Friday 14 August 2015

காலத்தால் கரைந்து போன "கல்லா மண்ணா?"

பாழாய் போன கிரிக்கட்டாலும் இன்னபிற மேற்கத்திய விளையாட்டுக்களாலும் கரைந்து போன நம் பாரம்பரிய விளையாட்டுக்கள் பல உண்டு அவற்றில் கபடி, கில்லி தாண்டு, குதிரை தாண்டு, பம்பரம், சில்லாக்கு, கோலி குண்டு என்று வரும் வரிசையில் நானே மறந்து போன விளையாட்டு ஒன்று உண்டு. அதன் பெயர் "கல்லா மண்ணா?"! விருதுநகரில் எங்கள் சிறுவர் பருவத்தில் பெரும்பாலான வீடுகளில் கண்டிப்பாக பெரிய திண்ணைகள் உண்டு, வீடுகளும் மிக விஸ்தாரமாக இருக்கும். தலைவாசல் ஒரு தெருவிலும், கொல்லைப்புற (பின்புற) வாசல் இன்னொரு தெருவிலும் இருக்கும். பெரும்பாலும் ஒரு தெருவில் ஒரே வகையறாக்கள் எனப்படும் பங்காளிகளே இருப்பர். எனது பெயரில் இருக்கும் "தோலாண்டி" என்பதும் ஒரு வகையறா எனப்படும் விருதுநகர் நாடார் குடும்பப் பெயரே. தோலாண்டிகள் அனைவரும் பங்காளிகள். இவர்களைப் போல் ஒரே வகையறாக்களுக்குள் பெண் எடுத்தல் குடுத்தல் இருக்காது. ஒரு வகையறாக்கள் அனைவரும் ஒரு குலசாமி கும்பிடுவர். அனைவருக்கும் மூதாதையர் ஒருவராக இருப்பார்! தலைப்பை விட்டு வெகுதூரம் செல்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனாலும் சொல்வதில் என் பள்ளிப் பருவம் திரும்பியது போன்ற ஒரு மகிழ்ச்சி, அதனால் தொடர்கிறேன்!

ஒரு தெருவில் வசிப்பவர்கள் அனைவரும் அங்காளி பங்காளிகள் என்பதால் விடுமுறை காலங்களில் அவரவர் வீட்டு பேரப் பிள்ளைகளால் அந்தந்த வீதிகள் அல்லோலப்படும். யார் வீட்டு பேரன் எவர் வீட்டில் விளையாடுகிறார், எவர் வீட்டில் உண்கிறார் என்ற கணக்கெல்லாம் கிடையாது! இவர் வீட்டு பிள்ளையை இவர்தான் கண்டிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் கிடையாது. அதனால் தான் சின்ன தாத்தா, பெரிய தாத்தா என அனைவர் வீட்டு பேரப்பிள்ளைகளும் ஒன்றாக விளையாட முடிந்தது. எங்கள் பள்ளி பருவ காலத்தில் இன்று போல் கிடையாது! ஆண் பிள்ளைகள் விடுமுறை தினங்களில் வீடு தங்கினாலே "ஆம்புள பயலுக்கு பொட்டைப் பிள்ள மாதிரி வீட்ல என்னடா வேலை?" என்று திட்டி வெளியில் பத்தி விடுவார்கள்! சாபாட்டு நேரத்துக்கு வீடு வந்தால் போதும்! வீதிகளும், வீட்டு படிகளும் பெரும்பாலும் பட்டியல் கல் எனப்படும் பெரிய செவ்வக வடிவ கற்கலாலேயே வேயப்பட்டிருக்கும்! அதிலும் சந்துக்கள் ஒரு கார் போகுமளவுக்கு குறுகலாகவே இருக்கும். பெருமாபாலான சந்துக்கலில் கார் உள்ளே புகாத அளவுக்கு குத்துக்கல் நட்டிருப்பர். கார் அல்லது வேறு பெரிய வண்டிப் போக்குவரத்து இல்லாததால் அந்த சந்துக்களில் விளையாட்டுக்களுக்கு பஞ்சமிருக்காது. அதில் முக்கியமானது "கல்லா மண்ணா?" இந்த விளையாட்டு ஊர் ஊருக்கு வேறு விதங்களில் இடங்களின் சூழல் பொருத்து விளையாடப் பட்டிருக்கும்!

முதலில் "சாட் பூட் திரி!" போட்டு ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள். அவரே அனைவரையும் அவுட் ஆக்க வேண்டியவர். படிகள் "கல்" எனவும் தெருவே "மண்" எனவும் உருவகப் படுத்தப் பட்டுவிடும்! பெரும்பாலும் அவர் மண் என கருதப்படும் தெருவில் நின்று கொள்வார். மற்றவர் அனைவரும் படிகளில் நின்று கொள்வர். தெருவில் இறங்கும் எவரும் அவரால் தொடப்பட்டால் "அவுட்' என கருதப்படுவர். பின்னர் அவர் மண்ணில் நிற்பார், கல்லிலிருந்து மண்ணுக்கு வருபவர்களை பிடிக்கும் பொறுப்பு அவரது. வீதியில் இறங்கினால் பிடிபடுவோம் என தெரிந்தே நாம் நிற்கும் படிக்கட்டிலிருந்து எதிர் வீட்டு படிக்கட்டுக்கு ஓடுவதே இதில் உள்ள திரில்! படிகளை தாண்டாவிட்டால் நாம் அவுட் ஆகப்போவதில்லை என்றாலும் அவற்றை தான்டி மன்ணில் நிற்பவரை நம்மை பிடிக்க தூண்ட வேன்டும் என்ற ஆவலும் ஆர்வமுமே நம்மை விளையாடத் தூண்டும்! இந்த விளையாட்டு பெரும்பாலும் பட்டியல் கல் எனப்படும் கருங்கல் மீதான் விளையாட்டு என்பதால் கீழே விழும்போது மண்டை பிளப்பதும், பல் உடைவதும் சகஜமாகும்! கடும் வெயிலிலும், வெயிலின் தாக்கம் அறியாமல் ஆடுவோம். மழை பெய்தால் கூடுதல் ஆனந்தமே. இப்பொழுது போல் வெயிலில் ஆடக்கூடாது, மழையில் ஆடக்கூடாது என்ற கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாத காலம்.

தங்கை பிள்ளைகளை அக்கா திட்டுவதும், அக்கா பிள்ளைகளை தங்கச்சி திட்டுவதும் பெரிதாக்கப் படாத காலம்! அதே போல் அண்ணன் பிள்ளைகளை தம்பி கண்டிக்கலாம், தம்பி பிள்ளைகளை அண்ணன் கண்டிக்கலாம். தன்டனைகள் பெரும்பாலும் தீய பழக்கவழக்கங்களை கண்டிப்பதற்காக இருக்குமே ஒழிய படிப்பு சம்பந்தமாக இருக்காது. படிப்பை விட ஒழுக்கம் மட்டுமே பெரிதாக வீட்டிலும் பள்ளிகளிலும் கருதப்பட்ட காலமது! மேற்கத்திய கலாச்சாரம் என்ற பெயரில் "கல்லா மண்ணா!" போன்ற மண்ணோடு இணைந்த விளையாட்டுக்கள் எப்படி கல்லறைக்கு போனதோ, அதே போல் நல்ல பழக்க வழக்கங்களும் மண்ணுக்கு போய்க் கொண்டிருக்கின்றன! ஓடி விளையாண்ட காலம் மலையேறிப் போய், ஜிம்மில் ஒடும் காலக்கட்டதில் வாழ்கிறோம்.

இந்த தலைமுறை மண்ணுடன் தொடர்பறுந்து போய் தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் விண்ணில் கோட்டை கட்டிக் கொண்டிருக்கின்றது! கல்லா மண்ணா விளையாட அன்று எதிரெதிர் வீட்டில் இருந்த படிக்கட்டுகளும், உறவுகளும் கூட தொலைதூரம் விலகிப் போய்விட்டன!! கணினியில் நம் சந்ததியினர் 'கேண்டி கிரஷ்" விளையாட ஆரம்பித்து விட்டனர். மிகப் பெரிய பேரிழப்பை நாம் இந்த தலைமுறைக்கு கொடுத்திருக்கிறோம்!! மலரும் நினைவுகள் தந்த ஆனந்தத்துடன், இந்த தலைமுறையின் இழப்புக்கள் தரும் வருத்தத்துடன்!!!

No comments: