இலக்கணம் பாராமல் கருத்தில் மட்டும் கவணம் கொள்ள வேண்டிய பக்கம் இது!! சுட்டிகாட்டப்படும் பிழைகள் கவணத்தில் கொள்ளப்படும். கருத்துக்கள் என்னுடையதே. பயணிப்போம்!!!
Friday 3 October 2014
தமிழினத் தலைவன் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்
இது என்ன? யாருக்கும் இல்லாத தனி நபர் வர்ணனை என்று நினைக்கலாம். இவர் வேறு யாரைப் போலவும் இல்லாமல் பல கோணங்களிலும் புதுமை படைத்தவர். இவர் செல்வந்தரல்ல! மிக மிக ஏழை. வடதமிழ் நாட்டில் கள்ளிறக்கும் தொழில் புரியும் கிராமணி குலத்தில் பிறந்தவர். அடிப்படைப் பள்ளிக் கல்வி என்றால் இவர் படித்தது மூன்றாம் வகுப்பு மட்டுமே. ஆனால், இன்றைய நிலையில் பல முனைவர் பட்டங்களைப் பெறக்கூடிய தகுதி பெற்ற கல்வியாளர். தமிழ் இவரது மூச்சு. தமிழ்நாடு இவரது உயிர் உறையும் புனிதமான இடம். முதன்முதலில் "உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு" என்றும், "மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி" என்றும், "தலைகொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்றும் குரல் கொடுத்து சென்னையை தமிழ்நாட்டுக்குத் தக்கவைத்துக் கொள்ளவும் பாடுபட்டவர். வடவேங்கடமும் தென்குமரியும் இடையிட்ட தமிழகத்தைப் பிரித்துக் கொடுக்க மாட்டோம் என்று, மாநிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டபோது வடவேங்கடத்தை மீட்போம் என்று போரிட்ட வீரத் தளபதி. திருப்பதி மட்டுமல்ல, திருத்தணியும் ஆந்திரத்துக்குப் போய்விட்டது. உடனே வட எல்லைப் போராட்டம் தொடங்கியதன் பலன் இன்று திருத்தணியாவது நமக்கு மிச்சமானது. தென் குமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்டதாக இருந்தது. தெற்கெல்லை மீட்க நேசமணி போன்றோர்களுடன் இணைந்து போராடினார், இன்று குமரி தமிழ்நாட்டின் தெற்கெல்லையாக இருக்கிறது. தேவிகுளம் பீர்மேடு தமிழகத்துக்குச் சொந்தம் என்று போராடினார், "குளமாவது மேடாவது" என்று உடன்பிறந்தோரே கேலி செய்ததன் பலன் இவரது போராட்டம் தோல்வி கண்டது. தமிழிலக்கியத்தில் சிலப்பதிகாரம் எனும் காப்பியத்தைப் பட்டி தொட்டிகளில் எல்லாம் பிரச்சாரம் செய்த பலன் இன்று அந்த காப்பியம் தமிழர் நாவிலெல்லாம் மணம் வீசுகிறது. கம்பனைச் சிலர் சிறுமைப் படுத்தியும், கம்பராமாயணத்தை எரித்தும் வந்த நேரத்தில், இவர் கம்பனின் பெருமையை உலகறியச் செய்து, தனது 'தமிழரசுக்கழக' மாநில மாநாட்டின் போதெல்லாம் முதல் நாள் மாநாடு இலக்கிய மாநாடு என்று பெயரிட்டு, இலக்கியங்களை பரவச் செய்த பெருமை இவருக்கு உண்டு. இப்படிப் பல பெருமைகள், பல முதன்மையான செயல்பாடுகள் சொல்லிக்கொண்டே போகலாம். கட்டுரை நீண்டுவிடும். அந்தப் பெருமகனார் தமிழக வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடித்த புடம் போட்டெடுத்த தியாக புருஷன். அவர் வரலாற்றைச் சிறிது பார்ப்போமா?
இவரது பொது வாழ்க்கை விடுதலைப் போரில் செலவழிந்தது. இருபதாண்டு காங்கிரஸ் உறவில் இவர் ஆறுமுறை சிறை சென்றார். முதல் வகுப்பு கைதியாக அல்ல. மூன்றாம் தர கிரிமினல்களுடன் வாழும் 'சி' வகுப்பு கைதியாக. கடைசி காலத்தில் இவரது புகழ், அந்தஸ்து இவை உயர்ந்த காலத்தில்தான் இவருக்கு 'ஏ' வகுப்பு கிட்டியது. இவர் கைதாகி அமராவதி சிறையில் இருந்த காலத்தில் உடல் நலம் குன்றி, உயிருக்குப் போராடும் நிலைமைக்கு வந்து விட்டார். சிறையில் இவருடன் இருந்த பல தலைவர்களும் இவருக்கு வைத்தியம் செய்ய ஏற்பாடுகளைச் செய்தனர். வி.வி.கிரி அவர்கள் இவருடன் சிறையில் இருந்தார். அவர்தான் இவரை அவ்வூர் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க உதவினார். சிறையில் இவர் நடைப்பிணமாகத்தான் இருந்தார். மகாகவி பாரதியைப் போல இவரும் தனது முப்பத்தியொன்பதாம் வயதில் கிட்டத்தட்ட உயிரை விட்டுவிடும் நிலைமைக்கு வந்து விட்டார். இவரை மேலும் அங்கே வைத்திருந்தால் இறந்து போனாலும் போய்விடுவார் என்று இவரை வேலூர் சிறைக்கு மாற்றினர். இவர் பரோலில் வீடு சென்றபோது இவரை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை. அந்த அளவுக்கு இவர் உடல் மெலிந்து, முகத்தில் மீசை மட்டும்தான் இருந்தது. 1942 ஆகஸ்ட் 13ம் தேதி இவர் சிறை செல்லும்போது இவரது எடை 119 பவுண்டு. வேலூர் சிறையில் 1944 ஜனவரியில் இவரது எடை 88 பவுண்டு. அங்கிருந்து இவர் மீண்டும் தஞ்சை சிறப்பு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இங்கு இவர் கிட்டத்தட்ட இறக்கும் தருவாய்க்கு வந்து விட்டார். அதனால் இவரை உடனடியாக விடுதலை செய்து சென்னைக்கு ரயில் ஏற்றிவிட்டனர். தஞ்சை சிறையிலிருந்து குறுக்கு வழியாக தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு இரவு 10-30க்குக் கிளம்பும் ராமேஸ்வரம் போட்மெயிலில் ஏற்றிவிட இருவர் இவரை ஒரு ஸ்ட்ரெச்சரில் போட்டுத் தூக்கிக்கொண்டு போகும் போது அரை நினைவிலிருந்த இவருக்கு யாரோ சாலையில் போனவர் சொன்னது காதில் விழுந்ததாம். "ஐயோ பாவம்! ஏதோ ஒரு அனாதை பிணம் போலிருக்கிறது" என்று. என்ன கொடுமை?
மறுநாள் சென்னை எழும்பூரில் இவரை அழைத்துச் சென்றனர். இவரது சிறை வாழ்க்கை, பட்ட துன்பங்கள், இவரது உடல் நிலை இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் முடிவே இருக்காது. அடுத்ததைப் பார்ப்போம். இவர் வடசென்னை மதுவிலக்குப் பிரச்சாரக் குழு, ஹரிஜன சேவை, கதர் விற்பனை இப்படியெல்லாம் பணி செய்திருக்கிறார். வடசென்னை காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்திருக்கிறார். பல ஆண்டுகள் சிறை வாசம், பலமுறை சிறைப் பிரவேசம், உடல்நிலைக் கோளாறு, இப்படி மாறிமாறி துன்பம் துன்பம் என்று அனுபவித்த ம.பொசிக்கு சுதந்திரம் கிடைத்த பிறகாவது நல்ல காலம் பிறந்ததா என்றால், அதுவும் இல்லை. அதுவரை அவருக்கு அதாவது சுதந்திரம் வரை ஆங்கிலேய ஏகாதிபத்தியம்தான் எதிரி. சுதந்திரத்துக்குப் பிறகு ஏராளமான எதிரிகள், உள் கட்சியிலும், எதிர் கட்சியிலும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment