Thursday 21 May 2015

அவதார புருசர்!

பெருந்தலைவரை பற்றி படிக்கும்போது, கேட்கும்போது,  எழுதும்போதெல்லாம் எப்போதும் வியந்து கொண்டே இருந்திருக்கிறேன். அவரைப் போல் நேர்மையானவர்கள் யாரும் அரசியலில் அவர் உயரத்திற்கு வந்ததில்லை. அரசியலில் அவர் உயரத்திற்கு வந்தவர்கள் யாரும் அவரளவிற்கு நேர்மையாய் இருந்ததில்லை! நேர்மை மட்டுமா அவருக்கு இந்த உயரத்தை குடுத்தது? கக்கன் அவர்களும் நேர்மையாளர்தானே? பெருங்கல்வி கற்றவரா? இல்லை! அரசியல்வாதியின் வாரிசா? இல்லை! சாதிப் பின்புலமா? சிரிப்புதான் வரும்! அவர் காலத்தில் அவருக்கு எதிர்த்து பலமாய் அரசியல் செய்ததே அவர் சாதியை சார்ந்த அரசியல்வாதிகள்தான். அவரது ஆளுமையா அவருக்கு இந்த உயரத்தை குடுத்தது? ராசாசிக்கும் தான் ஆளுமை இருந்தது!

பலருக்கும் நேர்மை இருந்தது. அவரது நேர்மை பிறரது நேர்மையை போல் அல்ல! அவரது நேர்மையில் துணிவிருந்தது. (அதை இப்போது சகாயத்திடம் பார்க்கிறேன், ஆனால் அவர் அரசியலில் இல்லை!) தாய் பாசத்தை மீறிய நேர்மையும் ரத்த பாசத்தை மீறிய கடமை உணர்ச்சியும் இருந்தது பெருந்தலைவரிடம். அவர் நேர்மையை கடமையாக கருதவுமில்லை, செயற்கையாகவும் அவர் நேர்மையாக இருக்க முயற்சிக்கவில்லை! அது அவர் இயல்பிலேயே இருந்தது! பெருங்கல்வி அவர் கற்கவில்லைதான்! கல்வியாளர்களை மிஞ்சிய பூகோள அறிவும், சிந்தனா சக்தியும், ஆட்சித்திறனும் கொண்டிருந்தார்.  கல்வி என்பது திறனை அதிகரிக்கத்தான் எனும் பொழுது, இயல்பாகவே திறன் பெற்றவருக்கு கல்வி தேவைப்படவில்லை! மொழியை அவர் அனுபவத்தில் கற்றுக் கொண்டார்.

அரசியல்வாதியின் வாரிசோ, அரசியல் செல்வாக்கோ அவர் பெற்றிருக்கவில்லைதான். ஆனால் பதவி அவரை தேடி வந்தது. பதவியை அவர் சுமையாக நினைத்தாலும், மக்கள் சேவைக்கான களமாக விரும்பி ஏற்றுக்கொண்டார். முதல்வரான பின்னரும் அவர் காமராஜராகவே இருந்தார். முதல்வர் என்ற எண்ணத்தை அவர் வளர்த்துக் கொள்ளவில்லை, அதை ஒரு அரசுப் பணியாக நினைத்தே பணியாற்றினார்! செல்வாக்கை அவர் வளர்த்துக் கொள்ளவில்லை! பதவியும் செல்வாக்கும் அவரை தேடியே வந்தன. சாதிப் பிண்புலம் இல்லாதவரை இன்று அவரது சமூகமே தெய்வமாக போற்றி புகழும்படி செய்து விட்டார். என் சாதிக்கு என் துணை தேவையில்லை, அவர்கள் எப்படியும் பிழைத்துக் கொள்வார்கள் என நம்பினார். (அந்த நம்பிக்கை அவர் ஊர்க்காரர்களுக்கு இல்லாமல் போனது சோகம்!!) எங்கள் சாதியில் அவர் பிறந்தார் என கூறுவதை விட அவர் சாதியில் பிறந்தவர்கள் நாங்கள் என பெருமைப்படும்படி இயல்பாகவே வாழ்ந்து காட்டி விட்டார். அவரை தோற்கடித்த மக்கள் எந்நாளும் வருந்தும்படி வாழ்ந்துவிட்டார்!

இதை செய்யுங்கப்பா தில்லியில் கேட்டா நான் பேசிக்கிறேன் என்பார்! அது நேர்மையால் பிறந்த ஆளுமை! நேர்மையாய் மக்களுக்கு நல்லது செய்ய யாருக்கு அஞ்ச வேண்டும் என்ற துணிவு. எந்த அதிகாரியையும், அமைச்சரையும், அரசியல்வாதிகளையும் அவர் மிரட்டியதாக சரித்திரமில்லை ஆனால் அவர் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்பட்டனர். அவர் அனபுக்கு கட்டுப்பட்டனர் என சினிமா வசனமெல்லாம் நான் எழுதப் போவதில்லை! ஆனால் அவர் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்பட்டனர். அவர் சொல்வன்மை மிக்கவர் இல்லை ஆனால் சொல்வதை எளிமையாக சுருக்கமாக ஆளுமையுடன் சொல்பவராக இருந்தார். ஆளுமை அவர் பிறவிக் குணமாகவே இருந்திருக்கிறது! நேர்மை, கல்வியறிவு, அரசியல் ஆற்றல் சமூகப்பின்புலம், ஆளுமை எல்லாம் ஒருங்கே இயல்பாய் பெற்றவர்களை நாம் இதிகாசங்களிலும், புராணங்களிலும் தான் பார்த்திருக்கிறோம்!!

அந்த வகையில் பெருந்தலைவர் அவதார புருசர்தான்!!

No comments: