Friday 23 January 2015

பெருந்தலைவர்-காமராஜர் எனும் தேசியவாதி

இப்போது தமிழ்நாட்டில் நடப்பது அரசியல் கட்சிகள் தொகுதிகளில் வாக்குகள் சிதறாமல் தமது வெற்றிக்கு உத்தரவாதம் கிடைக்க வேண்டும் என்பதற்கான உத்தியாக மேற்கொள்ளும் சுயலாபத் தொகுதி உடன்பாடு தானேயன்றி மக்கள் நலன் கருதித் தமது நலன்களை விட்டுக்கொடுத்துக் குறைந்த பட்ச செயல் திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்கிற பொதுநலன் அல்ல. இது அரசியல் கட்சிகளின் கடைந்தெடுத்த சுயநலமே தவிர வேறு ஏதுமில்லை. கூட்டணி என்ற பெயரில் இப்படியொரு சுயலாப வேட்டையில் காங்கிரஸை ஈடுபடுத்தி அதன் சுயமரியாதையைக் குலைக்க காமராஜர் என்றுமே விரும்பியதில்லை.




1967 தேர்தலின்போது அண்ணா மிகச் சாமர்த்தியமாக நவக்கிரகங்களாக இருந்த கட்சிகளையெல்லாம் அவரவர் செல்வாக்கிற்கு ஏற்பக் குறிப்பிட்ட சில தொகுதிகளில் சிரமப்படாமலேயே வெற்றி பெறலாம் என ஆசை காட்டி, தொகுதி உடன்பாடு என்ற பெயரில் எல்லாக் கட்சிகளையும் காங்கிரசுக்கு எதிராக ஒன்று திரட்டியபொழுது காமராஜர் எவ்வித மாற்று வியூகமும் வகுக்காமல் போனதற்குக் காரணம் மிதமிஞ்சிய நம்பிக்கை மட்டுமல்ல; மாறுபட்ட கொள்கைகள் உள்ள கட்சிகளுடன் வெறும் தொகுதி உடன்பாடு செய்துகொள்வது ஒரு தவறான முன்மாதிரி என்றே அவர் கருதினார். தேர்தல் சமயத்தில், “படுத்துக் கொண்டே ஜெயிப்போம்” என்று காமராஜர் சொன்னது என்னவோ நிஜமே. அதற்கு அண்ணா, “படுக்கலாம் ஆனால் ஜெயிப்பது சந்தேகம்” என்று சொன்னதும் அதற்கு இணங்க காமராஜர் விபத்துக்குள்ளாகி கால் முறிவு ஏற்பட்டுப் படுக்கையிலேயே இருக்க நேரிட்டதுங்கூட நிஜமே. ஆனால் காமராஜர் ஒரு வழக்கமான தேர்தல் பிரசாரப் பேச்சாகத்தான் அவ்வாறு கூறினாரேயன்றி மிதமிஞ்சிய நம்பிக்கையினால் அல்ல. தேர்தலின்போது மக்களிடையே ஓர் அபிப்ராயத்தைத் தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவே எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் நாங்கள்தான் ஜெயிப்போம் என்று சொல்வதுண்டு அல்லவா?)


அண்ணாவின் வியூகம் காங்கிரசுக்குப் பெருத்த சேதம் விளைவிக்கக்கூடும் என்கிற உளவுத்துறையின் முன்னெச்சரிக்கை உரிய தருணத்தில் வந்தும் காமராஜர் அதைப் பொருட்படுத்தவில்லை. அக்கால கட்டத்தில் அவர் வலதுசாரி கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட், ஃபார்வர்டு பிளாக் போன்ற கட்சிகளைத் தம்பக்கம் இழுத்து மாற்றுத் தொகுதி உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள முயற்சி எடுத்திருந்தால் 1967தேர்தலில் காங்கிரஸ் அத்தனை மோசமாக வீழ்ச்சியடைந்திருக்காது. எவ்விதக் கொள்கை அடிப்படையும் இன்றி பல்வேறு உதிரிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்துகொள்வதில் காமராஜருக்குச் சம்மதம் இல்லாமற் போனமைக்கு, பாரம்பரியமான தேசிய நலன் என்கிற தேசிய உணர்வின் பாற்பட்ட விழுமியங்கள் அவர் மனதில் ஆழப் பதிந்து விட்டிருந்ததுதான் காரணம் எனலாம்.




ஆகவே, காமராஜர் தேசிய உணர்வில் எந்த அளவுக்கு உறுதிப்பாட்டுடன் இருந்தார் என்பதற்கு மேலும் இரு சம்பவங்களைச் சொல்கிறேன். 1972-ல் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டு அவர் தனிக் கட்சி தொடங்கும் வேளையில் ராஜாஜி, காமராஜர், ஈ.வே.ரா. என அன்றைக்கு இருந்த எல்லாப் பெருந் தலைவர்களையும் சந்தித்து நடந்தவைகளைக் கூறித் தமக்கு ஆதரவு கோரினார். ராஜாஜி மனபூர்வமாக எம்.ஜி.ஆரை ஆசிர்வதித்தார். ஈ.வே.ரா.வோ, கருணாநிதி, எம்.ஜி.ஆர். இருவரும் சமரசமாகப் போய்விடுவதுதான் நல்லது என்றும் தான் வேண்டுமானாலும் கருணாநிதியிடம் பேசிப்பார்ப்பதாகவும் சொன்னார். ஆனால் எம்.ஜி.ஆர். தனித்து நிற்பதில் உறுதியாக இருந்தார். காமராஜரை எம்.ஜி.ஆர். சந்தித்துப் பேசியபொழுது காமராஜர் அமைதியாக எம்.ஜி.ஆர். சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாரேயன்றி எவ்விதக் கருத்தும் சொல்லவில்லை. அதன் பிறகு தமிழக அரசியலில் அண்ணா தி.மு.க. தோன்றி வளர்கையில் நிருபர்கள் அண்ணா தி.மு.க. குறித்து ஸ்தாபன காங்கிரசின் நிலைப்பாடு என்ன, தி.மு.க. இந்திரா காங்கிரசை எதிர்க்க அண்ணா தி.மு.க.வுடன் தொடர்பு வைத்துக் கொள்ளுமா என்றெல்லாம் கேட்டபோதுதான் காமராஜர் தமது மிகப் பிரபலமான, தி.மு.க., அண்ணா தி.மு.க. இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்ற பொன்மொழியை உதிர்த்தார்.


அதன் பின்னர்தான் கோவையில் மக்களவைக்கும் அத்துடன் ஒரு சட்ட மன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தலும் புதுவை மாநில சட்டமன்றத் தேர்தலும் வந்தன. அண்ணா தி.மு.க., வலதுசாரி கம்யூனிஸ்ட் இரண்டும் ஒன்று சேர்ந்து தி.மு.க.-வை எதிர்க்க முன்வந்தன. காமராஜரோ இந்திரா காங்கிரஸுடன் கூட்டுசேர்ந்து தேர்தல்களைச் சந்திக்கும் முடிவை எடுத்தார். ஸ்தாபன காங்கிரஸின் வட மாநிலத் தலைவர்கள் காமராஜரின் முடிவுக்குக் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால் தமிழ்நாட்டின் சூழல் வித்தியாசமானது; அது பிற மாநிலத்தவருக்குப் புரியாது என்று சொல்லி அவர்களின் ஆட்சேபத்தைக் காமராஜர் புறந் தள்ளினார். திராவிடக் கட்சிகளின் செல்வாக்கு தமிழ்நாட்டில் வேரூன்றுவது மக்களிடையே தேசிய உணர்வை மங்கிவிடச் செய்யும் என்பதால் தமது சுயமரியாதையையும் விட்டுக் கொடுத்து இந்திரா காங்கிரசுடன் உறவு பூண்டார், காமராஜர். அதிகார துஷ்பிரயோகம் செய்யும் தி.மு.க.வுக்குப் பாடம் புகட்ட அண்ணா தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கலாகாதா என்று நிருபர்கள் கேட்டபொழுது காமராஜர் மீண்டும் தமது பிரசித்தி பெற்ற ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்கிற வார்த்தைப் பிரயோகத்தை உபயோகித்தார்.


காமராஜர் முதல்வராக இருந்தபொழுதுதான் மொழிவாரி மாநிலப் பிரிவினை நடைமுறைக்கு வந்தது. எல்லைகளை வகுப்பதில் குளறுபடிகள் ஏற்பட்டு அப்போதே மாநிலங்களுக்கிடையே மனஸ்தாபங்கள் தோன்றத் தொடங்கி விட்டன. தெற்கே தேவிகுளம், பீர்மேடு, குமுளி உள்ளிட்ட இடிக்கி மாவட்டம் முழுவதுமே தமிழர்கள் அன்று மிகுதியாக இருந்த போதிலும் திருவிதாங்கூர்-கொச்சி பிரதேசம் என்ற நிலவரத்தை மாற்றி, தமிழர்கள் மிகுதியாக உள்ள பகுதிகளையும் சேர்த்து, தமிழ்நாட்டுடன் இணைந்திருந்த மலபாரையும் சேர்த்து மலையாள மொழிக்கான கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது. இவ்வாறு தமிழ்நாட்டின் தெற்கு எல்லை சுருங்குவதை எதிர்த்து தமிழரசுக் கழகத் தலைவர்ம.பொ.சிவஞானம் முன்னின்று மீட்புப் போராட்டம் தொடங்கினார். பலரும் அதனை ஆதரித்தனர். முல்லைப் பெரியாறு அணைத் தேக்கத்திற்கு நீர்வரத்து உள்ள தேவிகுளம் பீர்மேடு பகுதிகளாவது தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் தவறினால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் விவசாயத்திற்குப் போதிய பாசன வசதியின்றி சங்கடப்பட நேரிடும் என்றும் டாக்டர் பா.நடராஜன் உள்ளிட்ட பல பொருளாதார நிபுணர்கள் எடுத்துக் கூறியும், காமராஜரே தென்மாவட்டத்துக்காரராக இருந்த போதிலும் அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. குளமாவது மேடாவது என்றார். மேலும், “அவையிரண்டும் எங்கும் போய்விடவில்லை, இந்தியாவில்தான் உள்ளன,” என்றும் கூறினார்.

No comments: