Monday 6 April 2015

மபொசி மற்றும் காமராஜர் அரசியல் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்

2010 டிசம்பர்  27ல் எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பக்கத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எழுதிய மடல் இது:


முதலில் ஒரு எளிய தகவல். மபொசி திராவிட இயக்கத்தவர் அல்ல.அவர் காங்கிரஸ்காரர். நாற்பதுகளில் திராவிட இயக்கத்தின் மேடைத் தமிழ்முழக்கத்துக்கு பதிலடியாக காங்கிரஸ் தரப்பில் உருவாக்கப்பட்டவர். திராவிட இயக்கத்தின்
தேசிய-ஆன்மீக எதிர்ப்புக்கு மேடைமேடையாகப் பதிலடிகொடுத்தவர். அவரது தமிழரசுக்கழகம் காங்கிரஸால் உருவாக்கப்பட்டு அதன் மறைமுக ஆதரவுடன் நடத்தப்பட்டது.
சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரே தமிழ்நாட்டில் தமிழ்ப்பெருமிதமும் தமிழ்த்தேசியம் பற்றிய ஆர்வமும் ஆரம்பமாகிவிட்டது. காங்கிரஸுக்குள்ளேயே அதற்கு ஆதரவிருந்தது. இளைஞர்களை அது கவர்ந்தும் வந்தது. ஆகவே காங்கிரஸ் தன்னுடைய தேசியப்பார்வையை கைவிடாமல் தமிழ்ப்பெருமிதத்தை கையாள நினைத்தது. தமிழ்த்தேசியத்தை இந்திய தேசியத்தின் ஒரு பகுதியாக முன்வைக்க நினைத்தது. இதன் பொருட்டே ம.பொ.சியின் தமிழரசுக்கழகம் 1946ல் தொடங்கப்பட்டது.
அதற்கு அரசியலதிகாரம் சார்ந்த ஒரு நோக்கும் உண்டு. அன்றைய அதாவது ஒருங்கிணைந்த சென்னைமாகாண [Madras Presidency] நிர்வாகத்தில் ஆந்திரர் ஆதிக்கம் அதிகமிருந்தது. கேரளர்களின் ஆதிக்கமும் இருந்தது. அதற்குக் காரணம் சென்னைமாகாணத்தின் அதிகமான நிலப்பரப்பு ஆந்திராவிலேயே கிடந்தது. மக்கள்தொகையும் அங்கேதான் அதிகம். வரிவசூலும் அங்கேதான் அதிகம். ஒரிசாவரைக்குமான கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகள் முழுக்க சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவை.
ஆகவே சுதந்திரத்தை ஒட்டி உருவாகிவந்த அரசியல் அதிகார ஆட்டத்தில் ஆந்திரர்களை வெல்லவேண்டிய தேவை காங்கிரஸ் அரசியல்வாதிகளுக்கு இருந்தது. அவர்கள் தேசியவாதிகளாகையால் நேரடியாக இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான எதையும் பேச முடியாது. ஆகவே உருவாகி வந்த அமைப்புதான் ம.பொ.சியின் தமிழரசுக்கழகம்.
ம.பொசி என்ற மனிதரும் அவரது இயக்கமும் தெலுங்கு ஆதிக்கத்துக்கு எதிராக சத்யமூர்த்தியாலும் பின்னர் ராஜாஜியாலும் முன்வைக்கப்பட்டவர்கள் என்பதே நானறிந்த வரலாறு. சுதந்திரம் கிடைத்த பின்னர் காங்கிரஸ் ஆட்சியமைத்தபோது எல்லைப்பிரச்சினைகளில் காங்கிரஸ் நேரடியாக தலையிடக்கூடாது என்பதற்காக தமிழகரசுக்கழகம் காங்கிரஸின் குரலாக ஒலித்தது. மத்திக்கு பதில்சொல்ல தேவையில்லாதவராக இருந்த ம.பொ.சி மொழிப்பிரச்சினையை மேடைகளில் உக்கிரமாக நிகழ்த்தினார்.அது காங்கிரஸின் அரசியல் ராஜதந்திரமும் கூட. அந்தக்குரல் திராவிட இயக்கத்தினரின் குரல்களைவிட ஓங்கி ஒலித்தது
ம.பொ.சிக்கு எப்போதுமே மக்கள் ஆதரவு இருந்ததில்லை. அவர் ஒரு மேடைக்குரல் மட்டுமே. அவரது ஆதரவு வட்டம் காங்கிரஸால் ஆனது. திருத்தணி-சென்னை ஆகியவற்றை ஆந்திரர்களிடமிருந்து பெற்று தமிழகத்துடன் இணைப்பதற்காக தமிழக காங்கிரஸ் நடத்திய பதிலிப் போரின் முக அடையாளம் அவர், அவ்வளவுதான். அவர் முன்னிறுத்தப்பட்டமைக்கு காரணம் அப்போது பக்கத்து மாநிலங்களிலும் காங்கிரஸே பதவியில் இருந்தது என்பதுதான்.


இதேபோல குமரியில் திருவிதாங்கூர் காங்கிரஸ் என்ற தனி அமைப்பு நேசமணி தலைமையில் உருவாக்கப்பட்டு ‘காங்கிரஸின் கட்டளையை மீறி’ கேரளகாங்கிரஸுடன் எல்லைக்காகப் போராடியது. அவர்கள் தமிழகக் காங்கிரஸால் வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் குமரிமாவட்டம் பிரிந்து வந்து தமிழகம் உருவானதும் பத்திரமாக அவர்களில் பெரும்பாலானவர்கள் காங்கிரஸில் வந்து காமராஜின்கீழே சேர்ந்துகொண்டனர். நேசமணி பின்னர் காங்கிரஸில் பல தலைமைப்பொறுப்புகளை வகித்தார். பாராளுமன்ற உறுப்பினரும் ஆனார்.
உண்மையில் தமிழகத்தின் இன்றைய எல்லையை உருவாக்கியவர்கள் ராஜாஜியும் காமராஜரும்தான். அதில் காமராஜரின் இந்த ‘பதிலிப்போர்’ பெரிய வெற்றி பெற்றது. அந்த தந்திரம் கேரளத்துக்கும் கர்நாடகத்துக்கும் தெரிந்திருக்கவில்லை. அப்போது கேரளம் திருவிதாங்கூர் -கொச்சி- மலபார் எனமூன்று பகுதிகளாக இருந்தது. ஒட்டுமொத்த கேரளத்திற்குமான தலைவர்களும் அரசியலும் இருக்கவுமில்லை. கேரளம் ஒருங்கிணைந்த கேரளமாக ஆகி, ஒரு மாநிலஅடையாளம் பெற்றதே 1956ல் வந்த மாநில மறுசீரமைப்புப் சட்டத்துக்குப் [ States Reorganization Act of 1956] பின்னர் தான்.
ஆகவே காமராஜ் கிட்டத்தட்ட ஒருதலைபட்சமான வெற்றிகளைப் பெற்றார் என்பதே உண்மை. வேறெந்த தலைவரும் வேறெந்த அரசியல் சூழலிலும் எல்லைப்பிரச்சினைகளில் காமராஜ் அடைந்த ராஜதந்திர வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது. தமிழகத்தில் அதற்குப்பின் வந்த எந்த தலைவரும் பக்கத்துமநிலங்களிடம் பேச்சுவார்த்தைமூலம் எந்த வெற்றியும் பெற்றதாக வரலாறே இல்லை. இழந்தவை எண்ணற்றவை.
மொழிவாரி பிரிவினைக்கு அடிப்படையாக முன்வைக்கப்பட்ட அளவுகோல் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்கள் அதிகமாக தொன்றுதொட்டு வாழ்ந்துவந்தார்கள் என்றால் அந்த நிலப்பகுதிகளை இணைத்து ஒரு மாநிலம் என்பதே. அந்த அளவுகோலின்படி சிக்கலாக அமைந்தவை தமிழ்-மலையாளம் இருமொழிகளும் ஏறத்தாழ சம அளவில் பேசப்பட்ட கன்யாகுமரி, செங்கோட்டை, பாலக்காடு, தேவிகுளம், பீர்மேடு பகுதிகள்.
பேச்சுவார்த்தையில் பாலக்காடு, தேவிகுளம், பீர்மேடு போன்றபகுதிகளை விட்டுக்கொடுத்துத்தான் கன்யாகுமரிமாவட்டத்தை ஒட்டுமொத்தமாகப் பெற்றார் காமராஜ். நான்கு பெரிய அணைகள், பதினெட்டு சிறிய அணைகள், மூன்று மீன்பிடித்துறைமுகங்கள் மூன்று மழைக்காலம், 60சதவீத நிலம் மழைக்காடுகள் கொண்ட மாவட்டம் இது. ஒட்டுமொத்த தமிழக நிதிவருவாயில் கிட்டத்தட்ட 20 சதவீதம் அளிக்கும் மாவட்டம்.
இதில் மலையாளம் பேசும் பெரும்பான்மையினரைக் கொண்ட பகுதிகள், அதாவது தர்க்கபூர்வமாக பார்த்தால் கேரளத்துக்குச் சொந்தமான பகுதிகள், 40 சதவீதம். இன்றைய விளவங்கோடு கல்குளம் வட்டங்கள். அப்பகுதிகளிலேயே அணைகள் அமைந்திருந்தன. அந்த அணைகளை தமிழகத்தில் இருந்து விட காமராஜ் விரும்பவில்லை. ஆகவே காமராஜ் அப்பகுதிகளுக்காகவும் போராடினார். பாலக்காட்டைச்சேர்ந்த இருமேனன்கள் அன்று மத்தியஅரசின் மையப்பொறுப்புகளில் இருந்தார்கள் .தங்கள் மாநிலம் கேரளத்தில் சேரவேண்டுமென்ற அவர்களின் தனிப்பட்ட ஆசையை காமராஜ் பயன்படுத்திக்கொண்டார்.
கேரளத்தில் இருந்து தமிழகம் செங்கோட்டையை பெற்றது. அதேபோல ஊட்டி மேற்குமலைச்சரிவை. இந்த நிலங்கள் மழைப்பிடிப்புபகுதிகள் என அன்று காமராஜுடன் இருந்தவர்கள் அறிந்திருந்தார்கள். இவ்விரு பகுதிகள் இங்கே வந்தமையால்தான் தாமிரவருணியின் அணைகளும், குந்தா போன்ற அணைகளும் நமக்குச் சாத்தியமாகின. முல்லைப்பெரியாறு அணைப்பகுதி ஏன் தமிழகத்துடன் வரமுடியாது என்றால் அந்த அணையின் நீர்ப்பிடிப்புபகுதி, நீர் வழியும்பகுதி முழுக்கமுழுக்க மலையாளிகள் வாழும் கேரளநிலத்தில் உள்ளது. அந்த பகுதியில் தமிழர் எண்ணிக்கை 05 சதவீதம் மட்டுமே. எந்த அடிப்படையில் அதைக்கோருவது?
எந்த நிலங்களை கேரளத்துக்கு விட்டுக்கொடுத்தார்களோ அந்நிலங்களை கேரளத்துடன் பேசி ஒப்பந்தம் மூலம் பெற்றுக்கொண்டு முற்றிலும் கேரளத்தில் பெய்யும் மழைநீரை அப்படியே தமிழகம் எடுத்துக் கொள்ளும் பரம்பிக்குளம் -ஆளியார் அணைக்கட்டுகளை உருவாக்கினார்கள் ஆர்வியும் சி. சுப்ரமணியமும். பரம்பிக்குளம் அணை கேரளத்தில் தமிழகத்தால் கட்டப்பட்டது. அதேபோல கேரள மன்னரிடம் பேசி முழுக்க முழுக்க கேரளநிலத்தில் ஓடும் நெய்யாற்றில் இருந்து குமரிக்கு நீர்கொண்டு வந்தார் காமராஜ். இதெல்லாம்தான் உண்மையான ராஜதந்திரம்.
எந்த ஒரு அரசியல் பேரத்திலும் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும், இன்று காமராஜ் சில இடங்களை விட்டுக்கொடுத்ததை ஏதோ கையாலாகாத்தனம்போலவும், கிடைத்தவை முழுக்க இங்கே மீடியாவில் சத்தம்போட்ட சிலரின் தனிப்பட்ட சாதனைபோலவும் பேசும் ஒரு அரசியலை திராவிட இயக்கம் உருவாக்கிவருகிறது. இவையே நம் பொதுஅரசியல் வரலாறாக இன்று உள்ளது. பொய்களையே சொல்லி அதன்மேலேயே உருவாகி வந்த ஓர் இயக்கத்தின் சாதனை இந்த பிரச்சார வரலாறு

No comments: