டார்கள்.
இந்தச் சூழலில், சென்னை மாகாணத்தின் கல்வித் துறை 1950-ல் பத்தாண்டுத் திட்டமொன்றை உருவாக் கியது. அதில், ஆண்டுக்கு ஒரு கோடி செலவழித்தால் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஐந்து லட்சம் புதிய மாணவர் களைப் பள்ளியில் சேர்க்கலாம் என்றது. ஆனால், நடைமுறையில் 1950-51-ல் கல்விக்காக சென்னை மாகாணத்தில் 5 லட்சம் ரூபாய்தான் ஒதுக்கப்பட்டது.
அப்போதைய தமிழகத்தில் எல்லாக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கத் தேவையான அளவு பள்ளிகள் கிடையாது. தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர் களும் கிடையாது.
அந்த நேரத்தில்தான் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ராஜாஜி மீண்டும் வந்தார். 1953-ல், மேம்படுத்தப்பட்ட ஆரம்பக் கல்வித் திட்டத்தை அவர் அறிவித்தார்.

காமராஜரை முதல்வராக்கிய குலக்கல்வித் திட்டம்
அப்போதைய பள்ளிகள் ஐந்து மணி நேரம் இயங்கின. அதை மாற்றி, மூன்று மணி நேரம் பள்ளியில் இருக்க வேண்டும். மூன்று மணி நேரம் தங்களின் குடும்பத் தொழிலை மாணவர்கள் கற்க வேண்டும் என்று ராஜாஜி மாற்றினார். மாணவிகள் வீட்டுவேலைகளைக் கற்க வேண்டும் என்றார். குடும்பத் தொழில் செய்யும் பெற்றோர் இல்லாத மாணவர்கள் வேறொரு தொழில் செய்பவரிடம் வேலையைக் கற்கலாம். இது தவிர, மாணவர்கள் தமது ஊர்களில் துப்புரவுப் பணி, சாலைகள் அமைத்தல், கட்டிடம் கட்டுதல் போன்றவற்றில் ஈடுபடுத்தப்படுவார்கள். இரண்டு பணி நேரங்களில் தினமும் பள்ளிகள் இயங்கும் என்றார் ராஜாஜி.
தானாகவே எரிந்துகொண்டிருந்த தமிழகத்தின் மேல் இந்தக் கல்வித் திட்டம் மண்ணெண்ணெயை ஊற்றிவிட்டது. இதை, குலக்கல்வித் திட்டம் என்றார் பெரியார். மக்களின் எதிர்ப்பு விஸ்வரூபம் எடுத்து, பல கட்சிகளை ஒன்றுபடுத்தியது. காங்கிரஸ் கட்சிக்குள்ளும் காமராஜர் தலைமையில் எதிர்ப்பு வெளிப்பட்டது. ராஜாஜி வெளியேறினார். காமராஜர் 1954-ல் முதல்வர் ஆனார். ஆக, குலக்கல்வித் திட்டம் வராமல் இருந்திருந்தால் காமராஜர் முதல்வராகும் வாய்ப்பு குறைவுதான்.

கல்விக்கு உணவு தந்தவர்
இந்த நேரத்தில்தான் சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரம் தனியாகப் பிரிந்தது. அதுவும் குலக்கல்வியைக் கைவிட்டது. அதன் பிறகு இன்றைய தமிழகத்தின் பகுதிகளில் மூடப்பட்ட பள்ளிகளையெல்லாம் காமராஜர் திறந்தார். ஆயிரக் கணக்கில் புதிய பள்ளிகளைக் கட்டினார். ஒவ்வொரு கிராமத்துக்கும் அருகில் ஒரு பள்ளி இருக்குமாறு செய்தார். இலவசக் கட்டாயக் கல்வியைத் தமிழகத்தில் உருவாக்கி வலுப்படுத்தினார்.
1925-ல் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக சிங்காரவேலர் இருந்தபோது, மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவை வழங்க வைத்தார். அந்த மதிய உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் காமராஜர் அறிமுகப்படுத்தினார். இது உலக அளவில் இன்னமும் பேசப்படுகிற புதிய முயற்சி. இத னால் பள்ளிகளில் குழந்தைகள் சேர்வதும், இடை யிலேயே நின்றுபோகாமல் தொடர்ந்து வருவதும் அதிகரித்தது. லட்சக் கணக்கான குடும்பங்களில் கல்வி முதன்முறையாக நுழைந்தது. தமிழகத்தைப் பின்பற்றித்தான் பல மாநிலங்கள் மதிய உணவுத் திட்டத்தில் இறங்கின.

அப்பாக்களுக்கும் பிள்ளைகளுக்கும் கடவுள்
“தனது மகன் தன்னைப் போலவே வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுவாக ஒரு அப்பாவுக்கு இருக்கும். ஆனால், பெற்றோரின் தொழிலை மட்டும் தான் பிள்ளைகள் செய்ய வேண்டுமென்றும் வேறு பிள்ளைகள் அந்தத் தொழிலுக்கு வரமுடியாது என்றும் கட்டாயமாக உருவாக்கப்படும் சூழலில் நீதியும் சமத்துவமும் இருக்காது” என்கிறார் எனது நண்பர் ஒருவர். செங்கல்பட்டில் ஒரு பண்ணையில் பரம்பரையாக விவசாய வேலைகளைச் செய்த அப்பா ஒருவர், தான் வேலை செய்யும் இடத்துக்குத் தனது மகன்கள் வந்தால் அடித்து விரட்டுவாராம். ஆண்டையின் (பண்ணையார்) கண்ணில் படாமல் தனது மகன்களை காமராஜர் உருவாக்கிய அரசுப் பள்ளியில் அவர் படிக்க வைத்தார். அந்த முதல் தலைமுறை பட்டதாரிகள் தமிழக அரசின் போக்குவரத்துக் கழகத்தில் தற்போது ஊழியர்களாக இருக்கிறார்கள். தன்னைப் போலத் தனது பிள்ளைகள் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத் தங்கள் அப்பா பட்ட கஷ்டங்களை நினைத்து அவர்கள் இப்போதும் கண்கலங்குகிறார்கள்.

குலக்கல்வி கிளப்பிய விவாதம் முடிந்துவிடவில்லை. கட்டாயக் கல்வியுரிமைச் சட்டம், சமச்சீர் கல்வியை அமலாக்குவதற்கான விவாதங்கள், வாழ்க்கைக்கு நெருக்கமான கல்வி ஆகிய இன்றைய விவாதங்களின் வேர் குலக்கல்வித் திட்டத்திலும் இருக்கிறது.

கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்துப் பாடுவதை நிறுத்திவிட்டு, காமராஜர் வாழ்த்து பாடலாம் என பெரியார் பாராட்டினார். இன்னமும் மக்கள் மனதில் அந்தப் பாராட்டு இருக்கிறது.

தகவல் உதவி: நீதிராஜன் (பத்திரிக்கையாளர்)