Tuesday 14 October 2014

காமராஜரின் கூர்ந்த மதி நுட்பம்

காமராஜரின் கூர்ந்த மதி நுட்பம்



தமிழ்நாட்டின் முன்னேற்றத்தில், காமராஜர் அங்குலம் அங்குலமாகக் கவனம் செலுத்தினார். அதிகாரிகளை ஒருவருக்கு இருவராக அழைத்து கருத்துக் கேட்டு அனைத்தையும் விவாதித்து, இருவருக்கு நால்வராகக் கேட்ட றிந்து அதற்குப் பின் அவராக ஒரு முடிவு எடுப்பார். மேட்டூர் சுரங்க மின் திட்டம் காமராஜரின் கூர்ந்த மதி நுட்பத்திற்கு ஒரு சான்றாகும். 

மேட்டூரிலே உள்ள அணை, இரட்டை அணையாக இருப்பதைக் காணலாம். கிழக்கு மேற்காகவும், வடக்குத் தெற்காகவும், இரண்டு உண்டு. இதில் குறைந்த மெகாவாட் நீர் மின்சாரமே எடுத்து வந்தனர். மலையைக் குடைந்து சுரங்கப்பாதை வழியாக நீரைத் திருப்பி- மேலும் அதிகமான நீர் மின்சாரம் எடுக்கும் அரிய திட்டத்தை அப்பாத்துரையார் (மின் துறையின் தலைவராக இருந்த பொழுது) முன் வைத்தார். 

இதை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று சிலர் முயற்சி செய்தார்கள். சுரங்கம் குடைந்து நீரைப் புகுத்தினால் அழுத்தம் தாங்காமல் மலை இடிந்து ஆபத்து விளைவிக்கும் என்றும் எச்சரித்தார்கள். காமராஜர் தொழில் நுட்பப் பொறியாளர்களை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்டார். மலையின் வலுவற்ற நிலை பற்றி அவர்கள் எடுத்துரைத்தார்கள். 

காமராஜர் சினம் கொண்டவரானார். "ஐயா பூமிக்கும் சந்திரனுக்கும் பல்லாயிரம் மைல் தூரம் என்கிறீர்கள். அங்கு போய் மனிதன் மண் அள்ளி வந்து விட்டான். வெறும் ராக்கெட் போனது, பின்னர் நாய் போய் விட்டு வந்தது. ஒரு ராக்கெட் மண் எடுத்து வந்தது. 

அப்படிப் போன ராக்கெட், திசைமாறிப் போன போது, இங்கே கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்தபடியே, அதன் பாதையைச் சரி செய்கிறான். அந்த அளவுக்கு அறிவியல் வளர்ந்துள்ளது. ஹிராகுட்டிலும் பக்ராநங்களிலும் நீர்க்கசிவு ஏற்பட்ட போது, சிமெண்ட் உள்ளீடு (இன்ஜக்ஷன்) கொடுத்து அதைச் சீரமைக்கிறான். 

இப்படி இருக்கும் போது, இந்த மேட்டூர் மலை இடிந்து போகாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை யோசித்துச் செய்யுங்கள். நாட்டுக்கு ஏதாவது செய்தாக வேண்டுமல்லவா? நீங்களெல்லாம் யோசித்தால் தானே நாடு உருப்படியாகும்'' சூடாகக் கேட்டார் காமராஜர். அதன் பின்னர் அந்தத் திட்டம் நிறைவேறியது.

No comments: