Monday 3 August 2015

ஆடிப்பெருக்கும் வறண்ட காவிரியும்!

''சோழர்கள் ஆட்சிக் காலத் தில், ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது குறித்து, குறிப்புகளோ ஆவணங்களோ கிடைக்கவில்லை. ஆனால், அதையடுத்து மராட்டியர்கள் தஞ்சை தேசத்தை ஆட்சி செய்த காலத்தில், இந்த விழா கொண்டாடியதற்கான குறிப்புகள் இருக்கின்றன. ஷாஜி ராஜா என்பவரின் காலத்தில், ஆடிப்பெருக்கு விழாவை 'காவிரி கல்யாணம்’ என்று கொண்டாடினார்களாம்.

ஆயிரம் ஆயிரம் காலமாக விவசாயத்தை செழிக்கச் செய்வதையே கடமையாகக் கொண்டு, ஓடி வந்து சேவை செய்துகொண்டிருக்கிறது காவிரி எனும் புண்ணிய நதி. கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பதற்கு ஏற்ப, தன்னைப் பூக்களாலும் வளையல்களாலும் கனிகளாலும் சித்ரான்னங்களாலும் மஞ்சளாலும் குங்குமத்தாலும் குளிர்வித்து மகிழ்கிற தம்பதியை, அந்தக் காவிரித்தாய் ஒருபோதும் கைவிடமாட்டாள். மாறாக, அந்தத் தம்பதியின் இல்லத்தை சுபிட்சமாக்குகிறாள். சந்ததியைப் பெருக்கி அருள்கிறாள். தனம் - தானியம் என சகல செல்வங்களையும் தந்து, காத்தருள்கிறாள்.  

''ஆனால், காவிரியை நாம் காக்கிறோமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வரை வண்டிகளில் மணல் அள்ளிச் சென்றார்கள். மிகச் சிறிய அளவில் சாதாரண மணல் திருட்டாக இருந்த அது, இப்போது பிரமாண்ட மணல்கொள்ளையாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. லாரி லாரியாக மணல் கொள்ளை நடந்துகொண்டே இருக்கிறது. சீராக, நேராக, துள்ளித் திரியும் அழகிய பெண்ணைப் போல் காட்சி அளித்த காவிரிப்பெண், இப்போது பற்கள் விழுந்து, கன்னம் ஒட்டி, தோல் சுருங்கிப் போன கிழவியெனக் காட்சி தருகிறாள்.  

சமீப காலங்களில், ஆடி பிறந்ததுமே, ஆடிப்பெருக்கு நாளிலாவது கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவார்களா... திறந்துவிடவேண்டுமே என்கிற பிரார்த்தனை உள்ளே ஓடத் தொடங்குகிறது. இந்த வருடம் காவிரித்தாய் அருள் பாலித்தாள். ஒரு வழியாக 6000 கண அடி திறக்கப்பட்டு தருச்சி வந்தடைந்தாள்! ஒருவேளை தண்ணீர் திறந்துவிடாமல் போனால், வெறும் மணல் நதியாக, குண்டும் குழியுமாக இருக்கிற இடங்களுக்கு மக்கள் சென்று, ஆங்காங்கே குழி தோண்டுவார்கள். அந்தக் குழியில் இருந்து ஊற்று போல் வரும் தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொண்டு, கண்களில் ஒற்றிக்கொண்டு, ஏதோ பேருக்கு படையலைப் போட்டுவிட்டுச் செல்கிற அவலமும் நிகழ்கிறது.

'இங்கேதான் நான் குதித்தாடிய குளம் இருந்தது’, 'இதோ... இந்த தோப்பில்தான் விளையாடினேன்’, 'ஊஞ்சல் கட்டி விளையாடிய மரங்கள் இங்குதான் இருந்தன’... என்பது போல, 'இதோ... இந்த இடத்தில்தான் காவிரி நதி ஓடியது ஒருகாலத்தில்’ என்று சொல்லும் கொடுமை நிகழ்ந்துவிடுமோ என்கிற அச்சமும் கலவரமும் அடிவயிற்றைப் பிசைகின்றன.

கண்களை விற்றுவிட்டு ஓவியம் வாங்கிப் பயனென்ன? மணலைக் கொள்ளையடித்து, தண்ணீரை மாசுபடுத்தி, நதியைக் குலைத்து வறட்சியாக்கி விட்டு, நாம் வாழ்வது எப்படிச் சாத்தியம்?

நீரின்றி அமையாது உலகு! 

காவிரியைக் காப்போம். ஆடிப்பெருக்கை இன்னும் ஆனந்தமாகக் கொண்டாடுவோம். எல்லா நதிகளையும் போற்றுவோம். ஒரே நதியாக இணைத்து, ஆடிப்பெருக்கை அகிலம் முழுவதும் கொண்டாடிக் குதூகலிப்போம்!

No comments: