Sunday 4 January 2015

வீரம், பாசம், கவுரவம் ஜல்லிக்கட்டின் மறுபக்கம்...

தமிழர்களின் வரலாறு வீரத்தால் நிரம்பி இருப்பதை பண்டைக் கால இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. வாள், கத்தி, வேல் போன்ற ஆயுதங்களை கையாள்வதில் மட்டுமின்றி, துள்ளித்திரியும் காளைகளை துணிந்து அடக்கும் இளைஞர்கள் பற்றி கலித்தொகையில் கொல்லேறு தழுவல் என குறிப்பிட்டுள்ளதை கொண்டு ஜல்லிக்கட்டின் முக்கியத்துவத்தை அறியலாம். ஜல்லிக்கட்டு எப்படி துவங்கியது என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும், காளைகள் மற்றும் இளைஞர்களின் வீரத்தை சோதிக்கும் வீர விளையாட்டாகவே இன்றளவும் கருதுகின்றனர். எனவே தான், ஒவ்வொரு ஆண்டும் தை மாத துவக்கத்தை தென் மாவட்ட மக்கள் உற்சாகத்தோடு வரவேற்கின்றனர்.


வீரம்
தை முதல் நாளில் உழவுக்கு உதவி செய்யும் இயற்கைக்கும், பிற உயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு, அதன்பின் இவர்கள் களம் காணும் வீரத் திருவிழாதான் இந்த ஜல்லிக்கட்டு. நூற்றுக்கணக்கான காளைகள், ஆயிரக்கணக்கான காளையர்கள், லட்சக்க ணக்கான பார்வையாளர்கள் கூடுவதால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமமே களை கட்டும். இதில் வீரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ, அதே அளவிற்கு கவுரவமும் அடங்கியிருக்கிறது. ஒரு வீரர் ஒரு காளையை அடக்கும் முயற்சி யில் வெற்றி பெற்று விட்டால் அவருக்கு பரிசுகளும், பாராட்டும் கிடைக்கும். ஆனால் காளையை அடக்க முயன்று தோல்வியை தழுவிவிட்டால் விழுப் புண் அல்லது உயிரிழப்பு கூட நேரிடலாம்.


கலை
அதேபோல், தான் வளர்க்கும் காளை யாரிடமும் பிடிபடாமல் வந்து விட்டால் அதன் உரிமையாளர், அந்த மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் நெஞ்சை நிமிர்த்தி, மீசையை முறுக்கி, தனது கவுரவம் காப்பாற்றப்பட்ட மகிழ்ச்சியில் உற்சாகமாக வெளியே வருவார். மாறாக காளை அடக்கப் பட்டு விட்டால் பெரும் அவமானத்துடன் வீடு செல்ல நேரிடும். எனவே தான் கவுரவம், வீரம் ஆகிய இரண்டையும் மனதில் கொண்டு ஜல்லிக்கட்டு தொடங்கும் சீசனுக்கு ஒரு மாதம் முன்னதாக காளைகள், காளை யர்களுக்கான பயிற்சி தொடங்கி விடுகிறது. இதற்காக ஜல்லிக்கட்டு காளையை தயார்படுத்துவதே தனி கலை.


வகை
நாட்டு காளை, கண்ணபுர காளை, வடக்கத்தி காளை, தெற்கத்தி காளை என பல வகையான காளை வகைகள் உண்டு. அவற்றை சிறு கன்றுகளாக வாங்கி வந்து வீடுகளில் குழந்தையை போல வளர்க்கின்றனர். முதல் மூன்று ஆண்டுகள் அவற்றிற்கு நல்ல ஊக்கம் கிடைக்கும் வகையிலான உணவு வகைகள் அளிக்கப்படுகின்றன. அதன்பின்னரே அவற்றிற்கான பயிற்சிகள் துவங்குகின்றன. ஜல்லிக்கட்டு மைதானத்தில் யாரிடமும் பிடிபடாமல் இருக்க வேகமாக ஓட வைத்தும், தன்னை அடக்க முயல்வோரை தாக்க மணலிலும், உருவ பொம்மையிலும் குத்த விட்டும் பயிற்சி அளிப்பர். வலுவினை அதிகரிக்க, மூச்சு திறனை மேம்படுத்த தினமும் காலை, மாலையில் தலா ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி அளிக்கின்றனர்.

பயிற்சி
அதோடு அவற்றை தினமும் குளிப்பாட்டி பசும்புல், பருத்திக்கொட்டை, பட்டாணி தோல், கோதுமை தவிடு, பச்சரிசி, காய்கறிகளையும் அளிக்கின்றனர். மருத்துவ பரிசோதனையும் செய்யப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் காலங்களில் ஊட்டச்சத்து மாவுகளை குளிர்ந்த நீரில் கலந்து காளைகளுக்கு அளிக்கின்றனர். இதனால் மிக ஏழ்மையான வீட்டில் இருக்கும் ஜல்லிக்கட்டு காளைக்கு கூட ஒரு நாள் தீவன செலவாக ரூ.200 வரை ஆவதாக அவற்றின் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

கவுரவம்
இத்தனை பயிற்சிக்கு பின் களமிறங்கும் காளைகள், ஜல்லிக்கட்டு மைதானத்தை கலக்கி விட்டு கம்பீரமாக வெளியேறினால் அவற்றின் மவுசு பல மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு சிறப்பு பெற்ற பல காளைகள் ரூ1.5 லட்சத்திற்கும் அதிகமாக கூட விற்பனையாகின்றன. அதேசமயம் பிடிபட்டு விட் டால், தனக்கு அவமானம் ஏற்பட்டு விட்டதாக கருதி அதனை அடிமாட்டு விலைக்கு விற்பவர்களும் உள்ளனர். எனவே தான், ஜல்லிக்கட்டு தமிழர் களின் வீரத்தோடு மட்டுமின்றி உணர்வோடு கலந்ததாகவும் விளங்கி வருகிறது.

பாசம்
பயிற்சிக்கு பின் அரங்கேற்றம் தொடங்கும் காளைகள் சுமார் 10 ஆண்டுகள் வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றன. அதன்பின் அந்த காளைகளை
ஜல்லிக்கட்டிற்கு அழைத்து செல்லாமல் தொடர்ந்து வீட்டில் வைத்தே குடும்பத்தில் ஒருவரை போல் பராமரிக்கின்றனர். பாசமாக வளர்த்த காளை இறந்து விட்டால், அவற்றிற்கு வீட்டருகே கோயில் கட்டி வழிபாடு நடத்துவதையும் பல கிராமங்களில் காண முடிகிறது. இப்படி சிந்து சமவெளி நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே நடந்து வரும் (கி.மு.2000) ஜல்லிக்கட்டிற்கு எதிராக தற்போது கிளம்பியுள்ள அத்தனை தடைகளையும் தாண்டி, அதனை தொடர்ந்து நடத்தும் ஆற்றல் தமிழர்களுக்கு கிடைத்ததற்கு காளைகள் மீதான பாசம், காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரம், காளைகளால் கிடைக்கும் கவுரவம் ஆகியவை தான் காரணம் என்பதை உணர முடிகிறது.

ஜல்லிகட்டின் அந்திமகாலம்

4 வருடத்திற்கு முந்தைய நிலை!! (நாளிதழ் செய்தி)
இறைச்சிக்காக காளை மாடுகளை வெளிமாநில வியாபாரிகள் வாங்கி செல்வதால், ஜல்லிக்கட்டு காளைகளின் வரத்து குறைந்துள்ளது.தை பொங்கல் நாளிலும், அடுத்து வரும் நாட்களிலும் சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான கிராமங்களில் எருதாட்டம் எனப்படும் காளை விடும் நிகழ்ச்சி நடக்கும். இந்த நிகழ்ச்சியில் ஓடும் காளைகளை இளைஞர்கள் கூட்டம் விரட்டி பிடித்து அடக்குவர்.சேலம் மாவட்டம், ஜலகண்டபுரம் அடுத்த வெள்ளாளப்பட்டி, முனியம்பட்டி கிராமங்களில் பல தலைமுறையாக விவசாயிகள் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து எருதாட்ட போட்டிக்கு தயார் செய்து அனுப்புகின்றனர். வழக்கமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்படும் முனியப்பட்டி கிராமத்தில் நடப்பாண்டில் காளைகள் எண்ணிக்கை குறைந்து விட்டது.இதுகுறித்து காளை வளர்க்கும் குபேரன் கூறியதாவது:எருதாட்டத்திற்காக நாங்கள் பூர்ணி இனத்தை சேர்ந்த ஆக்ரோஷமான, உயரமான காளைகளை வாங்கு வளர்க்கிறோம். 25 முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை வாங்கிய காளை மாடுகளின் விலை தற்போது 10 ஆயிரம் ரூபாய் வரை சந்தையில் விலை அதிகரித்து விட்டது.காளைகளை வளர்த்து பயிற்சி அளித்து சுற்றுப்புற கிராமங்களில் நடக்கும் எருதாட்டத்தில் பங்கேற்க வாடகைக்கு விடுவோம். ஒரு காளையை 2,000 முதல் 5,000 ரூபாய் வரை நாள் வாடகைக்கு கிராம மக்கள் வாங்கி செல்வர்.முனியம்பட்டி,வேம்பனேரி, ரெட்டிப்பட்டி, கருக்கல்வாடி, சின்னப்பம்பட்டி, கரிசல்பட்டி, வேம்படிதாளம் கிராமம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நடக்கும் எருதாட்டத்திற்கு காளையை அனுப்பி வைப்போம். காளைகளை இறைச்சிக்காக கேரளா வியாபாரிகள் சந்தையில் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர்.அதனால், நடப்பாண்டில் சந்தையில் ஜல்லிகட்டு காளைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பென்னாகரம், கெலமங்கலம், திருவண்ணாமலை, மோர்பாளையம் உள்பட பல இடங்களில் நடக்கும் மாட்டு சந்தைக்கு, எங்கள் பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஜல்லிக்கட்டு காளைகள் வாங்க சென்றோம்.ஆனால், கேரளா வியாபாரிகள் போட்டி போட்டு இறைச்சிக்காக காளைகளை வாங்கியதால், விவசாயிகள் ஜல்லிகட்டு காளைகள் கிடைக்காமல் ஏமாற்றத்தோடு திரும்பி விட்டனர். அதனால்,கடந்த ஆண்டு 80க்கும் மேற்பட்ட காளைகள் இருந்த எங்கள் கிராமத்தில் நடப்பாண்டில் 50க்கும் குறைவான காளைகளே உள்ளது. எருதாட்டத்திற்கு காளைகள் கிடைப்பது அரிதாக இருக்கும், என்றார்.


இரண்டு வருடத்திற்கு முந்தைய நிலை!! (நாளிதழ் செய்தி)
சேலம் மண்டலத்தில் பிரசித்தி பெற்ற எருதாட்டத்துக்கு மக்கள் மத்தியில் மவுசு குறைந்து கொண்டே வருவதாலும், விலைவாசி உயர்வாலும், காளை வளர்க்கும் ஆர்வம் குறைந்து விட்டதால், ஜல்லிக்கட்டு கிராமம் களை இழந்துள்ளது.சேலம் மாவட்டம், ஜலகண்டபுரம் அடுத்த முனியம்பட்டி கிராமத்தில் பல தலைமுறையாக விவசாயிகள் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கின்றனர். தமிழர்களின் வீர விளையாட்டுகளில் எருதாட்டமும் ஒன்றாகும். தை மாதம் நெருங்கி விட்டால், முனியப்பட்டி கிராமத்தில் எங்கு பார்த்தாலும் ஜல்லிக்கட்டு காளைகளாக காட்சியளிக்கும்.
சமீபகாலமாக எருதாட்டத்து மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து விட்டதால், முனியப்பட்டியில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. நடப்பாண்டு விவசாயிகள், 10 காளைகளை மட்டுமே எருதாட்டத்துக்கு தயார் செய்துள்ளனர். காளைகள் எண்ணிக்கை குறைந்து விட்டதால் களை இழந்து காணப்படுகிறது.
ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் சசிகுமார் கூறியதாவது:எருதாட்டத்திற்காக, ஒசூர் பகுதியில் இருந்து பூர்ணி இனத்தை சேர்ந்த ஆக்ரோஷமான, உயரமான காளைகளை வாங்குகிறோம். கடந்த ஆண்டு, 35 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு காளை தற்போது, 50 ஆயிரம் ரூபாயாக விலை அதிகரித்து விட்டது. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தினமும் ராகி கூழ், தவிடு, புண்ணாக்கு, தேங்காய் பருப்பு வழங்க வேண்டும். ஒரு காளைக்கு உணவு வழங்க, தினமும் 100 ரூபாய் செலவாகும். எனவே, ஒரு காளை வாங்கி பராமரிக்க, ஒரு லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால், 20 முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை மட்டும் தந்து காளைகளை எருதாட்டத்திற்கு அழைத்து செல்கின்றனர்.
இதனால், பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுவதால் நடப்பாண்டு பெரும்பாலான விவசாயிகள் ஜல்லிக்கட்டு காளைகளை வாங்கி பயிற்சி கொடுப்பதை நிறுத்தி விட்டனர். நடப்பாண்டில், 10 காளைகளே எருதாட்டத்துக்கு தயார் நிலையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

போன வருட நிலை!! (நாளிதழ் செய்தி)

ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை செய்துள்ளதால், அலங்காநல்லூர், வாடிபட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகள் குறைந்த விலைக்கு சந்தைகளில் விற்கப்படுகின்றன. அவற்றை, அடிமாடுகளாக கேரள வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். 50 ஆயிரம், ஒரு லட்சம் மதிப்புள்ள காளைகள், 20 ஆயிரத்திற்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகின்றன.

No comments: