Sunday 15 November 2015

சவார்க்கர் இ.ஆ.ப - காமராஜர் - தமிழர்

விருதுநகரை சேர்ந்தவர்கள் திரு. சவார்க்கர் இ.ஆ.ப (S.SAWARKAR  I.A.S) அவர்களை அறியாது இருக்க முடியாது. இவர் விருதுநகர் இந்து நாடார் சமூகத்தை சேர்ந்த பவளக்காரர்கள் வகையறாவை சேர்ந்தவர். எனக்கு இவர் ஒன்றுவிட்ட பெரிய மாமையா (பெரிய தாத்தா - அதாவது அம்மாவின் பெரிய தந்தை) பையனுமாவார். அதாவது எனக்கு மாமா முறை. அதே திரு.சவார்க்கர் அவர்களை நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்களும் கண்டிப்பாக அறிந்திருப்பார்கள். திரு சவார்க்கர் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக (District Collector) 16-08-1993லிருந்து 30-10-1994 வரை இருந்தார். இவர் நாகப்பட்டினத்தில் இருந்த பொழுது அங்கு கடும் புயல் வெள்ளம் வந்தது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நாளில் மிகுந்த வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை கலெக்டர் பார்வையிட முடிவாகி இருந்தது.

அந்த நாளில் திரு.சவார்க்கர் அவர்கள் சாதாரன மேல் சட்டை, நாலு முழ வேட்டி மற்றும் சாதாரன ரப்பர் செருப்புடன் காரில் கிளம்பிவிட்டார், அதிகாரிகள் ஜீப்பில் பின் தொடர்ந்தனர்.. மிகவும் வெள்ளம் சூழ்ந்த பகுதிக்கு வந்தவுடன் அதற்கு மேல் வாகனங்கள் செல்ல வழியில்லை. திரு.சவார்க்கர் அவர்கள் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு வெள்ள நீருக்குள் இறங்கி விட்டாராம். சுற்றி நின்ற அதிகாரிகள் அனைவருக்கும் அதிர்ச்சி. கலெக்டர்கள் வந்தால் மேடான பகுதிகளில் நின்று பார்வையிடுவதுதான் வழக்கம். இவர் என்னடாவென்றால் கிடு கிடு வென வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வெள்ளத்திற்குள் இறங்கி விட்டாரே என்றுதான் அவர்களுக்கு அதிர்ச்சி. அவர்கள் அதை எதிர்பார்க்கவில்லை! அவர்கள் அனைவரும் பேண்ட் மற்றும் ஷூ அணிந்திருந்தனர், உள்ளே எப்படி இறங்குவது என்று தயங்கினர். திரு.சவார்க்கர் அவர்கள் "வெள்ள சேதத்தை பார்வையிட பேண்ட் மற்றும் ஷூ அணிந்து வந்தது உங்கள் தவறு. எல்லோரும் என் பின்னே வாருங்கள்" என கூறிவிட்டு நடக்க ஆரம்பித்து விட்டாராம். அதிகாரிகளும் வேறு வழி இல்லாமல் அவரை பின் தொடர ஆரம்பித்து விட்டனராம்! வாசர்கள் மண்ணிக்க வேன்டும் திரு.சவார்க்கர் அவர்களின் புகைப்படம் கிடைக்கவில்லை!

இந்த சம்பவத்தை நினைவு கூறும்பொழுது, பெருந்தலைவர் நினைவுக்கு வருகிறார். இதே போன்றதொரு சம்பவத்தில் பெருந்தலைவரும் கயிற்றை பிடித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளத்தில் இறங்கி விட்டாராம். திரு.சவார்க்கர் அவர்கள் இறங்கியதாவது தேங்கி நின்ற வெள்ள நீரில். பெருந்தலைவர் இறங்கியது ஓடிக் கொண்டிருந்த வெள்ள நீரிலாம்! சேதம் பார்வையிட வந்த முதல்வரை அதிகாரிகள் வெள்ளத்தின் சீற்றத்தை காரணம் காட்டி, அச்சமூட்டி தூரமே நின்று பார்க்க சொன்னார்களாம். அதற்கு பெருந்தலைவர் "நான் என்ன கோட்டையிலிருந்து உத்தரவு பிறப்பிக்க மட்டுமா தேர்ந்தெடுக்கப் பட்டேன், தண்ணீரில் இறங்குவது எனக்கொன்றும் பழக்கமில்லாத விசயமில்லை" என கூறிவிட்டு வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு கயிற்றின் உதவியுடன் மார்பளவு நீரில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, மீட்பு பணிகளை முடுக்கினாராம். வேறு வழி இல்லாமல் அதிகாரிகளும் உடன் சென்றனராம்!

முகநூலில் தமிழன் தான் தமிழனை ஆள வேண்டும் என பலர் பதிந்து வருகின்றனர். தமிழர் ஆள வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை, ஆனால் நான் மேற் கூறிய இருவர் போன்ற தமிழர்கள் தான் நம்மை ஆள வேண்டும் என்பேன் நான்.

No comments: