Saturday 11 April 2015

80களில்..... ஹையர் செகண்டரி!

                                                              பத்தாம் வகுப்பு முடிந்து பணிரெண்டாம் வகுப்புக்குள் நுழைந்த காலம்! மீசை வளர வேண்டும் என்பதற்காகவே அப்பாவின் ரேசரை அவருக்கு தெரியாமல் எடுத்து திருட்டுத்தனமாய் சவரம் செய்த காலக்கட்டம் அது! பெற்றோர்களுக்கு தெரியாமல் எது செய்தாலும் அதில் ஒரு திரில் அனுபவித்த காலம் அது! வீட்டில் கேட்டால் சினிமாவுக்கு அனுப்புவார்கள் காசும் குடுத்து. ஆனால் அவர்களுக்கு தெரியாமல் செல்வதில் ஒரு திரில்! அந்த வயதில் எல்லாமே திருட்டுதான். திருட்டு சிகரட், திருட்டு சினிமா, திருட்டு கிரிக்கட், திருட்டு காதல், திருட்டு காசு, திருட்டு பயணம் என பல. இதில் பல விசயங்கள் அப்பாவிற்கு தெரிந்தாலும் கண்டு கொள்ளாதது போல் இருந்து விடுவார்கள், பையன் கெட்டு போகட்டும் என்றில்லை! இந்த வயதில் இப்படித்தான், சொல்லி திருத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில்தான்.

                                                         காதலுக்கும், பருவக் காதலுக்கும் வித்தியாசம் தெரியாத பருவம். வீட்டு பக்கத்தில் ஒரு அபிமான பெண், டியூசனில் ஒரு பெண், பள்ளிக்கு டவுண் பஸ்சில் போகும் போது ஒரு பெண் என காதலின் பரிமாணங்கள் அனைத்தையும் தொட்டெடுக்க துடித்த பருவம் அது! கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது அன்று முதன் முதலில் பார்த்த ரெட்டை ஜடை தாவணி அழகியின் வீட்டு விலாசம் கன்டு பிடிக்க ஒரு மாசம் அலைந்தது. கன்டு பிடித்த பின் அதில் உள்ள சுவாரஸ்யம் குறைந்தது. மாப்பிள இவதான்டா என் ஆளு, இது தெய்வீக காதல்டா என்று காதலின் அர்த்தமே தெரியாமல் சுற்றியது! அம்மா மளிகை கடைக்கு போகச் சொல்லும் போது பை தூக்கிக் கொண்டு போவதை பக்கத்து வீட்டு பெண் பார்த்து விடக் கூடாது என சாமி கும்பிட்டபடி செல்வது! தீபாவளி பொங்கள் பண்டிகை நாட்களில் எப்படியாவது அவள் கண்களில் பட்டு விட மாட்டோமா என அலைவது! விடுமுறைக்கு பாட்டி ஊருக்கு செல்லும் போது பாட்டி வீட்டு சந்திலேயும் ஒரு அபிமான பெண் ஒருத்தி இருப்பாள். அந்த இரண்டாண்டு கால வாழ்வின் திருப்புமுனை காலங்கள் அனைத்தும் பெண்கள் நினைவோடு கலந்தது.




                                                    இளையராஜாவின் இசையில் மனதை லயிக்க விட்ட பருவம். பாடல் வரிகள் அனைத்தும் அத்துப்படியான பருவம். தெப்பக்குளத்தில் கிரிக்கட் விளையாட காலை 7 மணிக்கே இடம் போட செல்வது! கடலை மிட்டாய்க்கோ அல்லது கார்க பாலுக்கோ பெட்டு கட்டி வெயிலில் உயிரை குடுத்து விளையாடுவது. தகராறு வந்தால் ஸ்டெம்பை தூக்கிக் கொண்டு அடிக்க விரட்டுவது. நன்பர்கள் அனைவருக்குமே பட்டப் பெயர் வைத்தே அழைப்பது! மாப்பிள்ளை ஐஐடி க்கு பிரிப்பேர் பண்ணனும்டா, மாத்ஸ்ல இருநூறு எடுக்கலேன்னா கஷ்டம்டா என படிப்பிலும் அக்கறை காட்டுவது. டேய் நீதான் புரபசர் வீட்டுக்கு டியூசன் போறியே என்னையும் கொஞ்சம் சேர்த்து விடுடா என பொறுப்பும் காட்டுவது! என்னதான் ஆடினாலும் பரிட்சைக்கு ஒரு மாதம் முன்னால் நன்பர்கள் வீட்டில் நைட் ஸ்டடி போட்டு கரைத்து குடிப்பது! (இடையில் வீட்டுக்கு தெரியாமல் நைட் ஸ்டடி என இரவுக் காட்சி போவதும் உண்டு! ) அப்பாவின் பாக்கெட்டை அவ்வப்போது பதம் பார்ப்பது! கல்லூரி காலக்கட்டதிற்கு முந்தைய அச்சாரம் அது!

                                                       ஹாக்கி மட்டை பல்லை பதம் பார்த்து ரத்தம் கொட்டிய போது கூட "என் அழகு போச்சே" என கதறி அழுத காலம் அது. பருக்கள் முளைத்த போது ஃபேர் அன் லவ்லி, விக்கோ டர்மரிக் என கலந்து கட்டி பூசிப் பார்த்த காலமது. பாண்ட் பையில் முதன் முதலில் சீப்பு வைக்க ஆரம்பித்த காலம். ஒரே நோட்டில் அனைத்து படங்களையும் குறிப்பெடுத்துக் கொள்வது. பள்ளிக்கு பை சுமந்து செல்வதை கௌரவக் குறைச்சலாக கருதுவது. அனைத்துக்கும் இடையில் எதிர்கால கனவுகள். கூடை பந்தில் ஆர்வம், மாநில அளவில் விளையாட்டு, இஞ்சினியரிங் கோச்சிங் கிளாஸ், நல்ல கல்லூரிகளை அலசுவது, கம்ப்யூட்டர் கிளாசில் சேர்வது, டைப் ரைட்டிங் படிப்பது என பொறுப்பான விசயங்களும் உண்டு. டேய் நீ முடியாடா வெட்டிட்டு வந்திருக்க திரும்ப போய் வெட்டிட்டு வாடா, போகும்போது எப்படி இருந்தானோ அப்படியே வந்திருக்கான் பாரு என அப்பா விரட்டிய காலமது!


                                                   நன்பன் வீட்டு வாசலில் என்ன பேசினோம் என்பதே தெரியாமல் இரவில் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டு இருப்பது. அந்த வயசுக்கே உரிய அரசியல், பைக், கார், சினிமா என எல்லாவற்றையுமே அலசுவது! நமக்கு எல்லாம் தெரியும் என்றும், பெற்றோரை விட நாம் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறோம் எனவும் என்ண வைத்த காலம் அது. நாம் செய்வது அனைத்துமே சரி பெற்றோர் நம்மை தேவையில்லாமல் கட்டுப் ப்டுத்துகிறார்கள் எனவும் என்ண வைத்த காலமது. கார்த்திக்கின் வருசம் பதினாறு படம் பார்த்து பித்து பிடித்து சுத்திய காலம். தேசாப், மேனே பியார் கியா, கயமத் சே கயமத் தக் என விரும்பி பார்த்தவை அனைத்தும் காதல் படங்கள். அர்னால்டு சுவார்ஷனகர், வேண் டேம், வெஸ்லி ஸ்னிப்ஸ், சில்வர்ஸ்டர் ஸ்டாலோன் படங்கள் அனைத்தையும் வீடியோவில் மறுபடி மறுபடி கண்டு களித்த பருவம். நமக்கும் வயதாகும் என நினைத்துக் கூட பார்க்க நேரமில்லாத காலக்கட்டம் அது.

துள்ளித் திரிந்தொரு காலம்!!

No comments: