Sunday 21 June 2015

விருதையின் அடையாளம் டாக்டர் லைசான்டர்.

              மதுரை வாழ் மக்களுக்கு டாக்டர் வடமலையான் மற்றும் வடமலையான் ஆசுபத்திரி எவ்வளவு பரிட்சயமோ அதே போல் விருதை மக்களுக்கு மிகவும பரிட்சயமான பெயர் டாக்டர் லைசான்டர் மற்றும் லைசான்டர் ஆசுபத்திரி! விருதுநகரில் அனேகமாக முதலில் கிளினிக் நிறுவி வைத்தியம் பார்க்க ஆம்பித்தவர் அவராகத்தான் இருக்கும். மிகவும் எளிமையான சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவராக அறியப்பட்டவர் லைசான்டர் அவர்கள். விருதையின் பிரபல முதலாளிகளுக்கு குடும்ப மருத்துவராக இருந்தும் இலவச சேவையாலும், எளியோர்க்கான மருத்துவத்தாலும் மிகப் பிரபலமானவர். மிக முக்கியம் சிரித்த முகத்துடன் சிகிச்சை அளிப்பது இவர் விசேச குணம்!

டாக்டர் லைசான்டர் என்றே இவர் எல்லோரிடத்திலும் அறியப்பட்டாலும் இவரது இயற்பெயர் ஹெர்பெர்ட் லைசான்டர் (Herbert Lysander) ஆகும். இவர் சாமுவேல் லைசான்டருக்கும் சுவர்ணாபாய்க்கும் மகனாக 1926 பிப்ரவரி 28ல் நாகர்கோவிலில் பிறந்தார். இவரது தந்தை அப்போதைய திருவதாங்கூரில் மாஜிஸ்ட்ரேட்டாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (காமராசரால்தான் சான்றோர் சமுதாயம் முன்னுக்கு வந்தது எனப் பிதற்றுவோர் கவணிக்கவும்!) பள்ளிப் படிப்பபையெல்லாம் நாகரில் செம்மையாக முடித்த லைசான்டர் அவர்கள் மருத்துவப் படிப்புக்காக நாக்பூர் சென்றார்.

அவரது சேவை மனப்பான்மை செம்மையாக்கப் பட்டது அங்குதான். அங்கு அவரது கல்லூரிக்கு கவுரவ விரிவுரையாலராக வந்த டாக்டர் யோடர் (Dr.Yoder) அவர்களை குருவாக ஏற்றுக் கொண்டார். யோடர் அவர்கள் அமெரிக்க மிஷனரியை சேர்ந்தவராவார். மருத்துவப் படிப்பை முடித்த லைசான்டர் அவர்கள் தனது குரு யோடருடன் முன்றாண்டுகள் சேவைப் பணியாற்றினார். 1953ல் மருத்துப்பணிக்காக விருதை வந்தார் லைசான்டர் அவர்கள். அப்போது அவரிடம் இருந்தது ரூ.110/-ம் ஒரு பழைய சைக்கிளும்தான். அவையும் யோடர் அவர்கள் அவருக்கு குடுத்தது! அவரது எளிமையும் சிரித்த முகமும் உள்ளூர் மக்களை இயல்பாக கவர்ந்தது.

விரைவிலேயே உள்ளூர் பிரபல நாடார் முதலாளிகளுக்கு குடும்ப வைத்தியரானார். ஆனாலும் அவரது சேவைப்பணியும் இலவச மருத்துவமும் தொடர்ந்து கொண்டுதானிருந்தன! விருதுநகரில் மேல ரத வீதியில் கிளினிக் அமைத்திருந்தார். திருமதி குளோரி அவர்களை மணந்து கொண்ட அவருக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர். பின்னர் லைசான்டர் அவர்கள் விருதையில் YMCA, IMA, லயன்ஸ் கிளப் ஆகியவற்றின் பிரசிடண்டாக இருந்தார். நாகர்கோவிலைச் சேரந்தவரானாலும் விருதை மக்களோடு இரண்டறக் கலந்து விட்ட பெயர் "டாக்டர் லைசான்டர்". மதுரையின் பழமை வாய்ந்த பிரபல கிருத்துவ மிஷன் ஆசுபத்திரியின் போர்டு மெம்பராகவும் இருந்தார் லைசான்டர் அவர்கள். (இதற்கு எதிரில்தான் டாக்டர் வடமலையான் அவர்கள் மருத்துமனை தொடங்கினார், எங்கள் குடும்ப கூட்டுத் தொழிலும் வீடும் அங்கேதான் பேலஸ் வீதியில் இருந்தது!)

மருத்துவம், சேவை, கிளப் பிரசிடன்ட என ஒரு புறம் லைசான்டர் அவர்கள் இருந்தாலும், அவர் நகைச்சுவை உணர்வும் மிகப் பிரபலம். பைக்கில் கண்மூடித்தனமாக விருதுநகர் வீதிகளில் வலம் வருவார். அவரது ஃபியட்டையும் விருதை மக்கள் மறக்க மாட்டார்கள். தற்காப்பு கலையான கராத்தேவில் கொண்ட ஈடுபாட்டினால் அதையும் கற்று மஞ்சள் பட்டை (Yellow Belt) பெற்றவர் லைசான்டர் அவர்கள். மொத்தத்தில் பன்முக வித்தகராகவே வாழ்ந்து மறைந்த விருதுநகரின் மறையாத அடையாளம் டாக்டர் லைசான்டர் அவர்கள். விருதை மண்ணின் மைந்தரான கர்ம வீரரை எப்படி நாகர் மக்கள் கொண்டாடுகிறார்களோ, அதே போல் நாகர் மைந்தரான லைசான்டர் அவர்கள் விருதுநகர் மக்களின் மனதில் மட்டுமல்ல விருதுநகரின் அடையாளமாகவே ஆகிப் போனார்!

இன்றும் அவரது மருத்துவமனை மிகப் பிரபலமாகவும் பன்முகச்சிறப்பு மருத்துவமனை ஆனாலும் அதில் இலவச சேவைப்பிரிவு தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. மருத்துவமனை அவரது மருத்துவம் படித்த வாரிசுகளால் பராமரிக்ப்பட்டு வருகிறது. பெருமக்கள் மறைந்தாலும் அவர்கள் சேவையும், வரலாறும் மண்ணிலும், காற்றிலும், மக்கள் மனதில் வாழ்நது கொண்டே இருக்கும் என்பதற்கு டாக்டர் லைசான்டர் அவர்கள் உதாரனம்.

No comments: