Friday 16 January 2015

பழனிக்குமார் நாடார் அவர்களின்-பெர்ரிஸ் பிஸ்கட்ஸ்

மதுரையில்

நாடார் சமூகத்தின் பிஸினஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது மதுரை மாநகரம். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே பிஸினஸில் தங்களது பங்கை நிலைநாட்ட ஆரம்பித்த நாடார்கள், மெள்ள மெள்ள மதுரை நோக்கி இடம் பெயற ஆரம்பித்தார்கள். ரயில் போன்ற போக்குவரத்து வசதிகள் மதுரையில் அப்போதே இருந்தது இதற்கு முக்கியமான காரணம்.

பூர்வீகம்

அதே சமயத்தில் விருதுநகரிலிருந்து புலம்பெயரத் தொடங்கிய நாடார்கள் உசிலம்பட்டி வழியாக தேனிக்கு இடம் பெயற ஆரம்பித்தார்கள். தேனியில் நறுமணப் பயிர்களின் வர்த்தகம் பெருமளவில் இருந்ததே இதற்கு முக்கிய காரணம்.
அப்படி புலம்பெயர்ந்த நாடார்களில் ஒருவர்தான், கந்தசாமி நாடார். இவர் உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள கொப்புளிபட்டியை பூர்வீகமாகக் கொண்டவர். இவருடைய மகன் பழனிக்குமார் நாடார், எண்ணெய் கடை ஒன்றை நடத்தி வந்தார். பர்மாவிலிருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்து விற்று வந்தார் அவர்.



பிஸ்கட் தொழில்

குடும்பத் தொழிலான எண்ணெய்க் கடை ஒருபக்கமிருக்க, புதிதாக வேறு ஏதாவது ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்க வேண்டும் என்பது பழனிக்குமாரின் ஆசை. என்ன செய்யலாம் என்று யோசித்தபோது பிஸ்கட் தயாரிக்கும் ஐடியா உதித்தது.
பிஸ்கட் என்பது ஆங்கிலேயர்களின் கண்டுபிடிப்பு. வெள்ளைக்கார துரைமார்கள் மட்டுமே அதை சாப்பிட்டு வந்தனர். வெளிநாட்டுக்குச் சென்றுவந்த ஒரு சில பணக்காரர்களும் பிஸ்கட்டை சாப்பிட்டனர். இதனால், சாதாரண மக்களுக்கும் பிஸ்கட் சாப்பிட வேண்டும் என்கிற ஆசை பிறந்தது. ஆனால், அப்போது பிஸ்கட் தயாரிக்கிற கம்பெனி எதுவும் உள்நாட்டில் இல்லை. அப்படியே இருந்தாலும் அந்த தயாரிப்புகள் சாதாரண மக்களைச் சென்றடையவில்லை. இந்நிலைமையில் சாதாரண மக்களும் சாப்பிடுகிற மாதிரி குறைந்த விலையில் தரமான பிஸ்கட்டை தயாரித்து விற்பனை செய்ய நினைத்தார் பழனிக்குமார் நாடார்.

உசிலம்பட்டியில்
இத்தொழிலை மதுரை போன்ற பெரிய நகரத்தில் ஆரம்பித்தால் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும். ஆனால், மதுரையில் தொடங்காமல் உசிலம்பட்டியில் தனது பிஸ்கட் தொழிற்சாலையைத் தொடங்க முடிவு செய்தார். காரணம், மதுரையில் தொழிற்சாலைக்கான இடம் பிடிப்பது கடினம்; தவிர, மூலப் பொருளான பசும்பால், நெய் போன்றவை கிராமங்களிலிருந்து வாங்கிக்கொண்டு வரவேண்டும். மேலும், குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்கள் கிடைக்கவும் மாட்டார்கள். இந்த பிரச்னைகளை எல்லாம் சமாளிப்பதற்கு ஏற்ற இடம் உசிலம்பட்டிதான் என்று நினைத்தார் அவர். அவர் முடிவு சரியாகவே இருந்தது. குறைந்த சம்பளத்தில் உசிலம்பட்டியில் நிறைய பேர் வேலைக்கு கிடைத்தனர். இதனால் அந்த பகுதியில் பலருக்கும் வேலை கிடைத்தது.
புதிதாக ஆரம்பிக்க இருக்கும் பிஸ்கட் தொழிலுக்கு டி.பி.திருவண்ணாமலை நாடார், பொன்னப்ப நாடார் ஆகிய இருவரையும் பார்ட்டனர்களாகச் சேர்த்துக் கொண்டார் பழனிக்குமார் நாடார். 1917-ல் ரூ.500 முதலீட்டில் கே.கே.பி.டி. அண்ட் கோ என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். சிறிய அளவில்தான் பிஸ்கட் தயாரிப்பு வேலைகள் நடந்தாலும் ஆரம்பம் தொட்டு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
சில ஆண்டுகளில் திருவண்ணாமலை நாடார் காலமானார். இதன்பிறகு திருவண்ணாமலையின் சகோதரர் பெரியசாமி நாடார் இந்த நிறுவனத்தின் பார்ட்னர் ஆனார். சில ஆண்டுகள் கழித்து பொன்னப்ப நாடாரும் காலமாகவே, அவருக்கு வாரிசு இல்லாததால், பழனிக்குமார் நாடாரும், பெரியசாமி நாடாரும் மட்டுமே பிஸ்கட் தொழிலை மேற்கொண்டு செய்ய ஆரம்பித்தனர்




பெர்ரிஸ் உதயம்
இந்த நேரத்தில் கே.கே.பி.டி. என்றிருந்த கம்பெனியின் பெயரை மாற்றினார் பெரியசாமி நாடார். தனது பெயரை கொஞ்சம் சுருக்கி பெரி அண்ட் கோ என்று பெயர் மாற்றம் செய்தார் அவர். தவிர, பழனிக்குமாரின் மருமகன் அய்ய நாடார் இந்த பிஸ்கட் கம்பெனியின் நிர்வாகத்தை மேற்கொள்ளத் தொடங்கினார். இதற்கு பிறகுதான் இந்நிறுவனம் வளர்ச்சி வேகமாக வளர ஆரம்பித்தது. மதுரை மாவட்டத்தில் மட்டுமே விற்பனையாகி வந்த இந்நிறுவனத்தின் பிஸ்கட்களை தமிழகம் முழுக்க கிடைக்கிறபடி செய்தார் அய்ய நாடார்.
1933-ல் கும்பகோணத்தில் மகாமகம் நடந்தது. இந்த மகாமகத்தில் பல லட்சம் மக்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய சுதேசி மகாமகம் கண்காட்சியில் தனது தயாரிப்புகளான பிஸ்கட்களை மக்களின் பார்வைக்கு வைத்தார். இதன் விளைவாக, பெருவாரியான மக்கள் இந்த பிஸ்கட் பற்றி தெரிந்துகொண்டனர். தவிர, சிறந்த நிறுவனத்திற்கான வெள்ளிப் பதக்கமும் இந்நிறுவனத்திற்கு கிடைத்தது.
உசிலம்பட்டி பஞ்சாயத்து போர்டு 1937, 38 ஆண்டுகளில் 'சிறந்த குழந்தை உணவு’ என்கிற பாராட்டுச் சான்றிதழை பெரீஸ் நிறுவனத்திற்கு வழங்கியது. அதைவிட முக்கியமான விஷயம், இந்திய ராணுவ வீரர்களுக்கு வழங்கும் ஆர்டரும் கிடைத்தது.
இத்தனைக்கும் 1930-களில் போக்குவரத்து வசதிகள் பெரிய அளவில் இல்லை. மும்பையிலிருந்து மைதா மூட்டைகள் திருமங்கலம் ரயில் நிலையத்தில் இறக்கப்பட்டு, அங்கிருந்து மாட்டு வண்டியில் ஏற்றப்பட்டு, உசிலம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிஸ்கட் தயாரிப்புக்குத் தேவையான எசென்ஸ்கள் வெளிநாடுகளிலிருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட்டது.
அப்போது டீசல், பெட்ரோல் இன்ஜின்கள் மூலம் இயங்கும் போக்குவரத்து வாகனங்கள் கிடையாது. கரி இன்ஜின்கள் பொருத்தப்பட்ட வேன்கள் மூலம்தான் தமிழகம் முழுக்க பிஸ்கட் பாக்கெட்டுகள் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

பெர்ரிஸ் மிட்டாய்கள்

1950-களுக்குப் பிறகு மிட்டாய் தயாரிப்பிலும் இறங்கியது பெரீஸ் நிறுவனம். தமிழ்நாடு தவிர கேரளத்திலும் தனது நிறுவனத்தின் தயாரிப்புகளான பிஸ்கட் மற்றும் மிட்டாயை விநியோகம் செய்தது. இப்படி செய்ததை சென்னையில் இயங்கி வந்த பாரி அண்ட் கோ நிறுவனம் ஆட்சேபித்து, மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கு தள்ளுபடியாகவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் 1969-ல் மேல்முறையீடு செய்தது பாரி நிறுவனம். ஆனால், சென்னை உயர்நீதிமன்றமும் அந்த வழக்கை தள்ளுபடி செய்து, இரண்டு நிறுவனங்களும் தனித்தனியாக எங்கு வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாம் என்று தீர்ப்பு தந்தது.
இதன்பிறகு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிஸ்கட் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது பெரீஸ் நிறுவனம். இங்கிலாந்தில் மோனோ (விஷீஸீஷீ) என்கிற பிரபலமான பிஸ்கட் தயாரிக்கும் இயந்திரத்தை இறக்குமதி செய்து, அதன் மூலம் பிஸ்கட் தயாரிக்க ஆரம்பித்தது. இப்படி படிப்படியாக வளர்ச்சி அடைய ஆரம்பித்த இந்நிறுவனம் 2004-ல் ஸ்ரீ பாண்டியன் பேக்கர்ஸ் என்னும் நிறுவனத்தை வாங்கி, தன்னுடன் இணைத்துக் கொண்டது.
தற்போது மதுரைக்கு அருகில் உள்ள நகரியில் நவீன தொழில்நுட்பத்துடன் பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறது பெரீஸ் நிறுவனம். நாளன்றுக்கு 2,000 டன் பிஸ்கட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி ஆவது முக்கியமான விஷயம். கிட்டத்தட்ட 93 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பமான இந்நிறுவனத்தை பழனிக்குமார் நாடாரின் கொள்ளுப் பேரன்களான மகேந்திரவேலும், பாலசுப்பிரமணியமும் அடுத்த கட்டத்தை நோக்கி கொண்டு செல்வதில் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

No comments: