Friday 19 June 2015

நாணயத்தால் வின்ணைத்தொட்ட இரு அண்ணாச்சிகள்!!

எடுத்த உடனேயே கோடிகளில் முதலீடு செய்து, கோடிகளை சம்பாதித்தவர்கள் மிகச் சொற்பமே. பெரும்பாலான இன்றைய கோடீசுவர்கள் எல்லாம் மிகச் சொற்பத்தில் முதலீடு செய்து தங்கள் உழைப்பால் உயர்ந்தவர்களே. இளமையில் கடுமையாக போராடி செய்ல்பட்டு தடைகளை படிக்கற்களாக மாற்றி சாதித்தவர்களே அதிகம்! அவ்வாறு சாதித்த அருன் ஐஸ்கிரீம் ஆர். ஜி. சந்திரமோகன் அண்ணாச்சி மற்றும் சிக் ஷாம்பூ சி.கே.ரங்கநாதன் அண்ணாச்சி ஆகிய இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தலைமுறை தொழில் முனைவோர்களில் (entrepreneur) முக்கியமானவர்கள்.

வியாபாரம் செய்பவர்கள் கடனுக்குப் பொருட்களை வாங்கினால், அவை 
தரமானதாக இருக்காது. பேரம் பேசிக் குறைந்த விலைக்கு வாங்கவும் முடியாது. அதனால் காசுக்கு வாங்கி, காசுக்கு விற்பதே நல்ல வியாபாரக் கொள்கை!’ என்று, ஆரோக்யா பால் நிறுவனத்தின் ஆர்.ஜி.சந்திரமோகன் அண்ணாச்சி கூறுகிறார். 

ஆனால், ‘வியாபாரத்துக்குத் தேவையான பொருட்களைக் கடனுக்கு வாங்கினாலும் வாக்குக் கொடுத்தபடி குறிப்பிட்ட நாளில் கடனை அடைத்துவிட்டால், கண்டிப்பாகத் தரமானதாகவும் குறைந்த விலைக்கும் பொருள்களை வாங்க முடியும்’ என்கிறார் ‘கெவின் கேர்’ நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன் அண்ணாச்சி. 


இது ஒன்றுதான் இருவருக்கும் உள்ள முறன்!


மற்றபடி இருவருமே சில ஆயிரங்களில் தொழிலைத் தொடங்கி பலகோடி ரூபாய் சாம்ராஜ்ஜியமாக மாற்றியவர்கள். இருவருமே சரி வர கல்வி கற்கவில்லை என்றாலும் பின்னாளில் தேவை கருதி நூல் மற்றும் புத்தகப் படிப்பின் மூலம் தங்கள் கல்வித் தகுதியை வளர்த்துக் கொண்டவர்கள். இருவருமே தங்கள் பொருட்களின் தரத்தினில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாதவர்கள். இருவருமே உழைப்பாலும், நேர்மையாலும், நாணயத்தாலும் மட்டுமே உயர்வை எட்ட முடியும் என்று நம்பி உயர்ந்தவர்கள். இருவருமே மாற்றி யோசித்தவர்கள்.


அருன் ஐஸ்கிரீம் சந்திரமோகன் அண்ணாச்சி
“தொழில் உலகில் நிலைத்த பெயர் எடுத்திருப்பவர், 'ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ்’ சந்திரமோகன் அண்ணாச்சி. 'அருண்’ ஐஸ்கிரீம் கம்பெனியைத் தொடங்கி... அடுத்தடுத்து 'ஆரோக்யா’ பால், 'ஹட்சன் ஃபுட் புராடக்ட்ஸ்’ என்று படிப்படியாக உயரம் கண்டிருப்பவர்!

சந்திரமோகன் அண்ணாச்சி குட்டி ஜப்பான் சிவகாசிக்கு அருகில் உள்ள திருத்தங்கலில் பிறந்தார். தன் குடும்பத்தை கவனிப்பதற்காக தன் இளவயதிலேயே கல்வியை இடையில் விட்டுவிட்டார். 1970-ல் தன் குடும்ப சொத்துக்கள் சிலவற்றை விற்று, அதன்மூலம் கிடைத்த ரூபாய் 13,000-தில் ஆர். ஜி. சந்திரமோகன் அன் கோ., என்ற நிறுவனத்தை நிறுவினார். சென்னை, ராயபுரத்தில் மூன்று பணியாட்களுடன், ஒரு நாளைக்கு 20 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்து விற்பனையைத் தொடங்கிய எளிமையான இந்நிறுவனம் 1986-ல் பால் மற்றும் தாவர பொருள் தயாரிப்பு நிறுவனமான : Hutsun Agro Products Ltd ஆக உருவெடுத்தது . இந்நிறுவனத்தின் முக்கிய வணிகப்பொருட்கள் ஆரோக்யா பால், அருண் ஐஸ்க்ரீம், கோமாதா பால், ஹட்சன் நெய் போன்றவை .


மேலும் இந்த நிறுவனத்தின் தற்பொழுதைய ஒட்டு மொத்த மதிப்பு – 1.5 பில்லியன் அமெரிக்கன் டாலர்கள் என்றால் நமக்கே பிரமிப்பாக உள்ளது.


ஹட்சன் ஆர்.ஜி. சந்திரமோகன் அண்ணாச்சி ஒரு நேர்காணலில் கூறும் பொழுது , "எதையுமே மாற்றி யோசிப்பவர்கள் மட்டுமே உண்மையான லீடராக முடியும்" என்று தனது ஆசிரியர் கூறியதை இதுநாள் வரை பின்பற்றி வருவதாக கூறினார். என்னை நன்றாக படிக்கவைக்கவேண்டும் என்று என் அப்பா ஆசைப்பட்டார். ஆனால் பியுசியில் நான் தோல்வியடைந்துவிட்டேன். இதனாலேயே அப்பாவின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்வு தனக்கு உண்டு என்றார். தன்னால் டிகிரி படிக்க முடியாவிட்டாலும், இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த பிசினஸ் பள்ளிகளில் உரை நிகழ்த்தியுள்ளதாக கூறினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் "இந்திய விவசாயமும் ஹட்சனின் பங்கும்" என்ற தலைப்பில் உரையாற்றியதை நினைவுகூர்ந்தார். அன்றைய தினம் தனது தந்தையின் பிறந்தநாள் என்பதுதான் சிறப்பம்சம் என்றும் கூறினார் ”


மீரா சீயக்காய் - சிக் ஷாம்ப்பூ சி.கே.ரங்கநாதன் அண்ணாச்சி

பன்னாட்டு நிறுவனங்களையும் தன்ணீர் குடிக்க வைத்துக் கொண்டிருக்கும் மற்றொரு மகத்தான தொழிலதிபர். கடலூரை சேர்ந்த இவரும் தனக்கு பள்ளிப் பருவத்திலேயே படிப்பு சரியாக வரவில்லை என்வும், சராசரிக்கும் சற்று குறைவான மாணவனாகவே இருந்ததாக கூறுகிறார். கல்லூரி படிப்பையுமே மிகவும் சிரமப்பட்டு தேர்ச்சி அடைந்ததாக கூறுகிறார். 

வெறும் 15,000 ரூபாயில் அவர் ஆரம்பித்த கம்பெனி, இன்று ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் புழங்கும் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது. பணபலம் மிகுந்த பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் இன்று இவர் காட்டிய பாதையில்தான் ஷாம்பு போன்ற அழகு சாதனப் பொருள்களை வியாபாரம் செய்கின்றன. 


பிஸினஸ் ஆரம்பிக்க முதலில் தேவை ஐடியாதான்! பிறகுதான் பணம். என்னிடம் ஐடியா இருந்தது. பணம் இல்லை. அனுபவமான விற்பனை பிரதிநிதிகளைச் சேர்த்தேன். அதில் ஒருவர் ரொக்கத்திற்கு விற்கும் கலையை சொல்லித் தந்தார். அனுபவமான் ஏஜென்சிகள் எவருமே எங்கள் சரக்குகளை ரொக்கக் கொள்முதல் செய்யத் தயாராய் இல்லை! அந்த விற்பனைப் பிரதிநிதி மாற்றி யோசித்தார். சைக்கிள் கடை வைத்திருக்கும் ஒருவரிடம் பேசி முன் பணமாக இரண்டாயிரம் ரூபாய்க்கு டி.டி வாங்கி வந்தார். இதே போல் தமிழகம் எங்கும் புதிய ஏஜென்சிகளைப் பெற்றோம் என்கிறார். இன்றும் என் சக ஊழியர்களின் (பணியாளர்களை சக ஊழியர்கள் என்றுதான் கூறுகிறார்!)  யோசனைகள் மற்றும் ஏஜெண்டுகளின் யோசனைகளை கேட்பதுண்டு என்கிறார். நாங்கள் கடனுக்கு மூலப் பொருட்கள் வாங்குவோம் ரொக்கத்திற்கு சரக்கை விற்போம் என்கிறார் ரங்கநாதன் அண்ணாச்சி.


 ஷாம்பு மார்க் கெட்டில் கொடிகட்டிப் பறந்துகொண்டு இருந்த பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் எங்களது ஷாம்புவை எதிர்த்து ஒரு மறைமுக யுத்தமே நடத்தின. ஆனால், நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஷாம்பு, சோப்பு, சிவப்பழகு க்ரீம்... என்று எங்களின் அழகுசாதனப் பொருள்களை விரிவுபடுத்தினோம். தொடர்ந்து, ஊறுகாய், அது இது என்று உணவுப் பொருள்கள் மார்க்கெட்டிலும் நுழைந்திருக்கிறோம். எங்களின் இந்த வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணம் ‘நம்பிக்கை.’ 

வரி விஷயத்தில் எந்தக் குழப்பமும் இருக்காது என்று அரசாங்கம் ‘கெவின் கேர்’ நிறுவனத்தை நம்புகிறது. ‘சி.கே.ரங்கநாதனை மட்டுமல்ல, அவருக்கு ஷாம்பு சப்ளை செய் யும் இளம் தொழில் முனைவோர் அத்தனை பேரையும் கூட தாரளமாக நம்பி எத்தனை லட்சத்துக்கு வேண்டுமானாலும் மூலப் பொருள் களை சப்ளை செய்யலாம்!’ என்று இண்டஸ்ட்ரியில் இருக்கிறவர்கள் நம்புகிறார்கள். ‘கெவின் கேர் தயாரிப்பு என்றால், கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம்’ என்று பொதுமக்களும் எங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். 

இவைதான் நான் சம்பாதித்து வைத்திருக்கும் மிகப் பெரிய சொத்து! 

அதனால், நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்வதெல்லாம், முதலில் நாணயமாக நடந்து கொள்ளுங்கள். வாக்குத் தவறாதவன் என்று பெயர் எடுங்கள். தானாகவே பணக்காரனாகி விடுவீர்கள்!’’ என்கிறார் ரங்கராஜன் அண்ணாச்சி.


மக்களே இவர்கள்தான் உங்கள் ஊக்கமருந்து! மாற்றி யோசியுங்கள், நேர்மையாக செய்ல் படுங்கள், தெரியாதவைகளை கூச்சப் படாமல் கற்றுக் கொள்ளுங்கள், கடுமையாக உழையுங்கள், தரத்தில் சமரசமாகாதீர்கள், நாணயத்தை கைவிடாதீர்கள், வெற்றியடையுங்கள்...

No comments: