Wednesday 14 September 2016

கர்னாடகா சண்டித்தனம் செய்வது புதிதல்ல

காவிரி பிரச்சனை இன்று நேற்றல்ல… அன்றைய காலம்தொட்டே இருந்து வந்துள்ளது. ஆம் கி.பி. 11ம் நூற்றாண்டிலும், 17ம் நூற்றாண்டிலும் மைசூர் அரசு காவிரியை தடுத்து அணைகட்டி அன்றே தமிழர்களுக்கு சோதனை ஏற்படுத்த முனைந்தது. அப்போதெல்லாம் முதலில் இரண்டாம் இராஜராஜசோழன் பெரும் படையுடன் சென்று தடுப்புகளை தடுத்ததும், அதன் பிறகு 17ம் நூற்றாண்டில் −ராணி மங்கம்மாளும், தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரும் பெரும் படையுடன் சென்றதும் படை செல்லும் முன்பே கடும் மழையால் அணை உடைந்ததும் வரலாறு கூறுகிறது.

அதன்பின் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1867ல் மைசூர் ஆட்சிக்குட்பட்ட பகுதியிலும், 1877ல் தமிழகம் அடங்கிய சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட பஞ்சத்தாலும் இலட்சக்கணக்கான மக்கள் மாண்டனர். இதை தடுக்கும் எதிர்காலத்திட்டத்துடன்தான் மைசூரில் 44 டி.எம்.சி. கொள்ளளவு உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையும், மேட்டூரில் 93 டி.எம்.சி கொள்ளவுள்ள அணையும் கட்டப்பட்டது. இதன் விளைவாக உருவானவைதான் 1892, 1924ம் ஆண்டுக் காவிரி நீர் ஒப்பந்தங்கள்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன் 1807-ஆம் ஆண்டு மைசூர் அரசுக்கும் சென்னை மாகாண அரசுக்கும் இடையே காவிரி நதி நீரைப் பகிர்ந்துகொள்வதில் சிக்கல் எழுந்தது. மைசூர் அரசு மத்திய அரசிடம் முறையிட்டதன் பேரில் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1892-ஆம் ஆண்டு முதன்முதலாக ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆறு விதிகளைக் கொண்டிருந்த அந்த ஒப்பந்தத்தின்படி மைசூர் அரசு காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக அணை ஒன்றைக் கட்டினால் அது குறித்த முழு விவரங்களையும் சென்னை மாகாணத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்.

1910இல் மைசூர் அரசு கண்ணம்பாடி என்னும் இடத்தில் 41.5 டி.எம்.சி. நீரைத் தேக்கும் கொள்ளளவுடன் அணை ஒன்றைக் கட்டுவதற்குத் திட்டமிட்டு அனுமதி கேட்டபோது, சென்னை மாகாண அரசு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் சிக்கல் எழுந்து., மைசூர் அரசு நடுவண் அரசிடம் பிரச்சினையைக் கொண்டு சென்றது. மத்திய அரசு, கண்ணம்பாடி அணையின் கொள்ளளவு 11 டி.எம்.சி.க்கு மேல் போகக்கூடாது என்ற நிபந்தனையோடு அனுமதி அளித்தது. அதற்கு ஒப்புக்கொண்ட மைசூர் அரசு, தான் திட்டமிட்ட 41.5 டி.எம்.சி. அளவுக்கே அணையைக் கட்ட ஆரம்பித்தது.

மைசூர் அரசும் சென்னை மாகாண அரசும் முரண்பட்ட நிலையை எடுத்த காரணத்தால் அன்றைய பிரித்தானிய அரசு 1892-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிரிஃபின் என்பவரை நடுவராக நியமித்து உத்தரவிட்டது. அவர் 1914ஆம் ஆண்டு மே மாதம்

"இரண்டு தரப்பினருக்கும் திருப்தியளிக்கும் ஒரு தீர்வைத் தர முடியாததற்காக நான் வருந்துகிறேன். இரண்டு தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளும் ஏற்கத் தக்கவையாக இல்லை... இரு தரப்பினருமே ஒரு சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்கு ஆர்வமற்றவர்களாக இருந்தனர்... தற்போதைய சென்னை மாகாணத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம். அதே சமயம், மைசூர் அரசு சென்னை மாகாணத்துக்குத் தந்தது போக மிச்சமிருக்கும் நீர் முழுவதையும் பயன்படுத்திக்கொள்ளலாம்"

என கிரிஃபின் தனது தீர்ப்பில் தெரிவித்தார்

கிருஷ்ணராஜ சாகர் அணை எனப்படும் கண்ணம்பாடி அணை
கிரிஃபின் கூறியதைச் சென்னை மாகாண அரசு ஏற்கவில்லை. அது மேல்முறையீடு செய்தது. மீண்டும் மைசூர் அரசுக்கும் சென்னை மாகாண அரசுக்கும் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. அதன் இறுதியாக 1924 பிப்ரவரியில் ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தம் ஐம்பது ஆண்டுகள் நடை முறையில் இருக்குமென்று அப்போது தீர்மானிக்கப்பட்டது. 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 1929, 1933 ஆகிய ஆண்டுகளில் போடப்பட்ட சில துணை ஒப்பந்தங்களின் படி, 1929 ஒப்பந்தப்படி மைசூர் அரசு கிருஷ்ணராஜ சாகர் அணைத் திட்டத்தையும் சென்னை மாகாண அரசு மேட்டூர் அணைத் திட்டத்தையும் நிறைவேற்றிக்கொள்ள வகை செய்யப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு காவிரிச் சிக்கல் மேலும் தீவிரமடைந்தது.