Friday 5 February 2016

எங்க ஐயா கூட முடி வெட்டிய காலம்...

நான் சின்னப்பையனாக இருக்கும் பொழுது முடி வெட்ட போக வேண்டும் என்றால் முதல் நாள் இரவே பரபரப்பாக இருக்கும். "நாளைக்கு முடி வெட்ட போகனும், சீக்கிரம் படுத்து தூங்குப்பா, அப்பதான் காலைல வெள்ளன எந்திரிக்க முடியும்" என்பார் எங்க ஐயா!

அடுத்த நாள் விடியலில் சூரியன் உதிக்கும் முன்னர் 5:15 மணிக்கெல்லாம் எழுப்பி, தூக்கத்தோடே தர தரவென இழுத்துச் சென்றுவிடுவார். மதுரை புது மகாளிப்பட்டி மார்க்கெட் அருகில் தான் சலூன் கடை. 5:30 மணிக்கே சலூன் கடைக்கார் பெரிய மீசையுடன் டீயை உரிஞ்சிய படியே கத்திக்கு தோல் வாரில் சானை தீட்டிக் கொண்டிருப்பார்!

எங்களை பார்த்ததும் "வாங்க முதலாளி. டீ சாப்பிடுறீங்களா? சின்ன முதலாளிக்கும் வெட்டனுமா?" என்பார். "ஆமாண்ணே! முடி காடு மாதிரி வளர்ந்து போச்சு" என்பார் ஐயா. முடி உண்மையில் காது வரைக்கும் கூட வந்திருக்காது! அவருக்கு அதுவே அதிகபட்சமாக தெரியும்! "மொதல்ல உங்களுக்கு வெட்டிறவா முதலாளி?" என கேட்பார் கடைக்காரர். "இல்லண்ணே... அவனுக்கு வெட்டி விட்றுங்க. அவன் முன்னாடி வீட்டுக்கு போய், ஸ்கூலுக்கு கிளம்பட்டும்!" என்பார் ஐயா.

ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டமாக இருக்கும் என்பதால் மற்ற நாட்களிலேயே முடி வெட்டுவார் ஐயா! கடைக்காரரும் சேரின் மேல் ஒரு பலகையை போட்டு, உட்கார வைப்பார். "தம்பிக்கு ஸ்டெப் கட்டிங்கா?!" என கேட்பார். "அதெல்லாம் ஒன்னும் வேணாம்! மிலிட்டரி கட், ஒட்ட வெட்டி விட்றுங்க! ஒரு வாரத்துல வளர்ந்துரும்!" என விறைப்பு காட்டுவார் ஐயா! நம்மிடம் கருத்து கேட்புக்கு வேலையே இல்லை! பழைய சர்பத் பாட்டிலில் இரும்பு  பைப்பை சொறுகி சர்ரென்று தண்ணீர் பீச்சி, அந்த கால மிசின் கட்டிங் கத்திரி ஒன்றை எடுப்பார் கடைக்காரர். அது கத்திரி மாதிரியும் இல்லாமல், இப்போது உள்ள மிசின் போலவும் இல்லாமல் விநோதமாக இருக்கும். வெட்டும் போது முடியை பிடித்து இழுக்க வேறு செய்யும்.

முடி கையிலே சிக்காத அளவுக்கு வந்த போதும் ஐயாவுக்கு திருப்தி வராது. "இன்னும் கொறைச்சிருங்கண்ணே... பயபுள்ள ரொம்ப ஆடுவான், வேர்த்து கொட்டும்" என்பார். கடைக்காரர் இன்னொரு ரவுண்டு வருவார்! நானும் தூங்கி முழித்திருப்பேன்! கண்ணாடியை பார்த்த உடனே கடைக்காரரை முறைப்பேன். அவரோ என்னை பரிதாபமாய் பார்ப்பார் "எப்படி இருந்த புள்ள இப்படி ஆயிருச்சே?!" என!

இதுக்கு மொட்டையே போட்டிருக்கலாமே என தோண்றும். சொல்ல தைரியம் இருக்காது. "தம்பி... நீ பேப்பர் வாங்கிட்டு வீட்டுக்கு போய் குளி, ஐயா முடி வெட்டிட்டு வந்துர்றேன்" என்பார் ஐயா! மறு பேச்சு பேசாமல் வீடு வந்து விடுவேன்! இது எல்லாமே 6:15 மணிக்குள் முடிந்திருக்கும்!! அம்மா "டேய் வீட்டுக்குள்ள வராத... வீடெல்லாம் முடியாகிரும்! கொல்லை பக்கம் வந்து நேரா பாத்ரமூக்குள்ள போயிரு என்பார் அம்மா. 6:30க்கெல்லாம் குளித்து விட்டு பள்ளி சென்றால், அங்கு சுகமாய் தூக்கம் வருவதோடு, "கரிச்சான் மண்டை" என்று பெயரும் கிடைக்கும்!!

இப்போதெல்லாம் சலூன் கடைக்காரர் கடை திறக்கவே 7:00 மணி ஆகிறது! நம் பிள்ளைகளும் கடையில் ஏசி இல்லையென்றால் முகத்தை சுழிக்கிறார்கள். கேட்டலாக் பார்த்து முடி வெட்டும் காலமாகி விட்டது!

No comments: