Thursday 16 October 2014

தமிழ் தாய் வாழ்த்தின் முழு வடிவம்

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமு மதிற்சிறந்த திராவிடநற் றிருநாடும்
அத்திலக வாசனைபோ லனைத்துலகு மின்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே பொன்றுபல ஆயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.

இந்த பாடல் மனோன்மணீயம் என்ற நாடக நூலில் வருகிறது. நாடகத்தில் கடவுள் வணக்கத்திற்கு அடுத்ததாக தமிழ்த் தெய்வ வணக்கத்தில் வருகிறது. இதை எழுதியவர் பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை. தமிழ் மொழியில் சிறந்த நாடக நூலில் இதுவும் ஒன்று. சிவப்பு வண்ணத்தில் உள்ள வரிகளை எடுத்து விட்டு நமது தமிழ் மாநிலத்தின் தமிழ்த் தாய் வாழ்த்தாக அமைத்துக் கொண்டனர்.

விளக்கம்:-
நீலக் கடலை வண்ண ஆடையாக உடுத்திய நிலமகளுக்குப் பாரத நாடு முகமாக விளங்குகிறது.
அதன் பிறை போன்ற நெற்றியில் தெற்குப் பகுதி ஒளிர்கிறது.
அந்த நெற்றியிலே இட்ட திலகமாக தமிழ்நாடு திகழ்கிறது.
அத்திலகத்திலிருந்து பரந்து செல்லும் நறுமணம் தான் தமிழ்த்தாய் (தமிழ் மொழி).
அந்த நறுமணத்தின் மூலம் அனைத்து உலகும் இன்பமுறுகிறது.
அதனால் அகில உலகிலும் புகழ்பெற்றுச் சிறக்க வீற்றிருக்கிறாள்.

பல உலகங்களையும் உயிர்களையும் படைத்துக் காத்து ஒடுக்கும் பரம்பொருள் போல் இன்னும் என்றும் இளமையாகவே இருக்கிறாள் தமிழ்த்தாய்.
தமிழ்த்தாயின் மயக்குறு மக்களே கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் துளுவும்.
தமிழ்மொழி பரம்பொருள் போன்றது. ஆதலால் ஆரிய மொழி போல் உலக வழக்கொழியாதது, இறவாதது. என்றும் இளமைப் பொலிவுடன் வாழ்வது; வான்புகழ் பெறுவது.
உன் கன்னித்தன்மையைப் புகழ்ந்து, எங்கள் செயல்மறந்து, உன் வயப்பட்டு உலகினர் அனைவருமே இறைஞ்சுகின்றோம்

No comments: