Monday 6 October 2014

மின்சார உற்பத்தி குறித்து பெருந்தலைவர்-காமராஜர் சொற்பொழிவு பாகம் 1

மின்சாரம் உற்பத்தி செய்வோம்


மேலை நாட்டினர் மின்சாரத்தைப் பயன்படுத்தி யந்திரங்கள் செய்தார்கள். மின்சாரத்தைப் பயன்படுத்தினதால் தொழில் முன்னேற்றம் ஏராளமாக ஆகிவிட்டது. தொழில் முன்னேற்றம் ஏற்கட்டதனால் நாடு பொருளாதார முன்னேற்றம் அடைந்தது. ஆனால், நம் நாடு பின் தங்கிய நாடாக இருந்து. அப்பொழுது நமக்குத் தொழில் எல்லாம் பின் தங்கிப் போய்விட்டது. சுயராஜ்யம் வந்த பிறகுதான் நாம் முன்னேறியுள்ளோம். நாமும் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது எப்படியென்று யோசித்தோம். மின்சாரத்தைப் பயன்படுத்தினால் ஏராளமான தொழில் வளர்ச்சி பெறலாம் என்று சொல்ல வேண்டியதில்லை. தொழில் வளம் பெருகும். மின்சாரத்தைப் பயன்படுத்தினால் மட்டும் போதுமா மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றால் மின்சார உற்பத்தி பண்ட வேண்டியிருக்கிறதில்லையா? மின்சார உற்பத்திக்கு எங்கே போகிறது. அதற்கு வேண்டிய இயற்கை வசதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மின்சாரத்தையும் தண்ணீரிலிருந்துதான் உற்பத்தி பண்ணுகிறோம். காவேரித் தண்ணீர் வந்து எப்படி விவசாயத்திற்குக் கால்வாய் வெட்டி விவசாயம் பண்ணுறோமோ அது மாதிரி தொழில் நடத்த வேண்டும் என்று சொன்னால் மின்சாரத்தை உற்பத்தி பண்ண வேண்டும். மேட்டூரிலே ஏற்கனவே மின்சார உற்பத்தி இருக்கிறது. அது போதவில்லை. அதே போல இப்பொழுது உற்பத்தி பண்ணணும். ஒரு வருஷத்திலே 7 மாதத்திற்கு மேலே காவேரியிலே தண்ணீர் விடுறோம் இல்லையா. மீதி தண்ணீர் ஏன் வீணாகப் போகணும்? அதற்காக பழையபடி உயரத்திற்குக் கொண்டு வந்து அணைகட்டி, நீரைத் தேக்கி வைத்து, குழாய் மூலம் அதை அனுப்பி மின்சாரம் பண்ணுகிறோம். அதே மாதிரி பவானி ஆற்றிலேயும் குந்தா என்று ஒரு திட்டம் போட்டு இருக்கிறோம். நம்முடைய மதிப்பிற்குரிய தலைவர் நேருஜி அவர்கள் சென்ற மார்ச்சு மாதம் அதைத் திறந்து வைத்தார். இது ஒரு பெரிய திட்டம். இதைப்போல் பெரியாரில் ஒரு திட்டம். எத்தனையோ இடத்திலே திட்டம் போட்டும்கூட அத்தனையும் போதவில்லை. எவ்வளவு மின்சாரத் திட்டம் உற்பத்தி பண்ணியும்கூட மின்சாரத் தட்டுப்பாடு இருந்துகொண்டே இருக்கிறது.
இயற்கைத் தண்ணீரை வைத்துக்கொண்டு மின்சார உற்பத்திசெய்ய முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். ஏன் அப்படி இருக்கிறோம்? நமக்குத் தேவை அதிகரித்து வருகிறது. இப்பொழுது எதற்கெடுத்தாலும் மின்சாரம் கேட்கிறார்கள். விவசாயத்திற்கு மின்சாரம் கேட்கிறார்கள். மாடு கட்டி தண்ணீர் இறைத்தால் 1 ஏக்கர் தண்ணீர்தான் பாயும். பம்பு செட்டு வைத்தால் எவ்வளவு ஏக்கருக்கு வேண்டுமானாலும் பாய்ச்சலாம். 10-15 ஏக்கருக்குத் தண்ணீர் பாயும். தண்ணீர் இல்லை என்றால் ஆழமாக்க் கூட தண்ணீர் எடுக்கலாம். 150 அடிக்குக் கீழே இருந்துகூட தண்ணீர் எடுக்கலாம். அதையெல்லாம் மின்சாரத்தாலேதான் செய்ய முடியும். அதோடு மட்டுமல்ல. தொழில் செய்ய மின்சாரம் வேண்டியிருக்கிறது. பெரிய பெரிய தொழிற்சாலை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது அல்லவா. அந்த மின்சாரத்தை வைத்துக் கொண்டுதானே தொழிற்சாலை ஏற்படுத்த முடியும். கிராமங்களுக்கெல்லாம் வெளிச்சம் வேண்டி இருக்கிறது, இதற்கெல்லாம் நாம் இப்பொழுது ஏற்படுத்தக்கூடிய மின்சார நிலையத்திலிருந்து போதவில்லை மின்சாரம். இன்னும் பிதிபாக மின்சார உற்பத்தி பண்ண வேண்டியிருக்கிறது. நெய்வேலியிலே உற்பத்தி பண்ணப் போகிறோம். மின்சார உற்பத்தியைப் பண்ணுவதன் மூலமாக மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்ன? இவை எல்லாம் உற்பத்தியாகிற காலத்திற்குள் இன்னும் இரண்டு பங்கு தேவை அதிகமாகிவிடும். அதற்கு இது போல இரண்டு பங்கு மின்சாரம் தேவைப்படும். அப்புறம் புதிதாக எங்கே இருக்கிறது என்று கண்டு பிடிப்போம். நம் நாட்டிலே இதற்கு வரம்பு கிடையாது.

No comments: