Sunday 7 June 2015

சொல்லும் செயலும் ஒன்றானவர்!


சொல் ஒன்று செயல் ஒன்று என்று பெருந்தலைவர் என்றுமே இருந்ததுமில்லை வாழவுமில்லை! அறிவுரைகள் வழங்குவது மட்டுமில்லை அதன்படி வாழ்ந்தும் காட்டியவர் எம் தலைவர். அவரது கருத்துக்கள் திருக்குறள் போல் இரண்டடிதான் இருக்கும் ஆனால் குறள் போலவே ஆழ்ந்த பொருள் இருக்கும்.

த்திரிகையாளர்களுக்கு அவரது அறிவுரை… ‘ஒண்ணு, நீங்க பத்திரிகைக்காரனா இருங்க. அல்லது அரசியல்வாதியாவோ பிசினஸ்மேனாவோ இருங்க. மூணாகவும் இருக்க முயற்சி பண்ணாதீங்க!’
இந்த அறிவுரை பத்திரிக்கையாளர்கலுக்கு மட்டுமல்ல அனைத்து மீடியாக்களுக்குமகின்று வரை கச்சிதமாக பொருந்தும்
மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற ‘கே.பிளான்’ போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். ‘எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்’ என்றார்!

‘தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடு ஒட்டோ, உறவோ இல்லை. இந்தக் கட்சிகளோடு உறவு வைத்துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை’ – காமராஜர் கூட்டிய கடைசி நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இது. இதை அவரது மரண சாசனம் என்பார்கள்!
விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள்.

 ‘இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!’ என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர்.

அந்தக் காலத்தில் அவரைத் தாக்கி எதிர்க்கட்சிகள் பேசியது போல் வேறு எந்தக் காலத்தி லும் இல்லை எனலாம். ஆனால், “ஆளுங்கட்சிக்கு அரசாங்க வேலை! எதிர்க்கட்சிக்கு என்ன வேலை? நம்மைப் பத்திப் பேசற பிழைப்புதானே? அவன் பிழைப்பிலே ஏன் மண்ணைப் போடறே?” என்று வெளிப்படையாகவே கேட்பார்.

நையாண்டி படத்துக்காக (கார்ட்டூன்) கைது செய்கிற இந்தக் காலத்தையும் பார்க்கிறோம். அவரது காலத்தில் அவரைக் கன்னாபின்னா என்று நையாண்டி ஓவியம் வரைந்தபோது காமராஜர் கூறினார்… “பொம்மையைக் கண்டு ஏன் பயப்படறே? உண்மையைக் கண்டு பயப்படு! போ… போ..!”

ஹைதராபாத் வங்கியில் ஒன்றரைக் கோடி ரூபாய் போட்டிருக்கிறார் காமராஜர்’ என்ற வதந்தி பரவி – மேடைப் பேச்சாகி – அறைகூவல் வடிவில் வந்தது.
“எவனோ எதையோ சொல்றான்… விடு! எனக்கு யானைக்கால் வியாதின்னு யாராவது சொன்னா, ஒவ்வொருத்தர் கிட்டேயும் நான் போய் என் காலைக் காட்டிக்கிட்டா இருக்க முடியும்?” என்று கேட்டார் காமராஜர்.

அடேயப்பா! தன்னைப் பற்றியும் தனது நேர்மையைப் பற்றியும் எத்தனை அழுத்தமான நம்பிக்கை! அந்த நம்பிக்கைஇல்லாதவர்கள்தான் தன்னைப் பற்றித் விமர்சனம் செய்கிறவர் தலையைத் திருகி சிதறு தேங்காய்போல வீசிட நினைக்கிறார்கள்.

No comments: