Thursday 2 July 2015

என்னை கவர்ந்த நான்கு எளிமை சக்கரவர்த்திகள்! (முதலில் நெப்போலியன்)

நான் சக்கரவர்த்திகள் எனக் குறிப்பிட்டது, சரித்திரங்களிலும், மக்கள் மனதிலும் இன்றும் தங்கள் எளிமையின் மூலம் சக்கரவர்த்தியாக வாழ்பவர்களைப் பற்றி! அவர்கள் "மாவீரன் நெப்போலியன்", "ஆபிரகாம் லிங்கன்", "புரட்சியாளர் சே குவேரா", "பெருந்தலைவர் காமராசர்"!

தன்னம்பிக்கை கதைகளைத் தனித்தனியாக கேட்பதைவிட நெப்போலியனின் வாழ்க்கையை படித்தால் போதும்.

எளிமையான இத்தாலியில் இருந்து குடிபெயர்ந்த குடும்பத்தில் பிறந்தார் நெப்போலியன். ராணுவத்தில் சேர்ந்து கலக்கி எடுத்தார். வெகு சீக்கிரமே படைத் தளபதியாக உயர்ந்தார். ஆஸ்திரியாவின் வசமிருந்த இத்தாலியின் பகுதிகளை பிடித்துக் காண்பித்தார். கிழக்கு தேசங்களை பிடிக்கும் முயற்சியை நெல்சன் தகர்த்தார். பயமென்றால் என்னவென்றே அறியாமல் தன்னை வார்த்தெடுத்துக் கொண்ட நெப்போலியன் உருவத்தில் பார்க்க குள்ளமானவர். நெப்போலியனுக்கு மூல வியாதியும் இருந்தது. அதனால் துணியை பந்து போல் சுருட்டு குதிரையின் மேல் வைத்து அதன் மேல் அமர்ந்தே பயணிப்பாராம்.

நெப்போலியன் பிரெஞ்சு புரட்சியால் நாட்டில் ஏற்பட்டு இருந்த கொதிநிலையை பயன்படுத்திக்கொண்டு ஆட்சியை பிடித்துக்கொண்டார் என்றாலும், முதலில் மூன்று பேர் கொண்ட அமைப்பை கொண்டு ஆள்வது போல பாவ்லா காட்டிவிட்டு ஆட்சிப் பீடம் ஏறினார். தானே மகுடத்தை எடுத்து சூட்டிக்கொண்டார். உலக வரலாற்றில் ஏழை ஒருவரின் மகன் ஒரு மாபெரும் நாட்டின் சக்ரவர்த்தி ஆகிற அற்புதம் அன்றைக்கு நிகழ்ந்தது. ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டும் உறங்கிய நெப்போலியன் ஆழ்ந்து வாசிக்கிற பழக்கம் உள்ளவர் வாசிப்பே நம்மை பக்குவப்படுத்தும் என்பது அவர் எண்ணம். குள்ளமாக இருந்ததால் அவர் அரசவைக்கு நடந்து வருகிறபொழுது அவர் அணிந்திருக்கும் போர்வாள் உரசி இரத்தின கம்பளங்கள் கிழிந்து போகும். பின் இரும்பால் கம்பளம் வைத்தபொழுது உரசிக்கொண்டு தீப்பொறி பறக்க அரசவைக்கு வருவார்.

போர்களில் தொடந்து வென்று கொண்டிருந்த நெப்போலியனின் சொந்த வாழ்க்கை வெகு சிக்கனமானது. ஓரிரு செட் ஆடைகள், தன் அறையில் தன் பதினான்கு ஆண்டுகால சம்பளத்தில் வாங்கிய மேசை, நாற்காலி ஆகியவற்றில்தான் தன் வாழ்க்கையை ஒட்டிய எளிமை விரும்பி அவர்.  இரண்டு வேளை மட்டுமே எளிமையான உணவு சாப்பிடுவார். அரைக் குவளை காபி மட்டும் இரண்டு அல்லது மூன்று வேளை குடிப்பார். வெகு சுறுசுறுப்பாக இருக்கும் அவரின் சின்னம் தேனீ. நாற்பது போர்கள் கண்ட நெப்போலியன் கொண்டு வந்த கோட் ஆப் நெப்போலியன் இன்றைக்கும் பின்பற்றப்படும் அருமையான சட்டம். எல்லா மக்களுக்கும் சம உரிமை வழங்கும் அற்புதம் அது. எளிமையான மொழியில் அவை எழுதப்பட்டு இருந்தன. நில உடைமை முறையை வேரறுத்து மக்களுக்கு நிலங்களை பிரித்து கொடுத்தார். மதத்தை அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்தார். நெப்போலியன் காலத்தில் அறிவியலுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. வோல்டாவை பார்த்து நீங்கள் வருடத்துக்கு ஒரு முறை அரசவைக்கு வந்தால் கூட போதும் என்கிற அளவுக்கு நெப்போலியன் தீராத வாசிப்பு ஆர்வம் கொண்டவர். எல்பாவில் சிறைவைக்கப்பட்டு இருந்தபொழுது நெப்போலியனுக்கு கொடுக்கப்பட்ட சிறிய அறையில் அவர் எதை தெரியுமா வைத்திருந்தார்? எல்லா அடுக்குகளிலும் மொத்தமாக மூவாயிரம் புத்தகங்களை வைத்திருந்தார்! அவர் மரணத்துக்கு பிறகு ஆங்கில அரசே அவரை மாவீரன் என்று ஏற்றுக்கொண்டது.

ஒரு சம்பவத்தோடு முடித்தால் நன்றாக இருக்கும். நெப்போலியனின் படைத் தளபதி வேகமாக ஓடி வந்தார். கண்களில் கலக்கம். “அரசே! எதிரி நாட்டுப் படைகள் எல்லாப் பக்கமும் சுற்றி வளைத்து விட்டார்கள். அவ்வளவு தான்!” என்ற பொழுது நெப்போலியன், “அதனால் என்ன? எல்லா பக்கமும் சுடலாம் என சந்தோசப்படுங்கள்” என்றார்.

“முடியாது என்பது முட்டாள்களின் அகராதியில் உள்ள வார்த்தை" என சொன்னவர் நெப்போலியன்.

No comments: