Saturday 18 April 2015

பெருந்தலைவரும் தேசியமும் பாகம் - 3

காமராஜர் முதல்வராக இருந்தபொழுதுதான் மொழிவாரி மாநிலப் பிரிவினை நடைமுறைக்கு வந்தது. எல்லைகளை வகுப்பதில் குளறுபடிகள் ஏற்பட்டு அப்போதே மாநிலங்களுக்கிடையே மனஸ்தாபங்கள் தோன்றத் தொடங்கி விட்டன. தெற்கே தேவிகுளம், பீர்மேடு, குமுளி உள்ளிட்ட இடிக்கி மாவட்டம் முழுவதுமே தமிழர்கள் அன்று மிகுதியாக இருந்த போதிலும் திருவிதாங்கூர்-கொச்சி பிரதேசம் என்ற நிலவரத்தை மாற்றி, தமிழர்கள் மிகுதியாக உள்ள பகுதிகளையும் சேர்த்து, தமிழ்நாட்டுடன் இணைந்திருந்த மலபாரையும் சேர்த்து மலையாள மொழிக்கான கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது. இவ்வாறு தமிழ்நாட்டின் தெற்கு எல்லை சுருங்குவதை எதிர்த்து தமிழரசுக் கழகத் தலைவர்ம.பொ.சிவஞானம் முன்னின்று மீட்புப் போராட்டம் தொடங்கினார். பலரும் அதனை ஆதரித்தனர்.

முல்லைப் பெரியாறு அணைத் தேக்கத்திற்கு நீர்வரத்து உள்ள தேவிகுளம் பீர்மேடு பகுதிகளாவது தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் தவறினால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் விவசாயத்திற்குப் போதிய பாசன வசதியின்றி சங்கடப்பட நேரிடும் என்றும் டாக்டர் பா.நடராஜன் உள்ளிட்ட பல பொருளாதார நிபுணர்கள் எடுத்துக் கூறியும், காமராஜரே தென்மாவட்டத்துக்காரராக இருந்த போதிலும் அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. குளமாவது மேடாவது என்றார். மேலும், “அவையிரண்டும் எங்கும் போய்விடவில்லை, இந்தியாவில்தான் உள்ளன,” என்றும் கூறினார்.காமராஜரின் உள்ளத்தில் தேசிய உணர்வு மிகவும் ஆழப் பதிந்து போயிருந்ததால்தான் அவையிரண்டும் இந்தியாவில்தான் உள்ளன என்று அவரைக் கூறவைத்தன.

 ஆனால் மொழிவாரி மாநிலப் பிரிவினையால் வெகு விரைவிலேயே எல்லா மாநிலங்களிலும் தேசியநலன் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மிதமிஞ்சிய மாநில அபிமானம் தலையெடுத்து, மாநிலங்களுக்கிடையே வெட்டுப் பழி குத்துப் பழி என்கிற அளவுக்குப் பரஸ்பர விரோத உணர்வு வலுத்துவிட்டது. பிற்காலத்தில் மாநிலங்களுக்கிடையே தேசிய நலனைப் பொருட்படுத்தாத அளவுக்கு மாநில வெறி தலைக்கேறிவிடும் என்று காமராஜர் சிறிதும் எதிர்பார்க்காததால்தான் தேவிகுளமும் பீர்மேடும் எங்கும் போய்விடவில்லை, இரண்டும் இந்தியாவில்தான் உள்ளன என்று அவரைச் சொல்ல வைத்தன. ஆனால் ராஜாஜி போன்றவர்கள், மொழிவழி மாநிலப் பிரிவினை காலப்போக்கில் தேசிய உணர்வுக்குப் பெரிதும் ஊறு செய்யும் என்று எச்சரித்தனர்.


ஹிந்துஸ்தானத்தை நிர்வாக வசதிக்காக வட்டாரவாரியாகப் பிரித்து அமைக்கலாம் என்று அவர்கள் மாற்று யோசனை கூறினர். மத்திய உள்துறை அமைச்சராக இருந்த தேசபக்தரும் மகத்தான தியாகியுமான கோவிந்த வல்லப பந்த் அந்த யோசனையை வரவேற்றார். தென்மாநிலங்களை இணைத்து தட்சிணப் பிரதேசம் என்ற பெயரில் ஒரு வட்டாரத்தை உருவாக்கிவிடலாம் என்றும் யோசனை வந்தது. திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை அறிந்திருந்த பந்த், வேண்டுமானால் அதைதிராவிடஸ்தான் என்றே அழைக்கலாம் என்றார். ஆனால் குறுகிய மனம் கொண்ட மாநிலத் தலைவர்கள் இந்த யோசனைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மொழிவழி மாநிலம் அமைந்தால் மாநிலத் தலைவர்களின் செல்வாக்கு ஓங்கி தம்மைப் போன்றவர்களுக்கு அரசியலில் வாய்ப்பு இல்லாது போய்விடும் என்பதாலேயே ராஜாஜி தட்சிணப் பிரதேசம் என்ற யோசனையைக் கூறுகின்றார் என்று பழி கூறினர்.

மொழிவழி மாநிலம் அமைவது தேசிய உணர்வுக்கு ஊறு செய்யும் என்பதை உணர்ந்து தட்சிணப் பிரதேச யோசனைக்கு ஆதரவு தெரிவித்திருக்க வேண்டிய காமராஜர், அதற்கு மாறாகவே நடந்து கொண்டார். மொழிவழி மாநிலம் அமைப்பது விடுதலைக்கு முன்பே காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானம்தான் என்று சமாதானம் சொல்லிக்கொண்டார்.மாநிலங்கள் மொழிவழியில் அமைவதாலேயே அவற்றிடையே பூசல் ஏற்பட்டு விடும் என்றும் நாட்டில் தேசிய உணர்வு மங்கிவிடும் என்றும் காமராஜர் நினைக்கவில்லை. ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்து, பின்விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்று கணக்கிட்டிருந்தால் ஒருவேளை காமராஜர் என்கிற தேசியவாதி தட்சிணப் பிரதேசத்திற்குத் தமது ஆதரவைத் தெரிவித்திருக்கக் கூடும்.

தேவிகுளம் பீர்மேடு கேரளத்துடன் சேர்க்கப்படுவதால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏதும் ஏற்பட்டுவிடாது என்ற காமராஜரின் எண்ணத்திற்கு மாறாக தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை விட்டுக்கொடுத்ததால் இன்று முல்லைப் பெரியாறு எவ்வளவு பெரிய தலையிடியாகிவிட்டிருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. தேவிகுளம் பீர்மேடு தமிழ்நாட்டில்தான் இருக்க வேண்டும் என்று காமராஜர் தன் செல்வாக்கைப் பயன்படுத்திச் செயல்பட்டிருந்தால் அவற்றோடு கூடவே மங்கலாபுரம் பகவதி காவும் தமிழ்நாட்டின் பகுதியாகி, தமிழர்கள் ஆண்டு தோறும் எவ்விதச் சிக்கலும் இன்றி அங்கு சென்று வழிபட்டுத் திரும்புவது சாத்தியமாகியிருக்கும்.

 தேசியமும் தேசமும் இந்த அளவுக்கு தரங்கெட்டுப் போகுமென அந்த தேசிய எண்ணம் கொண்ட பெருந்தலைவர் எண்ணிக் கூட பார்த்திருக்க மாட்டார்!! 

No comments: