Monday 4 May 2015

பேருந்து பயணங்களில்...

இப்பொழுது தஞ்சையிலிருந்து திருச்சிக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்த பொழுது தப்படிக்கும் சிறுவர் ஒருவருடன் பேசும் வாய்ப்பு கிட்டியது. 14 வயது என்றார். 5ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறாராம். அதற்கு மேல் படிக்கவில்லை என கேட்டேன். "இல்லை சார், எனக்கு படிப்பு வரல" என்றார் அந்த சிறுவன். பரவாயில்லை தம்பி கொஞ்சம் முயற்சி பண்ணி படித்திருக்கலாமே என்றேன். சிரித்தார்! "வராததை ஏன் சார் வம்பா இழுக்கனும்? வர்றத பண்ணலாம்னு விட்டுட்டேன் சார்!" என்றார். சிறு வயதிலேயே பேச்சில் முதிரச்சி இருந்தது ஆனால் விரக்தி இல்லை!!

எந்த ஊர் எந்த ஊருக்கு சென்று திரும்புகிறார்கள் என விசாரிப்புகளுக்கு அப்புறம். தம்பி இதுல உங்களுக்கு என்ன வருமானம் வரும் என கேட்டேன். தினம் 500 ரூபாய் சம்பளம் என்றார். தம்பி போக்குவரத்து செலவு சாப்பாட்டு செலவெல்லாம் இருக்குதே என்றேன். இல்லை சார் போக வர சாப்பாடு செலவெல்லாம் அவங்களே பாத்துக்குவாங்க, அது போக 500 ரூபாய் என்றார். கொஞ்சம் யோசிக்கவே வைத்தது அவர் சொன்ன தினக்கூலி!!

தம்பி இது கோவில் திருவிழா நேரம். மற்ற நேரத்தில் இது போல் வேலை இருக்காதே என்றேன். இல்லை சார் அடுத்த மாசம் புதுக்ககோட்டை போகிறோம். மாசம் முழுக்க வேலை. பெரும்பாலும் விடுப்பு எடுக்க முடியாது. தினம் வேலை இருக்கும் என்றார்! கை வலிக்குது என நாமாக விடுப்பு எடுத்தால்தான் என்றார்!! கெட்ட பழக்கம் ஏதும் உண்டா என வினவினேன்! இல்லை சார் எங்க அண்ணன்தான் வாரத்துல ரெண்டு மூனு நாள் குடிப்பான் என்றார். அண்ணனுக்கு தினம் 750 ரூபாய் கூலியாம்!!

இன்னும் கொஞ்ச நாள்ல நானும் எங்க அண்ணனும் தனியா குழு தொடங்கிடுவோம் என்றார். அதற்குள் அவர் இறங்க வேண்டிய இடம் வந்தது. விடை பெற்றோம்!! எம்.காம் படித்து விட்டு விற்பனை பிரதிநிதியாக என் அலுவலகத்தில் பணிபுரிபவர் சம்பளம் பயணப்படி சேரத்து 14,000 ரூபாய். பயணச் செலவு போக 9,000 ரூபாய் மிஞ்சலாம். அவருக்கு புகைப்பழக்கம் உண்டு! எல்லாம் போக என்ன மிச்சம் பண்ணி விடப் போகிறார்!! பயணங்கள் நிறைய பாடம் கற்பிக்கின்றன!!!

No comments: