Wednesday 15 July 2015

பெருந்தலைவர் பிறந்த தினம் நாடார் தினமா?!

சாதி பாகுபாடில்லாமல் தமிழ் சமூகத்திற்கும், ஏழைப் பாட்டாளிக்கும், தேசத்தின் நலனுக்கும் உழைத்த உத்தமருக்கு சாதி சாயம் வேண்டாம். ஊருக்கு உழைத்த உத்தமர் அவதரித்த நாளை நாம் ஏன் சாதி தினமாக கொண்டாட வேண்டும்? அவருக்கு பாராட்டு விழா எடுப்பதற்கும், கல்வி தினமாக கொண்டாடுவதற்கும் அனைத்து சமூகத்தை போலவே நாடார் சமூகத்திற்கும் உரிமை உண்டு. ஆனால் அவரது பிறந்தநாளை சாதி தினமாக அறிவித்து அவரை கலங்கப் படுத்துவதோடு, அவரை குறுகிய சாதி வட்டத்திற்குள் அடைக்க நாடார் மக்களுக்கு உரிமை இருப்பதாக எனக்குப் படவில்லை!

உண்மையிலேயே நாடார்கள் தினம் கொண்டாட வேண்டியது முதன் முதலில் நாடார் சங்கம் அமைத்த ராவ் பகதூர் பொறையார் ரத்தினசாமி நாடார் அவர்களின் பிறந்த தினத்தையோ அல்லது அச்சம் அகற்றிய அண்ணல் பட்டிவீரன்பட்டி W.P.A.சௌந்திரபாண்டியன் நாடார் அவர்களின் பிறந்த தினத்தையோதான்! இவர்கள் இருவருமே நாடார் சமுதாய ஒற்றுமைக்கும் நன்மைக்கும் பாடு பட்டவர்களாவர். பெருந்தலைவர் பிறந்த குலத்தில் பிறந்ததற்கு நாம் பெருமைப் பட வேண்டும். ஆனால் அதற்காக அவர் பிறந்த நாளை நாடார் தினமாக்கி அவருக்கு சாதிச்சாயம் பூச வேண்டியதில்லை! அதனால் அவர் மீது பிற சமுதாய மக்களுக்கு சாதி வெறுப்பை உருவாக்குமே ஒழிய வேறு நன்மை பயக்கப் போவதில்லை என்பதே என் அச்சம்!

பெருந்தலைவரின் பக்தனாக அவர் மீதுள்ள மரியாதையாலும், நாடாராக சமுதாயத்தின் மீதுள்ள பற்றாலும் பதியப்படும் பதிவு இது!

உழைப்பு, உண்மை, உயர்வு!
பெருந்தலைவர் புகழ் வாழ்க!

No comments: