Thursday 4 June 2015

பெருந்தலைவர் - கருப்பு காந்தி

காந்தி 1930ம் ஆண்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தண்டி உப்பு சத்தியாக்கிரகத்தை நடத்தினார். கடற்கரைக்குச் சென்று சட்டத்தை மீறி உப்புக் காய்ச்சுவது இந்த சத்தியாக்கிரகத்தின் முக்கியமான அம்சமாகும்.

மிகவும் சாமானியமான உணவுப் பொருளான உப்பைக் காய்ச்சிப் பயன்படுத்துவதற்குக் கூட பாரத மக்களுக்கு உரிமையில்லை என்பதைச் சுட்டிக் காண்பித்து சாமானிய பாமரமக்களிடமும் அரசியல் விழிப்புணர்ச்சியைத் தோற்றுவிப்பதே உப்பு சத்தியாக்கிரகத்தின் நோக்கமாக இருந்தது.

தமிழ்நாட்டில் காமராஜர் உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டார்.

இதன் விளைவாக காமராஜர் கைது செய்யப்பட்டு இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.

காமராஜர் சிறைப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்ட உடனே காமராஜின் பாட்டியார் அதிர்ச்சி தாளமாட்டாதவராகி நினைவிழந்து விழுந்துவிட்டார். அவரை உடனடியாக்க் குணப்படுத்த இயலவில்லை.

1931ம் ஆண்டு வாக்கில் அருடைய உடல்நிலை அபாய கட்டத்தை அடைந்தது. இறப்பதற்கு முன் காமராஜரை ஒரு தடவை கண்ணாரக் காண வேண்டும் என்று விரும்பினார்.

அப்போது காமராஜர் பெல்லாரி சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அவருடைய உறவினர்கள் அனுமதி பெற்று பெல்லாரி சிறைக்குச் சென்று காமராஜரை சந்தித்து பாட்டியின் உடல்நிலைப்பற்றி எடுத்துக்கூறி பரோலில் சென்று பாட்டியாரை கண்டு வருமாறு யோசனை கூறினார்கள்.

பாட்டியின் உடல்நிலை அறிந்து காமராஜர் மிகவும் வேதனைப்பட்டா. அவரை உடனடியாகச் சந்தித்து ஆறுதல் கூறவேண்டும் என்று அவருக்கு ஆவலாகத் தான் இருந்தது. ஆனால் பரோலில் செல்ல அவருக்குச் சற்றும் விருப்பம் இல்லை.

பரோலில் விடுதலை பெற்றுச் செல்வதாக இருந்தால் கிட்டதட்ட ஒரு சரணாகதிப் பத்திரம் எழுதிக் கொடுத்தாக வேண்டும். சிறையிலிருக்கும் ஒரு தேசத்தொண்டன் அவனுடைய சுயமரியாதை உணர்வுகளைப் பாதிக்கும வித்த்தில் நன்னடத்தைப் பத்திரம் எழுதிக்கொடுத்துவிட்டு சிறையிலிருந்து ஏகுவது இலட்சியத்துக்கே புறம்பானதாகும் என்று காமராஜர் கருதினார்.

அதனால் பரோலில் வர மறுத்துவிட்டார்.

காந்தி- இர்வின் ஒப்பந்தம் காரணமாக பாரதமெங்கும் சிறையிலிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் விடுதலையானார்கள். அப்போது காமராஜரும் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையாகி விருதுநகர் திரும்பிய காமராஜருக்கு ரயில் நிலையத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கில் மக்கள் திரண்டு காமராஜருக்குமலர் மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.

வரவேற்புக்கு நன்றி செலுத்தும் வித்த்தில் காமராஜர்அப்போது சொன்ன சொற்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.

“சாமானியத் தொண்டனான எனக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுப்பீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் எனக்குக் காண்பித்த அன்பாலும் மரியாதையாலும் எனக்கு அகம்பாவம் ஏற்பட்டு விடாமலிருக்க கடவுளைப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்” என்றார் காமராஜ்.

காமராஜர்அவர்களை ஒருதடவை பார்க்க வேண்டும் என்பதற்காகவே பாட்டியார் மரணப்படுக்கையில் கிடந்தார். காமராஜரைப் பார்த்துவிட்ட திருப்தியில் மகிழ்ச்சியில் இரண்டு நாட்களுக்குப்பிறகு அவருடைய உயிர் பிரிந்து விட்டது.

1931- ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்து தேசிய அரசியல் வாழ்வில் காமராஜ் மாபெரும் நட்சத்திரமாகப் பிரகாசிக்கத் தொடங்கினார்.

தமிழ்நாடு காங்கிரஸில் பொறுப்பான பதவிகள் அவரைத் தேடி வந்தன. தமிழ்நாடு காங்கிரசின் அதிகார பூர்வமான செயற்குழு உறுப்பினராக்க் காமராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

No comments: