Thursday 2 July 2015

என்னை கவர்ந்த நான்கு எளிமை சக்கரவர்த்திகள். (மூன்றாமவர் சே)

மண்ணிக்கவேண்டும் மக்களே. இனம், மொழி, தேசம் என எல்லைகள் கடந்து போராடிய வீரனைப் பற்றி இதற்கு மேல் சுருக்கி எழுத முடியவில்லை!

சர்வாதிகாரி ஹிட்லருக்கும் இவருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை உண்டு. ஹிட்லர் ஆஸ்திரியாவில் பிறந்து ஜெர்மனிக்காக பாடுபட்டவர். இவர் அர்ஜெண்டினாவில் பிறந்து கியூபா பொலிவியா என பல நாடுகளுக்காக பாடுபட்டவர்! சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ட்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (பிறப்பு-  ஜுன் 14, 1928 அன்று. இறப்பு- அக்டோபர 9, 1967 அன்று) அர்ஜெண்டினாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்கு  கொண்ட  போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

உலகின் சக்கரைக் கிண்ணம் என்று வர்ணிக்கப்படும் நாடு கியூபா.  கிட்டத்தட்ட தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் ஸ்பானிய அமெரிக்கா எனக் குறிப்பிடும் அளவுக்குக் குடியேற்றம் நிகழ்ந்தது. கியூபாவின் வளத்தை ஸ்பானிய அரசு அட்டை போல் உறிஞ்சத் தொடங்கியது. இந்த அடிமை வாழ்வில் அவ்வப்போது புரட்சியின் தீப்பொறிகள் தோன்றி மறைந்தன. 1890ல் ‘ஹொஸே மார்த்தி’ எனும் கவிஞனின் தலைமையில் பூர்வகுடிகள் அணி திரண்டனர். புரட்சி துவங்கிய வேகத்திலேயே, ஸ்பானிய அரசு ஹொஸேவைச் சுட்டுக்கொன்று, புரட்சியை வலுவிழக்கச் செய்தது. ஆனால், மக்களின் நெஞ்சங் களில் அந்த நெருப்பு மட்டும் அணை யாமல் இருந்தது. புரட்சியாளர்களுக்கு அமெரிக்கா உதவி செய்ய ஸ்பானிஷ் ,அமெரிக்க யுத்தம் தொடங்கியது.      

1902ல் ஸ்பானிய அரசு விரட்டியடிக்கப்பட்டது. நல்லவராக வந்த அமெரிக்காவோ, கியூபாவில் ஒரு மாற்று ஆட்சியை ஏற்படுத்தி, அதன் பொருளாதாரத்தை உறிஞ்ச ஆரம்பித்தது. கடைசியாக கியூபாவை ஆண்ட ஃபெலன்சியா பாடிஸ்டா (Fulgencio batista) ஆட்சியில், இது உச்சக்கட்டமாக நிகழ்ந் தது. மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுந்தனர். ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் பிரதிநிதியாக உருவெடுத்தார். அதே வேகத்தில், காஸ்ட்ரோ கைது செய்யப்பட்டார். இது புரட்சிக் கனவுகளுக்குப் பேரிடி! ஆயினும், பாடிஸ்டா அரசின் மீதான எதிர்ப்பு காட்டுத் தீயாகப் பரவியது. எங்கே மக்கள் ஒன்றுசேர்ந்து புரட்சி நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம்கொண்ட பாடிஸ்டா அரசு, ஒரு மன்னிப்பின் பேரில் காஸ்ட்ரோவை விடுதலை செய்தது. பலமிழந்த சிங்கமாக காஸ்ட்ரோ வெளியே வந்தார். உடன் போராளிகள் இல்லை. ஆயுதங்கள் இல்லை. அடுத்து என்ன?புரட்சியின் கனவுக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டதா? என இருந்த காலத்தில்தான் கியூபாவில் சர்வாதிகாரி பாடிஸ்டாவுக்கு எதிராக கெரில்லா படை திரட்டிப் போராடிவந்த பிடெல் கேஸ்ட்ரோவுக்கு சேவின் அறிமுகம் கிடைத்தது. அது அற்புதமான நட்பாக மலர்ந்தது. கேஸ்ட்ரோவின் அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. இவரின் வீரமும் கெரில்லாப் படை சாகசங்களும் பாடிஸ்டாவை வீழ்த்தி, கேஸ்ட்ரோவின் கைகளில் க்யூபாவின் ஆட்சியை ஒப்படைத்தன. தலைமைத் தளபதி ஆனார் சே.

கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். 1959, பிப்ரவரி 16ல் கியூபாவின் பிரதமராக காஸ்ட்ரோ பதவியேற்றவுடன் குவேராவை ஒரு கியூபன் என்று அறிவித்தபிறகு அந்த வருடம் அக்டோபர் மாதம்  தேசிய வங்கியின் அதிபராகவும் ஃபிடல் காஸ்ட்ரோவால் நியமிக்கப்பட்டார். விவசாயத் துறையில் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார் ‘சே’. தேசிய வங்கியின் தலைவராக கியூபா ரூபாய் நோட்டுகளில் ‘சே’ என கையெ ழுத்திடும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார். பின் 1961ம் ஆண்டு தேசிய வங்கியின் பதவியைத் துறந்து கியூபாவின் பொருளாதார அமைச்சர் ஆனார். கியூபாவை பன்னெடுங்காலமாக சுரண்டி வந்த அமெரிக்க நிறுவனங்களின் உடைமைகளைப் பறிமுதல் செய்தார். இருந்தாலும் ‘சே’ தன்னை ஒரு சாதாரணக் குடிமகனாகவே அடையாளம் காட்டிக் கொண்டார். விவசாயக் கூலிகளுடன் சேர்ந்து கரும்பு வெட்டுவதும், தொழிற் சாலைகளில் இதர பணியாளர்களுடன் சேர்ந்து மூட்டை சுமப்பதுமாகவே வாழ்ந்தார்.  கியூபாவின் விடுதலைக்காக தன்னோடு போராடிய ஒரு பெண்ணை மணந்து இரு குழந்தைகளையும் பெற்றார். இந்த வாழ்க்கை சேவைக் கவரவில்லை. காரணம் காங்கோ நாட்டில் புரட்சியில் ஈடுபட்டு வந்த கெரில்லாப் போராளிகளின்மீது அவரின் கவனம் சென்றது.  ‘சே’ 1965 மார்ச்சில் கியூபா திரும்பியபோது விமான நிலையத்தில் அவரை ஃபிடல் காஸ்ட்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான் வெளியுலகுக்கு ‘சே’ நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு. அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக1965ஆம் ஆண்டில் தனது நண்பர் கேஸ்ட்ரோவுக்கு கண்ணீர் மல்க கடிதம் எழுதிவிட்டு கியூபாவில் இருந்து திடீரெனத் தலைமறைவானார், வெளியேறினார். ஒரு சந்திப்பில், காஸ்ட் ரோவின் தம்பி ரால் காஸ்ட்ரோ (Raul castro) ‘சே’வை  சுடு சொல்லால் அழைத்ததாகவும், அது ‘சே’வின் மனதை மிகவும் காயப் படுத்தியதாகவும், அதுதான் ‘சே’ கியூபாவை விட்டு வெளியே செல்லக் காரணம் என்றும் சொல்லப் படுவதுண்டு.      

‘சே எங்கே?’ பத்திரிகைகள் அலறின. அனைவரது பார்வையும் காஸ்ட்ரோ பக்கம் திரும்பியது. ‘சே’வை சுட்டுக் -கொன்றுவிட்டார் காஸ்ட்ரோ எனுமளவு கோபம் கிளம்பியது. காஸ்ட்ரோவின் மௌனம் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. ‘சே எங்கே?’ எனக் கேட்ட யாருக்கும் காஸ்ட்ரோவால் வெளிப்படையாக பதில் சொல்ல முடியவில்லை. காரணம், சி.ஐ.ஏ! உண்மையில் ‘சே’ ஃபிடல் காஸ்ட்ரோவின் முன்னிலையில் தனது எல்லா பதவிகளையும் கியூபா நாட்டு குடியுரிமையையும் துறந்தார். அந்த வருட ஜூலை மாதம் கெய்ரோ வழியாக காங்கோவிற்கு ரகசியமாகப் பயணித்தார். அவரது பதவி மற்றும் கியூபாவின் குடியுரிமை துறப்பு பற்றி செய்தியை ஃபிடல் காஸ்ட்ரோ அக்டோபர் மாதம் கியூபன் மக்களுக்கு அறிவித்தார். காஸ்ட்ரோவை விட்டு பிரிவதற்கு முன் சே எழுதிய கடிதத்தை ஒரு பொதுக் கூட்டத்தில் காஸ்ட்ரோ படித்தார். அதில் என்னை கியூபாவின் புரட்சியுடன் தொடர்புபடுத்திய கடமை முடிந்துவிட்டது. அந்தக் கடமையை நான் செவ்வனே முடித்து விட்டேன். உங்களிடமும், மற்ற போராளிகளிடமும், என்னுடைய மக்கள் ஆகிவிட்ட கீயூபன் மக்களிடமும் நான் விடை பெறுகிறேன் என்று எழுதியிருந்தார்.      

அங்கே இந்த அளப்பரிய மாவீரனின் தோல்விக்கான வரலாறு எழுதப்பட தயாராகி கொண்டிருக்கின்றது இதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1966ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கோவை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. மார்ச் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் உருகுவே, பிரேஸில், பராகுவே, அர்ஜெண்டைனா, பொலிவியா நாடுகளில் பயணம் செய்தவர். 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி கடவுச்சீட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். தனது உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ வை ஏவிவிட்டு சே குவேராவை உலகம் முழுக்கத் தேடியது அமெரிக்கா. ஆனால் காங்கோ நாட்டின் அடர்ந்த காடுகளில் கம்யூனிஸ்ட் கெரில்லா வீரர்களுக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தார் சே. சுமார் இரண்டு வருட காலத்தை காங்கோ நாட்டு காடுகளில் கழித்த சே, பொலிவியா சென்று அங்கே ஆட்சி செய்துவந்த அமெரிக்காவின் கைக்கூலி அரசுக்கு எதிராக கெரில்லா யுத்தம் நடத்தினார். அமைச்சராக இருந்த ஒருவர் போராளியாக மாறி யுத்தம் செய்தார் என்றால், வரலாற்றில் அது சே ஒருவர் மட்டும்தான். எதிரிகளுக்கு தெரியாமல் காடுகளில் அவர் ஒளிந்திருந்த சமயம் , பொலிவியாவில் நடந்த கொரில்லாப் புரட்சியின் போது பொலிவியக் காடுகளில் பதுங்கி இருந்தார். தட்பவெப்ப சூழ்நிலைகளின் முரண், கலாசாரப் புரிதலின்மை போன்றவையே அவரது திட்டங்களின் தோல்விகளுக்குக் காரணம். இன்னொரு பக்கம் அவர் யார் யாரை தன் அரசியல் நண்பர்களாக நம்பி இருந்தாரோ, அவர்கள் யாரும் உதவி செய்யாமல், மௌனமாகக் கைகட்டி வேடிக்கை பார்த்ததும் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று.  மனவேதனையுடன் ஆஸ்துமாவும் சேர்ந்து ‘சே’வை வாட்டி வதைத்தது. போதிய வீரர்கள் இல்லாதது மற்றும் உணவின்மை போன்ற பிரச்னைகளுடன் ‘சே’ காடுகளில் அலைந்தார். சி.ஐ.ஏ. பொலிவியாவுக்குள்ளும் புகுந்தது.      

1967 அக்டோபர் 8 தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம்.காலை 10.30 யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் ‘சே’ கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் குண்டுப் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார். நண்பகல் 1.30 அந்தக் குண்டுப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு ‘சே’வின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்கிறாள். அலறிப் புடைத்துப் பறந்து வந்த பொலிவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கியால் சுடுகின்றனர். பிற்பகல் 3.30 காலில் குண்டடிபட்ட  நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம், ‘‘நான்தான் ‘சே’. நான்இறப்பதைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்’’ என்கிறார்.
மாலை 5.30… அருகிலிருந்த லா ஹிகுவேராவுக்கு வீரர்கள் கைத்தாங்கலாக ‘சே’வை அழைத்து வருகின்றனர். அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் ‘சே’ கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார். இரவு 7.00… ‘சே பிடிபட்டார்’ என சி.ஐ.ஏவுக்குத் தகவல் பறக்கிறது. தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம், ‘‘இது என்ன இடம்?’’ என்று ‘சே’ கேட்கிறார். பள்ளிக்கூடம் என அந்தப் பெண் கூற, ‘‘பள்ளிக்கூடமா… ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது?’’ என வருத்தப்படுகிறார். சாவின் விளிம்பிலும் ‘சே’வின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.  பிடிபட்டிருப்பது ‘சே’தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக்கிறது. ‘சே’வின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன.

தான் கொண்டுவந்த கேமராவில் ‘சே’வை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் சி.ஐ.ஏ அதிகாரி ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும் ‘சே’வின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள். கசங்கிய பச்சைக்காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், அழுக்கடைந்த ஆடைகளுடன் ‘சே’வைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும்! பிடிபட்டிருப்பது ‘சே’தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக்கிறது. ‘சே’வின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கேமராவில் ‘சே’வை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும் ‘சே’வின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள். காலை 11.00 ‘சே’வைச் சுட்டுக் கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது.. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. ‘மரியோ ஜேமி’ (Mario Jemy) என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அக்காரியத்துக்காகப் பணியமர்த்தப்படுகிறார். 

நண்பகல் 1.00 கைகள் கட்டப்பட்ட நிலையில், ‘சே’வை பள்ளிக்கூடத்தின் மற்றொரு தனியிடத்துக்கு மரியோ அழைத்துச் செல்கிறார். ‘‘முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்!’’ என்பார் ‘சே’. ஆனால், மரியோ அவரை ஒரு கோழையைப் போலக் கொல்லத் தயாராகிறார். தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு ‘சே’ கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார்.‘‘கோழையே, சுடு! நீ சுடுவது ‘சே’வை அல்ல ஒரு சாதாரண மனிதனைத்தான்!’’ இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன, உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வாசகம் இதுதான்!  மணி 1.10 மனித குல விடுதலைக்காகத்தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஒன்பது  தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான்.     

    

No comments: