Friday 17 April 2015

பெருந்தலைவரும் தேசியமும் பாகம் - 2

1972-ல் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டு அவர் தனிக் கட்சி தொடங்கும் வேளையில் ராஜாஜி, காமராஜர், ஈ.வே.ரா. என அன்றைக்கு இருந்த எல்லாப் பெருந் தலைவர்களையும் சந்தித்து நடந்தவைகளைக் கூறித் தமக்கு ஆதரவு கோரினார். ராஜாஜி மனபூர்வமாக எம்.ஜி.ஆரை ஆசிர்வதித்தார். ஈ.வே.ரா.வோ, கருணாநிதி, எம்.ஜி.ஆர். இருவரும் சமரசமாகப் போய்விடுவதுதான் நல்லது என்றும் தான் வேண்டுமானாலும் கருணாநிதியிடம் பேசிப்பார்ப்பதாகவும் சொன்னார். ஆனால் எம்.ஜி.ஆர். தனித்து நிற்பதில் உறுதியாக இருந்தார். காமராஜரை எம்.ஜி.ஆர். சந்தித்துப் பேசியபொழுது காமராஜர் அமைதியாக எம்.ஜி.ஆர். சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாரேயன்றி எவ்விதக் கருத்தும் சொல்லவில்லை. அதன் பிறகு தமிழக அரசியலில் அண்ணா தி.மு.க. தோன்றி வளர்கையில் நிருபர்கள் அண்ணா தி.மு.க. குறித்து ஸ்தாபன காங்கிரசின் நிலைப்பாடு என்ன, தி.மு.க. இந்திரா காங்கிரசை எதிர்க்க அண்ணா தி.மு.க.வுடன் தொடர்பு வைத்துக் கொள்ளுமா என்றெல்லாம் கேட்டபோதுதான் காமராஜர் தமது மிகப் பிரபலமான, ‘தி.மு.க., அண்ணா தி.மு.க. இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்ற பொன்மொழியை உதிர்த்தார்.


அதன் பின்னர்தான் கோவையில் மக்களவைக்கும் அத்துடன் ஒரு சட்ட மன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தலும் புதுவை மாநில சட்டமன்றத் தேர்தலும் வந்தன. அண்ணா தி.மு.க., வலதுசாரி கம்யூனிஸ்ட் இரண்டும் ஒன்று சேர்ந்து தி.மு.க.-வை எதிர்க்க முன்வந்தன. காமராஜரோ இந்திரா காங்கிரஸுடன் கூட்டுசேர்ந்து தேர்தல்களைச் சந்திக்கும் முடிவை எடுத்தார். ஸ்தாபன காங்கிரஸின் வட மாநிலத் தலைவர்கள் காமராஜரின் முடிவுக்குக் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால் தமிழ்நாட்டின் சூழல் வித்தியாசமானது; அது பிற மாநிலத்தவருக்குப் புரியாது என்று சொல்லி அவர்களின் ஆட்சேபத்தைக் காமராஜர் புறந் தள்ளினார். திராவிடக் கட்சிகளின் செல்வாக்கு தமிழ்நாட்டில் வேரூன்றுவது மக்களிடையே தேசிய உணர்வை மங்கிவிடச் செய்யும் என்பதால் தமது சுயமரியாதையையும் விட்டுக் கொடுத்து இந்திரா காங்கிரசுடன் உறவு பூண்டார், காமராஜர். அதிகார துஷ்பிரயோகம் செய்யும் தி.மு.க.வுக்குப் பாடம் புகட்ட அண்ணா தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கலாகாதா என்று நிருபர்கள் கேட்டபொழுது காமராஜர் மீண்டும் தமது பிரசித்தி பெற்ற ‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்கிற வார்த்தைப் பிரயோகத்தை உபயோகித்தார்.

No comments: