Friday 15 July 2016

நண்பர்களுக்கும், அன்பர்களுக்குமான பெருந்தலைவர் 114வது பிறந்த நாளில் சுய விளக்கம்....

பெருந்தலைவர் மீதான எனது பாசம் அனைவரும் அறிந்ததே... ஆனால் பலரும் எண்ணுவது போல் அது அவரது சாதி மீதான பற்றால் அல்ல. காமராசரது திட்டங்களால் கல்வியறிவும், வேலை வாய்ப்பும், பாசன வசதியும் பெற்ற மக்கள் அனைவருமே அவரை சொந்தம் கொணடாட வேண்டும் என்பதே என் விருப்பம். அன்னை தெரசாவைப் போல் சாதி மதம் இனம் மொழி கடந்த தேசியவாதி பெருந்தலைவர். அவரை நாம் சிறிய சாதி எனும் கூட்டுக்குள் அடைத்து விட வேண்டாம்.

இவ்வளவு வியாக்கியானம் பேசும் நான் காமராசரை பற்றி மட்டுமே பதிவுகள் பதிந்து வருவதன் காரணம் சாதி அல்ல! உண்மையில் பெருந்தலைவரை விட நான் வியக்கும் ஒரு மாமனிதர் உண்டு. அவர்தான் தும்பைப்பட்டி தூயவர் கக்கன் அவர்கள். அவரைப் பற்றிய தகவல்கள் சரிவர கிடைக்காத காரணங்களினாலேயே அவரைப் பற்றிய கூடுதல் தகவல்கள் பகிர முடியவில்லை. காமராசர், கக்கன் இருவர் மட்டுமே தமிழ்நாட்டு அரசியலில் பதவியின் உச்சங்களை தொட்டும் வெறுஙகையோடு வீடு திரும்பியவர்கள். கக்கன் பதவி விலகி திரும்பும் போது அரசுப் பேருந்தில் திரும்பியவர். வயதான காலத்தில் உடல் நலமில்லாமல் மதுரை பெரியாசுபத்திரிக்கு சிகிச்சை எடுக்க வந்தவரை படுக்கை தராமல் தரையில் படுக்க வைத்த போதும் தான் ஒரு முன்னாள் அமைச்சர் என்பதை வெளிக்காட்டாதவர்!

இவர்களது வாழ்க்கை சம்பவங்களை படிக்கும் போதும், பகிரும் போதும் என்னை அறியாமல் கண்களில் நிசமாகவே நீர் கோர்க்கும். இவர்ளைப் பற்றி சமூக பக்கங்களில் பதிவது அவர்களது சமூக இளைஞர்கள் இவர்ளைப் பற்றி எல்லாம் தெரிந்து சாத்வீக வழி முறைகளைப் பின் பற்றி அவர்களைப் போன்ற நேர்மையான தலைமுறையை உருவாக்கட்டும் என்ற பேராசையினால் தான்.

பெருந்தலைவராலும், கக்கனாலும் அவரவர் சாதிக்கு பெருமையாயிருக்கலாம், ஆனால் அவர்கள் இருவருமே எந்த சூழலிலும் தங்கள் சாதியை வெளிப்படுத்தி அதனால் பிரதி பலன் அடந்தவர்கள் அல்ல. அதனால் அவர்களை அவர்களது சமூத்தவர்கள் அவர்களது பெருமைகளைக் கூறியும், பகிர்ந்தும் கொண்டாடலாம் ஆனால் தங்கள் சாதி தலைவர்களாகவோ, தங்கள் சாதிக்கு மட்டுமே உரியவர்களாகவோ கூறிக் கொள்ள முடியாது, கூடாது.

இருவருமே தமிழகம் கண்டெடுத்த மாமணிகள், தன்னலம் கருதாத அரசியல் தியாகிகள், உண்மையான எளிமையை ஊருக்கு உணர்த்திய வைரங்கள். இருவம் தமிழகத்தின் பொக்கிசங்கள். இவர்களை தமிழகம் மறப்பதோ சாதியின் அடிப்படையில் வெறுப்பதோ தமிழர்களுக்கும், தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் நல்லதல்ல!

என்றும் அன்புடன்
Phoenix Tholandi

No comments: