Saturday 24 January 2015

பெருந்தலைவர்-அப்பழுக்கற்ற அரசியல்வாதி

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் மைதானம், சத்திய மூர்த்தி பவன் இவையெல்லாம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை இவை காமராஜர் தேடிய செல்வம். ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக அவர் தேடியவை. சென்னையில் வாடகை வீட்டில்தான் கடைசி வரை காமராஜர் வசித்தார்



. முதல்-அமைச்சராக இருந்த போது, அவர் வீட்டில் அரசு சார்பில் ஒரு தொலைபேசி இருந்தது.எப்போது பேசினாலும் பேசிய நேரம், பேசிய ஊர் முதலியவற்றை ஒரு நோட்டில் குறித்து வைக்க வேண்டும. அப்போதெல்லாம் எஸ்.டி.டி. வசதிகள் கிடையாது. டிரங்கால் பதிவு செய்துதான் பேச வேண்டும். டெலிபோன் பில் வந்தவுடன் அந்த நோட்டில் உள்ள விவரங்களைப் பார்த்து அரசு சம்பந்தப்பட்ட தொலைபேசி அழைப்புக்கான கட்டணத்தை மட்டும் அரசு கணக்கில் செலுத்தவும், மீதியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கணக்கில் செலுத்த வேண்டும் என்பது காமராஜரின் உத்தரவு.




முதல்-அமைச்சராக இருந்த போது கட்சி நிகழ்ச்சிகளுக்காக செல்ல நேர்ந்தால் அரசுக்கு சொந்தமான காரில் போவதில்லை. முதல்-அமைச்சருக்கான சம்பளத்தை அரசு காசோலையாக (பேங்க் செக்) வழங்கும். அதைப் பணமாக மாற்றுவதற்காகவே காமராஜரின் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு இருந்தது. முதல்-அமைச்சருக்கான சம்பளம் முழுவதையும் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிடம் கொடுத்து விடுவார்.



அவரது அம்மாவுக்கு ரூ. 150ஐ காங்கிரஸ் கமிட்டி அனுப்பி வைக்கும் கட்சிக்காக டில்லிக்கு விமான பயணம் செய்தால் விமான டிக்கெட்டுகளை தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டிதான் வாங்கும். பழைய தியாகிகள் யாராவது பண உதவி கேட்டு வந்தால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு ஒரு கடிதம் கொடுப்பார். அங்கு பணம் கொடுத்து விடுவார்கள். மாதத்தில் பாதி நாட்கள்தான் சென்னையில் இருப்பார்.



மீதி நாட்களில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பார். அதற்கான பயணப்படி உண்டு. ஆனால் பெருந்தலைவர் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் பயணப்படி கோரியதும் இல்லை, பெற்றதும் இல்லை.வெளியூர்களில் பயணம் செய்யும் போது பயணிகள் விடுதியில் (டிராவலர்ஸ் பங்களா) தான் பெரும்பாலும் தங்குவார். அந்தந்த ஊர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பயணிகள் விடுதிக்கான வாடகையைக் கொடுக்க வேண்டும்.



காமராஜரின் சட்டையில் ஒரு பெரிய பை இருக்கும். ஆனால் அதில் பணமே இராது. சில சமயங்களில் சில்லறை நாணயங்களை வேஷ்டி மடியில் வைத்திருப்பார். யாராவது யாசகம் கேட்டால் போடுவதற்காக அந்த காசுகள் உபயோகப்படும். காமராஜரின் சொந்த காருக்கு டிரைவராக ஒரு போலீஸ்காரர் தான் இருந்தார். அந்த டிரைவருக்கான சம்பளத்தையும் காமராஜரே கொடுத்து வந்தார்.



(எனக்குதான் டிரைவர் அலவன்ஸ்” என்று சம்பளத்தோடு கொடுக்கிறாங்களே, அந்த பணத்தையும், என் பணம் கொஞ்சத்தையும் டிரைவருக்கு கொடுக்கிறேன் என்றார், பெருந்தலைவர்) காமராஜர் இறந்தபோது அவர் வீட்டில் (சென்னையில்) இருந்த மொத்த பணம் வெறும் 67 ரூபாய் மட்டுமே.

No comments: