Tuesday 7 July 2015

பெருந்தலைவர் - இரு கை வேழத்து கர்ம வீரன்


கம்பன் இராமனை ‘இரு கை வேழத்து இராகவன்’ என்று புகழ்ந்து பேசுவான்.
வேழம் என்றால் யானை. யானையின் கை நீளமானது. பொதுவாகவே ஆள்பவர்ளுக்கு கை நீளம்தான்.
ஆள்பவரின் கைகள் நீளமாயிருக்கலாம். அவை நீளுமானால் ஆட்சிக் காலம் நீளாது.
காமராஜரின் கைகளும் நீளமாயிருக்கலாம். முழங்கால்கள்வரை நீண்டு இருக்கும்.
கம்பன் இராமனை நீண்ட கரங்களை உடையவன் என்று மட்டும் கூறியிருக்கலாம். நமக்கும் புரியும்தான். அதன் பின் ஏன் யானையின் தும்பிக்கை போன்று நீளமான கை என்றான்?
இராமருக்கு பொருந்தியது அப்படியே பெருந்தலைவர் காமராஜருக்குக்கும் பொருந்துவமைக் காணுங்கள்.
யானையின் தும்பிக்கை பாகனை மேலே தூக்கிவிடப் பயன்படும்.
அதுபோல் இராமன் கிஷ்கிந்தையில் வாழ்ந்த சுக்கிரிவனுக்கு முடிசூட்டு மன்ன்னனாக்கி சிம்மாசனத்தின் மேல் அமர வைத்தான். அது மட்டுமன்றி இலங்கை முடியை வீடணனுக்கு சூட்டித் தம்பியைத் தலைவனாக்கினான்.
யானை தன் நீண்ட கரத்தால் பாகனைத் தூக்கித் தன் தலைமேல் அமர்த்துவதைப்போல், இராமனும் இருவருக்கு பலைமைப் தவி பந்து சிறப்பித்தான்.
எனவேதான் கம்பன், இராமனை ‘இருகை வேழத்து இராகவன்’ என்று புகழ்ந்தான்.
ஆகவேதான் இரமனுக்கும் காமராஜருக்கும் பொருத்தமுண்டு என்பது.
இராமனும் பதவியைத் துறந்து வந்தான். காமராஜரும் பதவியைத் துறந்துவந்தார்.
இராமன் காலத்தின் சூழ்நிலையால் சுக்கிரிவனுக்கும், வீடணனுக்கும் முடிசூட்டி மன்னனாக்கினான். காமராஜரோ அரசியல் சூழ்நிலையால், பாரதத்திற்கு லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரைப் பிரதமராக்கி நிலை நிறுத்திக் காட்டினார்.
இவ்வாறு அரசர்களை உருவாக்க வேண்டுமானால் அவரிடம் பேரரசர்க்கு உரிய தகுதி இருக்கிறதென்று அர்த்தம். அதனால்மான் தலைவர்களை உருவாக்கியவரை பெருந்தலைவர் என்றனர்.
எவ்வளவு பொருத்தம்!
பட்டங்கள் பலருக்கும் வந்து சேரும்; நின்று பொருந்தாது. ஆனால் காமராஜரைப் ‘பெருந்தலைவர்’ என்றது என்றென்றும் பொருந்தும்.
அரசியல்வாதிகள் அஸ்திவாரத்தோடு உருவாக வேண்டும் அத்தகையவர்களால்தான் பலரை உருவாக்க முடியும் என்னும் உயர்ந்த பாடத்தை பெருந்தலைவரிடமிருந்துதான் படிக்கவேண்டும்.
வெற்றி என்றால் தமது தோளில் வைத்து ஆடுபவர்கள், தோல்வி என்றால் அடுத்தவர்கள் தோளில் தூக்கி வைப்பது இன்றைய அரசியலின் பழக்கம். தேர்தல் என்றால் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை. ஒருவர் வெற்றியால் பலர் தோல்வியை தழுவிக் கொள்வர். இது இயற்கை.
இதில் தோற்றவர் ஆளுங்கட்சியாக இருந்தால் ‘ நான் தலைருக்கு எதிர் கோஷ்டியில் இருப்பதால் வேண்டுமென்றே தோற்கும் தொகுதியை எனக்குத் தந்தார்’ – என்பதும், ‘எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்கள் இறுதிக் கட்டத்தில் ஜாதிப் பிரிவினையைத் தூண்டிவிட்டார்கள்’ – என்பதும், ‘பல வாக்குச் சாவடிகளில் நடந்த தில்லுமுல்லுகளே எனது தோல்விக்குக் காரணம்’ – என்பதும் சாதாரணமாக நாம் காண்பதுதான்.
இதில் தோற்றவர்கள் எதிர் கட்சியாக இருந்தாலோ, ‘ அரசு நிர்வாகம் முறைகேடாகப் பயன்படுத்தப்ட்டதே என் தோல்விக்குக் காரணம்’ என்பதும், ‘தவறான வாக்காளர் பட்டியலை வைத்து நடந்த தவறான தேர்தல்’ – என்பதும், ‘கள்ள ஓட்டுக்களே எனது தோல்விக்குக் காரணம்’ – என்பதும், தேர்தல் நேரத்தில் போலியான வாக்குறுதிகளால் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். – என்பதும், ‘இந்தத் தேர்தல் செல்லாது, நான் கோர்ட்டுக்கு போவேன்’ – என்பது எல்லா தேர்தல்களிலும் எதர்த்தமாகப் பார்ப்பதுதான்.
எல்லாவற்றையும்விட பேசுபவர்கள் ஒன்றை மட்டும் மறந்துவிடுவார்கள். அதுதான் மக்கள்.
முழுமையான ஜனநாயக நாட்டில் வாழுகின்றோம். மக்கள் வேண்டாம் என்று நினைத்தால் வாக்கை மாற்றிப் பயன்படுத்துகிறார்கள்.
மிசாவும், பின் இ. காங்கிரஸ் அடைந்த மோசமான தோல்வியம், ஜனதா அடைந்த அமோக வெற்றியும், அதன்பின் மாற்றாக ஆளின்றி மறுபடியும் இ. காங்கிரஸ் வெற்றி பெற்றதையும் சிந்தித்துப் பார்த்தால், மக்கள் முடிவுகளை மாற்றிப் பார்க்கத்தான் செய்கிறார்கள்.
எனவே, அரசியலில் தோல்வி என்பது அவ்வப்போது வருவதுதான். ஆனால் அரசியல் ஞானம் உடையவர்கள் மட்டும்தான் தனது தோல்வியை ஏற்றுக்கொள்கின்றனர்.
அந்த வரிசையில் தலைமை தாங்கி நிற்பவர் பெருந்தலைவர்தான். தோல்வியை ஏற்கும் துணிவுடைய தூயவர் அவர்.
1971 அகில இந்திய அளவில் இ. காங்கிரஸ் அமோகமாக வெற்றி பெற்றது. காமராஜின் பழைய காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
நாடெங்கும் வெளியாகும் பேர்தல் முடிவுகள் நேர்மாறாகவே வந்து கொண்டிருக்கின்றன. சிந்திக்கத் துவங்கினார். தனது ஆதரவாளர்கள் தோல்வியைத் தாங்கிக்கொள்ளாமல் இருப்பதை தலைவர் அறிகிறார்.
தொடர்ந்து கட்சியின் உறுப்பினர்கள் பலரும் போய், பெருந்தலைவரைப் பார்த்தனர்.”ஐயா, அவர்களின் வெற்றிக்குக் காரணம் ‘ரஷ்ய மை’ ஏமாற்றிவிட்டார்கள். வாக்குச் சீட்டில் தடவிய ரஷ்ய மைதான் காரணம்” என்றனர்.
தலைவர் நிதனமாக சொன்னார், ”ஜனநாயகத்தில் நம்பிக்கை உடையவர்களின் பேச்சா இது? நாம் தோற்றதற்கு காரணம் ரஷ்ய மை என்கிறீர்களே… அதுவா உண்மை? இல்லை. நம்மை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை”
இவ்வாறு தன்னை அல்லது தனது தலைமையை அல்லது தனது கட்சியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை தன்னடக்கத்தோடு ஏற்றுக் கொள்ளும் உயர்ந்த குணம்தான் அவரது உயர்வுக்கு காரணம்.
தோல்வியை சமதானத்தோடு, அமைதியாக நிதானமாக அணுகினால் அதற்குள் அடுத்த வெற்றி அடங்கியிருக்கும்.
ஆம், நிதானமாக தோல்வியை அணுகும்போது தோல்விக்கான உண்மையான காரணங்கள் தெரிந்துவிடும். அப்படியானால் மறுமுறை தோற்பது தவிர்க்கப்படும்.
முழுமையாக ஜனநாயகவாதி என்பதால் தோல்வியை முதலில் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் முதிர்ச்சியுடையவராக இருந்தார் காமராஜர்.
எனவேதான் அவர் வெற்றியில் மகிழ்வதும் இல்லை; தோல்வியில் வருந்துவதும் இல்லை; மனதை எப்போதும் எதார்த்த நிலையிலே வைத்திருந்தார்.
வெற்றியால் துடிக்காமலும், தோல்வியால் துவளாமலும் இருக்கவேண்டும் என்று எண்ணுபர்கள் காமராஜரைப் படிக்கவேண்டும்.
பொது நலத்தில், அதிலும் குறிப்பாக அரசியலில் ஈடுபட்டவர்கள் தோல்வியைச் சந்திக்காமலே இருக்கமாட்டார்கள்.
அவ்வாறு தோல்வியை ஏற்கும் துணிவை படிக்காத மேதையிடம்தான் படிக்க வேண்டும்.

No comments: