Sunday 17 May 2015

நம்பிக்கை

இது ஒரு தன்னம்பிக்கை கதை மட்டுமே. கருத்தை மட்டும் கவனிக்க வேண்டும் உள்ளர்த்தம் கற்பிக்க வேண்டாம்...

கலிகாலத்தில் மனிதர்களின் அட்டூழியங்களையும் அதர்மங்களையும் பார்த்த கடவுள் மனிதர்கள் மீதான நம்பிக்கையும் பற்றும் அற்றுப் போய் விடுகிறார். கொத்து கொத்தாய் இனப் படுகொலைகள், மதப் படுகொலைகள், வன்முறைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் என மனிதர்களின் அட்டூழியங்களை கண்ட கடவுள் வெறுத்துப் போய் விடுகிறார்! விவேகானந்தர், அன்னை தெரசா என நல்லவர்களை அனுப்பியும் இவர்கள் திருந்தவில்லை!

கடைசியில் வெறுத்துப் போனவர் இனி இவர்களுக்கு மழை பொழியும் மந்திரம் உச்சரிக்கப் போவதில்லை என முடிவெடுத்து விடுகிறார்! பூமியில் மழை பொழிவு நின்று விடுகிறது! பூமி முழுக்க வறட்சி பஞ்சம் என கோரம் தாண்டவமாடுதிறது. குளிக்க தண்ணியில்லை, குடிக்க தண்ணியில்லை விவசாயத்துக்கு வழி இல்லை என ஆகிறது.

ஒரு வழியாக குளிக்காமல் கழுவாமல் வாழப் பழகிவிடுகிறார்கள் மக்கள். யாருமே விவசாயம் பண்ணுவதில்லை. சும்மாவே காவேரியும் பெரியாறும் வருவதில்லை இதில் பல வருடமாக மழை இல்லையென்றால் எப்படி? மழை இல்லை விவசாயம் இல்லை என்பதால் மக்கள் சோம்பேறி ஆகி விடுகின்றனர்.

கடவுள் பிற்பாடு பூமியில் என்ன நிலமை என மனிதர் வேடத்தில் சுற்றிப் பார்க்க வருகிறார். பூமியில் நிலமை இன்னும் மோசமாக மக்கள் படு சோம்பேறியாக விவசாயம், வேலை வெட்டி எதுவும் பார்க்காமல் சோம்பேறியாக சுத்துகி்றனர். கடவுள் பாரத்துக் கொண்டே வரும் பொழுது ஒரே ஒரு மனிதர் மட்டும் வெடித்து பாலம் பாலமாக இருக்கும் அவரது வறண்ட நிலத்தை உழுது கொண்டிருக்கிறார்!

அதை பார்த்த கடவுளுக்கு இவன் லூசாக இருப்பானோ என சந்தேகம். அவனையே கூப்பிட்டுக் கேட்கிறார். ஏம்பா பல வருடமாக பூமியில் எங்கும் மழையே பொழிவதில்லை, நீ என்னடாவென்றால் உழுது கொண்டிருக்கிறாய்? எந்த நம்பிக்கையில் உழுகிறாய் என கேட்கிறார். அதற்கு அந்த மனிதர் ,"ஐயா, நீங்களோ நானோ என்ன கடவுளா மழையே பொழியாது என முடிவு பண்ண? என்றாவது ஒரு நாள் கடவுள் மனமிறங்கி மழையை பொழிய வைத்து விட்டால் விவசாயம் பார்க்க வேண்டுமே! அப்பொழுது நான் உழுவது, விதைப்பது போன்ற விவசாய கடமைகளை எப்படி செய்வது என மறந்து விட்டால் கஷ்டமல்லவா? அதனால்தான் உழுது கொண்டிருக்கிறேன்" என்றார்!

இதை கேட்ட உடன் இப்பொழுது கடவுளுக்கு பெருத்த சந்தேகம் வந்துவிட்டது! நாம் மழை பொழிய வைத்து பல வருடங்களாகி விட்டதே, மந்திரம் நினைவில் இருக்கிறதா இல்லையா என தெரியவில்லையே, எதற்கும் ஒரு முறை சொல்லிப் பார்த்துவிடுவோம் எனக் கருதுகிறார். அந்த இடத்திலேயே மந்திரத்தை உச்சரித்தும் பார்க்கிறார். உடனே மழை பொழிந்து விடுகிறது. மற்றவர் நிலமெல்லாம் தரிசாகக் கிடக்க உழுத அந்த ஒரு விவசாயியின் நிலத்தில் மட்டும் விவசாயம் பார்த்து அறுவடை செய்கிறார்! இதைப் பார்த்த கடவுளும் மனம் மாறி விடுகிறார்!

நம்பிக்கை அவசியம் மக்களே....

No comments: