Friday 8 May 2015

பெருந்தலைவர் - பாட்டாளி தலைவன்

விருதுநகரின் வடமேற்கு மூலையில் உள்ள கிராமம் மல்லன்கிணறு என்ற மல்லாங்கிணர். முழுமையும் ஏழை மக்கள் வாழும், வளர்ந்து வரும் புறநகர்ப்பகுதி. அங்கு ஒரு நூல் நூற்பு ஆலை உண்டு. பருத்தி வணிகத்தில் புகழ் பெற்ற விருதுநகர் பஞ்சு வணிகர்கள் லாரிகளிலும் இரட்டை மாட்டு வண்டிகளிலும் பென்னம் பெரிய பொதிகளை அந்த ஆலைக்கு அனுப்பி வைப்பர். விருதுநகர் எல்லையிலிருந்து மல்லங்கிணறுக்குள் நுழையும் பாதை சராசரியை விட சற்று உயர்ந்து செல்லும் ஒன்று. லாரிகள் இப்பாதையை எளிதாக கடந்து சென்று விடும். ஆனால் இரட்டை மாட்டு வண்டிகளுக்கு மூவர் துணை வேண்டும்.

ஒரு நாள் உச்சிவேளை, ஒரு பெரியவர் எவர் துணையுமில்லாமல் தன் இரட்டை மாட்டு வண்டி நிறைய பஞ்சு பொதியை ஏற்றிக்கொண்டு ஆலையை நோக்கி விரைந்தார். ஆனால் மேட்டில் ஏறும்போது பொதிகளின் பளு பின்னால் அழுத்த மாடுகள் இரண்டும் கட்டப்பட்ட ஏர்க்கால்களோடு முன்னம் கால்களை தூக்கி தொங்கின. வீதியில் பலர் குரல் கொடுத்தனர். உதவ முன்வரவில்லை. ஆனால் வண்டியின் பின்னால் வந்து கொண்டிருந்த கருப்பு வண்ணக்காரில் அமர்ந்திருந்த காமராஜர் நிலைமையை உணர்ந்து மின்னல் வேகத்தில் காரை விட்டிறங்கி தொங்கிக்கொண்டிருந்த மாடுகளின் முன்புறம் வந்து ஏர்க்காலை தன் பலங்கொண்ட மட்டும் பிடித்து தொங்கினார். மாடுகள் முன்னங்கால்களை தரையில் ஊன்றின. ஒரு மாட்டின் கழுத்து கயிற்றை அவிழ்த்து விட்டார். வண்டியோட்டி வந்த பெரியவர் கீழிறங்கி தன் பங்குக்கு மற்ற மாட்டையும் அவிழ்த்து விட்டார்.

இதற்குள் கூட்டங்கூடி விட்டது. காமராஜர் மக்களிடம் பேசினார். "ஏம்பா! வண்டிகள் ஏற சிரமப்படுகிற இந்த மேட்டை சமதளமாக்க வேண்டாமா? முனிசிபாலிட்டி என்ன செய்கிறது? ரெண்டு, மூன்று நாள்களிலேயே இதை சரி செய்ய சொல்கிறேன்'' என்று கூறி விட்டு காரிலேறினார்.

நன்றி : மாலைமலர் 

No comments: