Friday 29 May 2015

பெருந்தலைவர் - சமயோஜிதம்



காமராஜர் ஆட்சியில் எல்லாக் கிராமங்களிலும் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. ஆனால் ஆயிரக்காணக்கான, இலட்சக்கணக்கான இந்தப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமே. அத்தனை பள்ளிகளுக்கும், ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு எங்கே போவது? இந்தக் கேள்வி எழுந்தது.
இதற்கும் ஒரு வழியைக் காமராஜரே கண்டுபிடித்துச் சொன்னார். அது என்ன?
”நாட்டிலே படித்துவிட்டு வேலை கிடைக்காமல், ஆயிரக்கணக்கான பேர்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம், ஓராசிரியர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக நியமித்து விடலாமே. ‘அ’ – ‘ஆ’ ன்னா ‘அம்மா, அப்பா – படம், பட்டம், மரம், மாடு’ ன்னு கற்றுத் தரப் பயிற்சி ஆசிரியர்தானா தேவை?” என்றார் காமராஜர்.

அன்றைய பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த திரு நெ.து. சுந்தர வடிவேலு இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டார். எங்கும் ஓராசிரியர்கள் பள்ளிகளுக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். பின்னர் அவரகளுக்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அரசு செலவிலேயே ஆசிரியர் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
அந்தக் கால ஆரம்பப்பள்ளிப் பாடத்திட்டத்தில் ,”அணில், ஆடு, இலை, ஈக்கள், உரல், ஊஞ்சல், எலி, ஏணி, ஐவர், ஒட்டகம்,ஓணான், ஔவையார், எஃகு என்றுதான் தொடக்கக் கல்விப பாடங்கள் இருந்தன. ‘ப – ட – ம்’ படம் என்றும், ‘ம -ர – ம்’ மரம் என்றும் எழுத்துக் கூட்டிப் படிப்பதும் இருந்தன.
இவைகளை எல்லாம் ஓராசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் ஒழுங்காக பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தார்கள்.
இந்த திட்டத்தினால், எத்தனையோ படித்த வேலையற்றவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைத்தன. 

No comments: