Monday 1 February 2016

ஒழுக்கம் வழுவாத சுதந்திரம்....

நான் பள்ளி கல்லூரியில் படித்த காலத்தில் சினிமா டிக்கட் 10 ரூபாய்குள்தான்! அப்போதே சினிமாவுக்கு செல்ல செலவுக்கு 100 ரூபாய் குடுத்தனுப்புவார் என் ஐயா! எங்கள் வீட்டில் நன்பர்களுடன் திரைப்படம் பார்க்கவோ, உணவகம் செல்லவோ தடை இருந்ததே இல்லை. நன்பர்களின் பெற்றோர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் எப்பொழுதும் தொடர்பில் இருந்ததால், நன்பர்களுக்கு எப்பொழுதும் எங்கள் வீட்டில் சிறப்புண்டு!

#Conditons_Applied:
1. கொண்டு செல்லும் பணம் முழுக்க செலவு செய்யலாம் ஆனால் செலவுக்கு கணக்கு சொல்ல வேண்டும்!

2. சொன்ன நேரத்திற்கு வீடு திரும்ப வேண்டும்!

3. இரவு நேர ஆட்டதிற்கு செல்லக் கூடாது.

4. புதுப் படம் பார்க்க கும்பலில் நிற்கக் கூடாது. முக்கியமாக முதல் நாள் படம் போகக் கூடாது.

5. நடிகர் சங்கம், நடிகர்கள் துதி பாடும் நடவடிக்கைகள் கூடாது.

6. தீய பழக்கங்கள் அறவே கூடாது.

7. உணவகமோ, திரை அரங்கமோ தகராறு நடக்குமிடத்தில் நிற்கக் கூடாது.

மிக சுலபமான கண்டிசன்களாக இருக்கலாம். ஆனால் பை நிறைய பணத்துடன் இவற்றை செயல்படுத்துவது கடினம்.

பொய் சொல்ல முடியாது. வீட்டிலும், கடையிலும் மட்டுமே ஐயா இருப்பார், கை பேசி இல்லாத காலம்! ஆனால் இன்ன நேரத்தில் இந்த இடத்தில் உங்கள் மகன் இருக்கிறார் என்ற தகவல் தானாய் போய் சேரும்.

எனக்கு அடையாளம் தெரியாத நபர்களுக்கு கூட நான் இன்னாரது மகன் என்பது தெரிந்திருக்கும். தவறான இடத்தில் இருந்தால் "தம்பி முதலாளி வீட்டு பையனுக்கு இந்த மாதிரி இடத்தில் என்ன சோளி? கிளம்புங்க தம்பி!" என்பார் பார்த்தவர். அடுத்த நிமிடமே ஐயாவுக்கும் தகவல் போய் சேரும்.

அளவு கடந்த சுதந்திரம், அதே நேரத்தில் தண்டனைகளும் கடுமையாகவே இருக்கும். அம்மாவெல்லாம் இந்த விசயத்தில் ஐயாவை சமாதானம் பண்ண முடியாது. இரவு சொன்ன நேரத்திற்கு 5 நிமிடம் தாமதமாக வந்தாலும் கதவு திறக்கப்பட மாட்டாது. இரண்டு வேளை உணவு கட்! அடித்தால் தோல் பெல்ட்டால் மட்டுமே அடிப்பார்!

கேட்கும் பணம், கேட்காத பொருள், நினைத்துப் பார்க்காத சுற்றுலா, முழு சுதந்திரம் எல்லாம் உண்டு!!!
#But_Conditions_Applied!!

No comments: