Tuesday 18 August 2015

சான்றோர் அறியாத சான்றோர் பிரபலம் விஜய் அமிர்தராஜ்.


விஜய் அமிர்தராஜ், இந்தியாவில் உள்ள சென்னையைச் சேர்ந்த ஒரு டென்னிஸ் வீரர் ஆவார். இவரது பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல்கிணறு என்ற சிற்றூராகும்.ஆனால் இவர் பிறந்தது (1954 டிசம்பர் 14), வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில். லயோலாவில் கல்லூரி படிப்பை முடித்தார் இவர். இவரது தந்தை ரோபர்ட் அமிர்தராஜ் நாடார்; தாயார் மாகி (தைரியம்) அமிர்தராஜ். இருவரும் டென்னிஸ் வீரர்களாவர்.

டென்னிஸ் வீரர்களான ஆனந்த் அமிர்தராஜ், அசோக் அமிர்தராஜ் ஆகிய இருவரும் இவரது சகோதரர்கள் ஆவர். ஆனந்த், அசோக் இணை 1976 இல் விம்பிள்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் அரையிறுதி வரை முன்னேறினர்.

1970களில், தனது டென்னிஸ் ஆட்டத்தைத் துவங்கிய விஜய் அமிர்தராஜ், அதிக பயிற்சியாளர்கள், உணவுக் கட்டுப்பாட்டு நிபுணர்கள், உடல் திறமை காக்கும் நிபுணர்கள், இதற்கென தனித்தன்மையுடன் தயாரிக்கப்படும் டென்னிஸ் மட்டைகள் போன்ற எந்தவித நவீன வசதிகளும் இல்லாத காலத்திலேயே பல வெற்றிகளைப் பெற்று, சர்வதேச அளவிற்கு உயர்ந்தவர் ஆவார். 1976 ஆம் ஆண்டில், விம்பிள்டன் இரட்டையர் போட்டியில், இவரும், இவரது சகோதரர் ஆனந்த் அமிர்தராஜும் அரை இறுதி வரை வந்தது, சிறப்பாகக் கருதப்படுகின்றது.

Cystis fibrosis என்ற நுரையீரல் பாதிப்பால் மூச்சிறைப்பு நோயினால் பத்து வயது வரை அவதிப்பட்டு வந்த விஜய் அமிர்தராஜ் டென்னிஸ் விளையாட்டினால் அந்த நோயை வென்றதாக சொல்கிறார். இவர் 1970 முதல் 1993 வரை உலக அளவில் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொண்டார்.
1974லும் 1987லும் இறுதிப் போட்டியை அடைந்த இந்திய டேவிஸ் கிண்ண குழுவுக்குத் தலைமை தாங்கினார். 1973 மற்றும் 1981 விம்பிள்டன் போட்டிகளில் காலிறுதி வரை முன்னேறி வந்தார். அவருடைய உச்சத்தில் உலகத்தின் 16வது சிறந்த ஆட்டக்காரராக இருந்தார். ப்ஜோர்ன் போர்க், ஜிம்மி கோனர்ஸ், மற்றும் இவான் லெண்ட்ல் போன்ற முன்னணி வீரர்களை வீழ்த்தி கவனமும் எதிர்பார்ப்பும் பெற்றார்.

இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வணிகர் வென்செஸ்லாஸின் மகள் சியாமளாவை மணந்தார். தம்பதியினருக்கு பிரகாஷ், விக்ரம் என்று இரு மகன்கள் உண்டு. பிரகாஷ் அமிர்தராஜ் இந்தியாவிற்காக டென்னிஸ் விளையாடி வருகிறார். இவரது குடும்பம் பெரும்பாலான நேரத்தை அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில், லோஸ் ஆஞ்சலிஸ் நகரத்தில் செலவிடுகிறது. இவர் தொலைக்காட்சி விளையாட்டு விமர்சகராகவும், நிகழ்ச்சிகளை தயாரிப்பராகவும் உள்ளார். திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஐநா சபையின் கௌரவ தூதராக போஸ்னியா நாட்டில் பணிபுரிந்தார்.

பிரபல ஜேம்ஸ் பான்ட் படமான "ஆக்டபசி"யில் ரோஜர் மூருடன் இணைந்து துணை கதாநாயகனாக பிரிட்டிஷ் உளவாளியாக நடித்தார், பிரபல விண்வெளி திரைப்படமான "ஸ்டார் டிரெக்" நான்காம் பாகத்திலும் நடித்திருக்கிறார். இவரது சகோதரரான ஆனந்த் அமிர்தராஜும் பல ஹாலிவுட் படங்களை தயாரித்திருக்கிறார். ரஜினிகாந்த் நடித்த ஆங்கில படமான "பிளட் ஸ்டோணை" தயாரித்தவர் இவர் சகோதரர் ஆனந்த் அமிர்தராஜே!

1983ல் பத்மஷ்ரீ பட்டம் குடுத்து இந்தியா அவரை கவுரவித்தது. 2013ல் சிறந்த வெளிநாட்டு வாழ் இந்தியருக்கான விருதினை இவர் பெற்றார். அவ்விழாவில் உரையாற்றும் போது நான்கு தோசைகளைச் சாப்பிட்டுவிட்டு, நான்கு மணி நேரத்திற்கும் மேல் விளையாடிய காலங்களை விஜய் அமிர்தராஜ் நினைவு கூர்ந்தார். டென்னிஸ் விளையாட்டில் தான் முழு நேரமும் ஈடுபடப் போவதாக அறிவித்ததும், சம்பாதிக்கும் வழி அதுவல்ல என்று பலர் தனக்கு அறிவுரை அளித்ததாகவும் அவர் தெரிவித்தார். ஆடுபவருடைய திறமையைவிட எதிராளியின் தவறுகளே டென்னிஸ் ஆட்டத்தில் 80 சதவிகித வெற்றிகளைத் தீர்மானிப்பதாகவும் அவர் கூறினார்.

போதை பொருட்கள், எச்.ஐ.வி, எய்ட்ஸ் போன்றவை குறித்த விழிப்புணர்வு, அவற்றால் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு போன்றவைக்காக அறக்கட்டளை ஒன்றை 2006ல் தொடங்கி சிறப்பான முறையில் சேவை செய்து வருகிறார் விஜய் அமிர்தராஜ். அமெரிக்காவின் உலக அமைதிக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட முதல் ஆசிய நாட்டுக்காரர் என்ற பெருமையைப் பெற்றவர் விஜய் அமிர்தராஜ்.

No comments: