Saturday 11 October 2014

திராவிடர்கள் ஏன் சும்மா இருந்தீர்கள்?-காமராஜர் சொற்பொழிவு பாகம் 3

திராவிடர்கள் ஏன் சும்மா இருந்தீர்கள்?

ஒரு பெரிய ஊரிலே போய்ப் பாருங்கள். நம்ம கோயில் இருக்கும். கொஞ்ச தூரத்திலே சர்ச் இருக்கும். மசூதி இருக்கும். இவை எல்லாம் என்ன பொய்த் தோற்றங்களா என்ன? இந்தக் கோபுரங்கள் எல்லாம் பொய்த்தோற்றமா? மசூதி பொய்த் தோற்றமா? இதையெல்லாம் இன்றைக்குக் கட்டிவிட முடியாது. இந்த சண்டை போடுகிறவர்கள் எல்லா இனத்திலும் இருக்கிறார்கள். சண்டை போடுகிறவர்கள் இங்கேயும் இருக்கிறார்கள்; அவன் நாகரிகம் வேறு; நம் நாகரிகம் வேறு. இதுதான் திராவிட நாகரிகம் என்று பிரிக்க முடியுமா என்ன? திராவிட நாட்டைப் பிரித்துக் கொடு கொடு என்கிறீர்களே, எங்கேயிருந்து பிரித்துக் கொடுக்கிறது? திராவிட நாடு என்பது எது? நீங்கள் சொல்லுகிறீர்கள்; மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் இந்த பகுதிகளெல்லாம் சேர்ந்தது திராவிடம் என்று சொல்லுகிறீர்கள். வாஸ்தவம்; அதுதான் திராவிடம். ஒரு காலத்திலே நீங்களெல்லாம் ஒன்றாக இருந்தீர்களா? இல்லையா? இப்போது ஏன் பிரிஞ்சு போய் விட்டார்களே. மலையாளத்தார் திருவாங்கூர், கொச்சியோடு போய் விட்டார்கள். அப்பொழுது எல்லாம் நீங்க சும்மாதானே கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்து கொண்டு இருந்தீர்கள். என்ன செய்தீர்கள்? போகிறவர்களை பிடித்து வைக்க முடியுமா, என்ன? போகிறவர்களுக்கு ஒரு நமஸ்காரம் பண்ணி, போய்விட்டு வா என்கிறோம். உங்களுக்கு திராவிடத்திலே நம்பிக்கையிருந்தால், நீங்க என்ன செய்திருக்கணும் அப்பா, நாமெல்லாம் ஒரே இனமாச்சே. நாம் ஏன் பிரிந்து போகவேண்டும்? ஒற்றுமையே வெற்றி தரும் என்பது உனக்குத் தெரியாதா? என்று காலைப்பிடித்து, கையைப் பிடித்து நாலு நல்ல வார்த்தை சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருக்க வேண்டியதை விட்டுவிட்டு, இப்போஓது எதுத்ததற்கெல்லாம் என்னுடன் சண்டைக்கு வருகிறீர்களே, போராட்டம் செய்வோம் என்று சொல்கிறீர்களே. அப்பொழுது, எங்களைத் தடுத்து நிறுத்தியிருந்தால் போராடுவோம் என்று சொன்னாயா? திராவிடத்திலே நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? பட்டணத்திலே பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் ஒருவர் உண்ணாவிரதம் இருந்தார். பட்டினி இருந்தார். நான் பிரிந்துதான் போவேன் என்ற உறுதியுடன் உண்ணாவிரதம் இருந்தார். அப்பொழுது நீ என்ன செய்திருக்க வேண்டும்? பிரியவே கூடாது என்று நீயும் எதிர்த்த வீட்டில் உட்கார்ந்து கொண்டே உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும். அப்படிச் செய்தாயா? இல்லையே.

No comments: