Tuesday 27 January 2015

நடராசன் மற்றும் தாளமுத்து நாடார்-திராவிடர்கள் அல்ல தமிழர்கள்

இந்தியக் குடியரசில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. 2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1,635 தாய்மொழிகளும் 10,000 பேருக்கும் கூடுதலான பேசுபவர்களைக் கொண்ட 122 மொழிகளும் உள்ளதாக அறியப்பட்டது.பிரித்தானிய ஆட்சியின்போது ஆங்கிலம் மட்டுமே அரசுமொழியாக விளங்கி வந்தது.இந்திய விடுதலை இயக்கத்தினர் இருபதாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளிலேயே இந்தியாவின் பல்வேறு மொழியினரையும் பிரித்தானியருக்கு எதிராக ஒன்றிணைக்க, உள்நாட்டு மொழி ஒன்றினைப் பொதுமொழியாக ஆக்கிட விருப்பம் கொண்டு இந்தியும் உருதுவும் கலந்த இந்துஸ்தானி என்ற மொழியை ஆதரித்தனர். இந்த அடிப்படையிலேயே 1918ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தட்சிண பாரத் இந்திப் பிரச்சார சபா என்ற அமைப்பை உருவாக்கினார். இந்திய தேசிய காங்கிரசு 1925ஆம் ஆண்டு முதல் தனது நிகழ்வுகளை இந்துஸ்தானியில் மேற்கொள்ளத் துவங்கியது. காந்தி மற்றும் நேரு இருவருமே இந்துஸ்தானியை இந்தி பேசாத மாநிலங்களில் பரப்புவதில் விருப்பமுடையவர்களாக இருந்தனர். இம்முயற்சி தமிழரை வட இந்தியர்களுக்கு அடிமையாக்குவதாகக் கருதியவர்களுக்கு, இந்தி அல்லது இந்துஸ்தானியைப் பொதுமொழியாக்குவதில் உடன்பாடில்லை.

முதலாம் இந்தி எதிர்ப்பு போரட்டம்
1937ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரசு வெற்றிபெற்று சென்னை மாகாணத்தின் (தற்போதைய தமிழகத்தையும், தெற்குஆந்திரா பகுதிகளையும் உள்ளடக்கியது ), முதலமைச்சராக ராஜாஜி 14 சூலை 1937ஆம் நாள் பதவியேற்றார். தேர்தல் பிரச்சாரத்தின்போதே இந்தி பயிலவேண்டியதின் தேவையை விளக்கி வந்தார். அரசுப்பணிகள் குறைவாகவே இருக்கும். தென்னிந்தியர்கள் வட மாநிலங்களில் தனியார்துறையில் வேலை தேட இந்தி பயில்வது மிகத்தேவையானது என (சுதேசமித்திரன் பத்திரிகையில் மே 6, 1937) எழுதியிருந்தார். அதன்படியே தாம் பதவிக்கு வந்த ஒரு மாத காலத்திலேயே 11 ஆகஸ்டு 1937 அன்று பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கவிருப்பதைக் கொள்கை அறிக்கையாக வெளியிட்டார். 1938 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாக ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு இந்தி கட்டாயப் பாடமாக்கப்போவதாக அறிவித்தார். அம்மாணவர்கள் இந்தியைக் கட்டாயமாகப் பயின்று அதில் தேர்வும் எழுதி போதிய மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்குப் போக முடியும். முதலில் நூறு பள்ளிகளுக்கு இத்திட்டத்தை வெள்ளோட்டம் பார்க்கப்போவதாக அரசு அறிவித்தது. 
1930களின் துவக்கத்திலேயே இந்துஸ்தானி சேவாதள், இந்துஸ்தானி இதாஷி சபா போன்ற இயக்கங்களின் முயற்சியால் கட்டாய இந்திப் பாடத்தை நீதிக்கட்சியின் உள்ளாட்சி அரசாங்கங்கள் சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் அறிமுகப்படுத்தியிருந்தன. ராஜாஜியின் இந்தச் சட்டத்தை எதிர்த்து முதலாவதாக, மறைமலை அடிகள், பாவேந்தர்பாரதிதாசன் மற்றும் முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியோர் திருச்சியில் முதலாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்கள். சென்னையில் நீதிக்கட்சியைச் சேர்ந்த ஏ. டி. பன்னீர் செல்வம், ஈ.வே.ரா பெரியார் ஆகியோர் தலைமையில் போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றன. மேலும் மாணவர்கள், வழக்குரைஞர்களின் புறக்கணிப்பு மற்றும் பேரணிகளின் விளைவாக தீவிரமாகப் போராட்டம் பரவியது. இந்த எதிர்ப்புகளுக்கு இடையே ராஜாஜி 21 ஏப்ரல், 1938ஆம் ஆண்டு 125 உயர்நிலைப்பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் அரசாணையை வெளியிட்டார். அவரது பிடிவாதம் போராட்டக்காரர்களால் தமிழை அழித்து இந்தியை வளர்க்கும் முயற்சியாகக் கருதப்பட்டது. ராஜாஜி மற்றும் இந்திக்கு எதிராக மாநில அளவில் எதிர்ப்பு கிளம்பியது. 3, திசம்பர் 1938 இந்தி எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டது. சென்னை மாகாணத்தின் தமிழ் பேசும் மாவட்டங்களில் போராட்டம் தீவிரமடைந்தது. 1939ல் பேரணியில் பங்கேற்றதற்காக காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தாளமுத்து மற்றும் நடராஜன் ஆகியோர் காவல் நிலையத்திலேயே இறந்தனர். பிற்பாடு இவர்கள் மொழிப்போர் தியாகிகள் என்றழைக்கப்பட்டனர். மேலும் 1200 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் வலுவுற்ற எதிர்ப்பின் காரணமாக அந்தச் சட்டம் கைவிடப்பட்டது.


போராட்டத்திற்கு பேராதரவு

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்குப் சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியினரும் துணை நின்றனர். இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். போராட்டத்திற்குத் தமிழ் அறிஞர்கள் மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், கா. அப்பாதுரை, முடியரசன், இலக்குவனார் போன்றோர் ஆதரவளித்தனர். இப்போராட்டத்தில் பெண்களும் பெரும்பான்மையாகப் பங்கேற்றனர். மூவலூர் ராமாமிருதம், நாராயணி, வ. ப. தாமரைக்கனி, முன்னகர் அழகியார், டாக்டர். தர்மாம்பாள், மலர்முகத்தம்மையார், பட்டம்மாள், சீதாம்மாள் ஆகியோர் சிறை சென்ற சில மகளிராவர். 13 நவம்பர் 1938ல், தமிழக மகளிர் மாநாடு இதற்கான ஆதரவைக் காட்டும் வகையில் கூட்டப்பட்டது. போராட்டக்காரர்களின் பிராமணர் எதிர்ப்பு உணர்வுகளுக்கிடையிலும் காஞ்சி ராஜகோபாலாச்சாரியார் போன்ற சில பிராமணர்களும் போராட்டத்திற்குத் துணை நின்றனர்.
தமிழ் பேசும் இசுலாமியர் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்; ஆயினும் உருது பேசிய இசுலாமியர் அரசிற்கு ஆதரவளித்தனர். திருச்சியைச் சேர்ந்த பி. கலிஃபுல்லா என்ற முசுலீம் லீக் சட்டமன்ற உறுப்பினர் "நான் ஓர் இராவுத்தர். எனது தாய்மொழி தமிழ் என்பதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை; பெருமையே கொள்கிறேன். இந்தியை ஏன் இந்தியாவின் பொதுமொழியாகக் கொள்ளவேண்டும் என்று எவரும் எங்களுக்கு விளக்கவில்லை" என்று கூறினார்.[7]போராட்டத்திற்கான மக்களாதரவைக் கண்ட மாநில ஆளுனர் சூலை 2, 1938 அன்று அரசப்பிரதிநிதி (வைஸ்ராய்)க்கு இவ்வாறு எழுதினார் : "கட்டாய இந்தி இம்மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது மற்றும் அது பெரும்பான்மையான பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறானது".

நடராசனும் தாளமுத்துவும்

போராட்டக் காலத்தில் மரணமடைந்த இருவர் மொழிப்போர் தியாகிகள் என போராட்டக்காரர்களால் போற்றப்பட்டனர். அவர்களது மரணம் போராட்டத்திற்கு மேலும் வலுசேர்த்தது. நடராசன் என்ற தலித்து இளைஞர் திசம்பர் 5, 1938 அன்று கைது செய்யப்பட்டார். அவர் 30 திசம்பர், 1938 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 15சனவரி 1939 அன்று மரணமடைந்தார். 13 பிப்ரவரி 1939 அன்று தாளமுத்து நாடார் என்பவர் இந்து தியோசாபிகல் உயர்நிலைப்பள்ளியருகே மறியல் செய்ததாகப் பிறருடன் கைது செய்யப்பட்டார். அவரும் காவலில் இருக்கும்போது நோய்வாய்ப்பட்டு 6 மார்ச் அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 11 மார்ச் அன்று மரணமடைந்தார். அவரது இறப்பிற்கு அவரது உடல்நிலைக்குறைவும் கடும் வயிற்றுப்போக்குமே காரணம் என்று அரசு கூறியது. சட்டமன்றத்தில் இவ்விறப்புக்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது இராசாசி அவற்றை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு மறுத்தார். இத்தகைய அரசின் போக்கு போராட்டக்காரர்களை மேலும் கோபமுறச் செய்தது. சென்னையில்நடந்த அவர்களது இறுதிச்சடங்குகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்; அரசுக்கெதிரான ஆவேசப்பேச்சுகள் நடந்தேறின. இவ்விருவரையும் விடுவிக்க முன்னரே அரசு இணங்கியபோதும் இந்தித் திணிப்பு எதிர்ப்பைக் கைவிட்டுவிடவேண்டுமென்ற அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட மறுத்ததால் சிறையில் அடைபட்டிருந்தனர்.

நடராஜன் தாளமுத்து
இவர்களின் இருவரின் மரணத்தால் பெரும் போராட்டங்கள் வெடித்து , இவர்கள் இருவரும் தான் முதலில் மொழிக்காக உயிர் நீத்த தியாகிகள். இவர்கள் திராவிடர்கள் அல்ல தமிழர்கள்.
.

No comments: