Tuesday 21 October 2014

சிங்கப்பூரில் தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த உ. இராமசாமி நாடார்

சிங்கப்பூரில் தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த உ. இராமசாமி நாடார்.


உடையப்ப நாடார்--சின்னக் கருப்பாயி தம்பதிகளின் செல்வப் புதல்வராக பிறந்த அவர், வெளிநாட்டுக்கு வந்ததாலோ என்னவோ, மொழிப்பற்றுடனும் இனப் பற்றுடனும் இயல்பாகவே நடந்துகொண்டார். தமிழர்கள், எல்லாத் துறைகளிலும் மிளிரவேண்டுமென்று அவர் விரும்பினார். தமிழகத்தில் பிறந்த அவர்சிங்கப்பூரில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்னும் கொள்கைக்கேற்பஊரில் இருந்த சொத்துக்களைப் பாகப் பிரிவினை செய்துகொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்துவிட்டு இங்கே வந்து சேர்ந்தார்.

சிங்கப்பூரிலும் பினாங்கிலும் 1912ஆம் ஆண்டு முதல் 1929ஆம் ஆண்டு வரை மிகச் சிறந்த குத்தகையாளராக இருந்தவர்தான்இராமசாமி நாடார். அவரின் மூலமாகப் பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தன. வெள்ளையர் ஆட்சி நடைபெற்ற அந்தக் காலக்கட்டத்தில் அரசாங்கம் அவர் மேல் நம்பிக்கை வைத்துப் பல கட்டங்களில் அவரைப் பாராட்டியிருப்பதை அந்த நாளைய தமிழ் ஏடுகள் பதிவு செய்துள்ளன. குத்தகையாளராக இருந்த அதே வேளையில் அவர் மளிகைக் கடை வியாபாரத்தையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார். அதை மேலும் விரிவாக்கக் கருதி பலருக்கு அந்தத் தொழிலில் ஆர்வத்தை உண்டாக்கினார். சிங்கை மலேசியாவில் தமிழர்களும் சிறந்த வியாபாரிகளாகத் திகழ முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தலைசிறந்த முன்னோடியாக அவர் விளங்கினார். மொழியால் தமிழர்கள் யாவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று அவரிடமிருந்த பண்பாடு அந்த நாளில் முன்னேற்றம் பத்திரிகையின் உரிமையாளராக இருந்த திரு கோ சாரங்கபாணியைப் பெரிதும் கவர்ந்தது. மலாயாவிலும் சிங்கப்பூரிலும் இருந்து வந்த தமிழர்கள்மற்ற இனத்தவர் பாராட்டும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்பதில் அவர் கண்ணும் கருத்துமாகத் திகழ்ந்தார். 1919ஆம்ஆண்டு குடும்பத்துடன் சிங்கப்பூரில் தங்கினார்.

அந்தக் காலத்தில் அதிக வரிப்பணம் கட்டிய தமிழர்களில் அவரே முன்னோடி என்று கூறுவார்கள். நகர மேலாண்மைக் கழகத்துக்கு கூடுதலான வரி செலுத்திய தமிழர் அவரே என்று ஆவணங்கள் கூறுகின்றன. இந்தியர் அல்லாதவர்களும் இராமசாமி நாடாரின் உழைப்பையும்முன்னேற்றத்தை யும் கண்டு வியப்படைந்தனர்வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டனர். வியாபாரியாக இருந்த அதே வேளையில் சமூக அமைப்புகள் பலவற்றுக்கும் இராமசாமி நாடார் பொறுப்பான கடமை ஆற்றிவந்தார். தேசபக்தி நிதியின் தென்னிந்திய பிரிவுக்குத் தலைவராக இருந்த அவர்அந்தக் காலத்தில் வெள்ளையர்கள் இங்குக் கொண்டு வந்திருந்த இந்தியப் படையினர்பால் தனி ஆர்வம் கொண்டிருந்தார் என்பதும் ஆவணங்களில் குறிக்கப்பட்டுள்ளன. அதனால்தான் அவர்களின் மேம்பாட்டு நிதிக்குப் பணம் கொடுத்த அவர்பின்னர் ஒவ்வொரு மாதமும் அவர்களின் மேம்பாட்டு நிதிக்குப் பணம் கொடுக்கப் போவதாக வாக்களித்து அதன்படி நடந்துகொண்டார். வசதி உள்ளவர்களே குறைவாக நிதி உதவி செய்துகொண்டிருந்த அந்த நேரத்தில் யுத்த நிதிக்குப் பத்தாயிரம் வெள்ளி கொடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அந்தக் காலத்துத் தமிழ் ஏடுகள் அவரைப் பாராட்டியதோடுசிங்கப்பூர்த் தமிழர்களின் செல்வர் தோழர் உ ராமசாமி நாடார் என்றே குறிப்பிட்டு வந்தன.

தொழிலில் வளர்ச்சி காணக் காணபொதுத் தொண்டிலும் ஏழைகளுக்கு உதவுவதிலும் அவர் பெரும் ஈடுபாடு காட்டிவந்ததை அந்தக் காலத்து தமிழ்மக்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர். திரு இராமசாமி நாடார் சற்றும் மயங்கவில்லை. நில உரிமையாளராகவும்,சிங்கப்பூர் மலாயாவில் ரப்பர் தோட்டச் சொந்தக்காரராகவும் இருந்தார். பல்வேறு பொதுத் தொண்டுகளுக்குத் தாராளமாகப் பண உதவி செய்தார். விவேகானந்தர் சன்மார்க்கச் சங்கம்சிங்கைத் தமிழர் இளையர் கழகம் ஆகியவற்றுக்குப் புரவலராகவும் விளங்கினார். மலாயாவில் பினாங்கிலிருந்த இந்து சபைக்கு அவர் புரவலராக இருந்த அதே வேளையில் தமிழ்நாட்டில் குன்னக்குடியில் நாடார் மடம் ஒன்றைக் கட்டித்தரவும் தவறவில்லை.அங்கே பசி என்று யார் சென்றாலும் உணவு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்இராமசாமி நாடார். சிங்கப்பூரில் திரு ஐ ஐ நாகலிங்கம் முதலியார் தலைவராக இருந்தபோது,தமிழர் சீர்திருத்தச் சங்கத்தில் பல பணிகளுக்கு உதவிக்கரம் நீட்டியவர்தான் திரு இராமசாமி நாடார். 
சிங்கப்பூர் இந்தியர் சங்க கட்டட நிதிஇராமகிருஷ்ண மடத்திற்கான கட்டட நிதி,விவேகானந்தர் சன்மார்க்க சங்கத்துக்கான கட்டட நிதிமகளிர் பாடசாலைக்கான கட்டட நிதிஆகியவற்றுக்கும் இராமசாமி நாடார் தாராளமாக வாரி வழங்கினார். திரு இராமசாமி நாடார்சாலைப் பணிகளுக்காக தம்முடைய சொந்த மான்யமாக தம் நிலத்தின் பகுதியை விட்டுக்கொடுத்திருக்கிறார். அதற்கென அவர் பணம் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை. கோலாலம்பூரில் உள்ள பத்துமலை தண்டாயுதபாணி ஆலயத்துக்குப் படிகளைக் கட்டும்போது தம் பங்கும் அதில் இருக்க வேண்டும் என்னும் நோக்கில் நிதி உதவி செய்தவர்தான்இராமசாமி நாடார். 

ஆதிநாளில் ஜவுளியும் மளிகையும் மட்டுமே வியாபாரத்தில் அவருக்குக் கை கொடுத்தன என்றாலும் அவர் தம்மையும் வளர்த்துக்கொண்டார். புதுப்புது தொழில் நுட்பங்களையும் கற்றுக்கொண்டார். ஒரு சாதாரண குக்கிராமமாகிய மணச்சையில் பிறந்திருந்தாலும் அவர்களும் மிகப் பெரிய உலக அளவிலான வர்த்தகர்களை உருவாக்க முடியும் என்பதற்கு அவரின் முயற்சி ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று அவரைப் பற்றி அறிந்தோர் கூறுவர். சிங்கப்பூரிலும் மலாக்காவின் மூவாரிலும் அவர் தலைசிறந்த வணிகராக விளங்கியது அவரின் அயரா முயற்சியால் கிட்டிய பேறுகள்தானேநான்கு மகன்களுக்கும் ஏழு பெண்மக்களுக்கும் தந்தையாகத் திகழ்ந்த இரு இராமசாமி நாடார் எந்நேரமும் சிரித்த முகத்துடன் இருப்பார். இந்த பூவுலகில் தமிழர்களுக்கும் தமிழ்மொழிக்கும் பல சிறப்புகளைச் செய்த பல நாடார்கள் வாழ்ந்திருக்கிறார்கள்பல அரிய சேவைகளைச் செய்து மறைந்திருக்கிறார்கள். அதனால்அவர்களைப் பற்றி நம் மக்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். அவர்கள் வகுத்துக்கொடுத்த பாதைகளில்தான் நாம் இன்று நடந்து செல்கிறோம். நம் வருங்கால செல்வங்களும் அந்தப் பாதைகளில் தான் நடைபோடுவார்கள் என்பது திண்ணம். பெரியோர் காட்டிய வழிதான் எதிர்காலத்திலும் ஒளிவிளக்காகத் திகழும்.

No comments: