Thursday 9 October 2014

இயற்கை வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வோம்-காமராஜர் சொற்பொழிவு பாகம் 2

இயற்கை வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வோம்

*************************************************************************


நம் நாடு என்று சொன்னால்-நம் தேசம் என்று சொன்னால் வெறும் மலைகளும் ஆறுகளும் காடுகளும் கொண்டது மட்டும் நாடு இல்லை. கோவில்களும் கோபுரங்களும் அவைகளைக் கட்டிமுடித்த மக்களும் கொண்டதுதான் நம் நாடு. இந்த நாட்டுக்குச் சிறப்பு யார்? நம் மக்கள்தானே. வெறும் மரங்களும் மலைகளும் இருந்து மக்களே இல்லாத நாடு என்னவாகும்? நாட்டு மக்களை மறந்து விட்டு வெறும் இயற்கை அழகை மட்டும் பாடிக்கொண்டேயிருப்பார்கள் கவிஞர்கள். கவிஞர்களைக் கேட்டால் என்ன பாடுவார்கள்? காவிரியினுடைய வளத்தைப் பற்றியும் அதன் அழகைப் பற்றியும் பொன்னியின் தண்ணீர் வளத்திலே நாம் வாழ்வதைப் பற்றியும் கவி பாடு என்று சொன்னால் பாடிக்குவித்து விடுவார்கள். வேண்டியதுதான். இயற்கையினுடைய அழகைப் பாடவேண்டியதும் அவசியந்தான். அத்துடன் ஏழையின் கஷ்டத்தையும் பாட வேண்டும். இயற்கையினுடைய வளத்தையும் ஏழையையும் ஒன்றாக்ப் பண்ண வேண்டும். காவேரி ஓடுகிறது. தண்ணீர் வந்தால்தானே சாப்பாட்டுக்குவழி. அதனால், ஆறு வெட்ட வேண்டும். தண்ணீர் வரும்பொழுது அதைத் தேக்கி வைக்கவேண்டும். ஏதோ அணையைப் போட்டோம். வாய்க்கால் கட்டினோம். தண்ணீர் வந்தது. நெல் போட்டோம் சாப்பிடுகிறோம். அதனால், சந்தோஷம்தான். அது மாதிரி இயற்கை நமக்கு அளித்த அத்தனை வசதியையும் பயன்படுத்தவில்லையா என்ன? பயன்படுத்தத் தவறிவிட்டோம். எப்பொழுது தவறினோம். பழைய காலத்திலே அணை இருந்தது, சோர் காலத்திலே காவிரியிலே கல்லணை கட்டி வைத்தார்கள். அதனால்தான் அபற்கு கல்லணை என்று பெயர் வந்தது. பழைய ராஹாக்கள் காலத்திலேதான் கல்லணை கட்டப் பட்டது. இடைக்காலத்திலேதான் இதெல்லாம் விட்டுப் போய் விட்டது. நமக்குச் சொந்த அரசாங்கம் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தோம். யார் இருந்தாலும் தெரியாது. ஒரே தடுமாற்றம். எங்கு போனாலும் தடுமாற்றம். இந்த தடுமாற்றம் ஒரு காலத்தில். அதற்குப் பிறகு அன்னிய அரசாங்கம் 150 ஆண்டுகள் இருந்தது. அந்த இடைக் காலத்தில்தான் நம் முன்னேற்றம் தடைப்பட்டுப் போய்விட்டது. இந்த 200-300 ஆண்டுகளில் உலகமே வெகு வேகமாக முன்னேறி விட்டது. உலகத்திலே ரயில், மின்சாரம், யந்திரங்கள் முதலியன விஞ்ஞான வளர்ச்சியில் இப்படித்தான் ஏற்பட்டது. இது 200 ஆண்டுகளுக்குள் ஏற்பட்டது. அந்த காலத்தில் நமக்குச் சொந்த அரசாங்கம் இல்லை. அந்தக் காலத்தில் எதற்குச் சொந்த அரசாங்கம் இருந்ததோ அந்த தேசம் எல்லாம் முன்னேறி விட்டது. சொந்த அரசாங்கம் இல்லாத தேசம் எல்லாம் பின் தங்கி விட்டது பின் தங்கிய நாடு என்று சொல்லுகிறோம் இல்லையா? ஆப்பிரிக்கா, இலங்கை, மலேயா, இந்தியா என்று எல்லாம் கணக்குப் போடுகிறோம் இல்லையா? அந்த தேசம் எல்லாம் அப்படியே பின் தங்கிப் போய் விட்டன.

No comments: