Monday 22 June 2015

பெருந்தலைவரும் நேருவின் கோபமும்!


சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம். சென்னை வந்திருந்த நேரு, காங்கிரஸ் தலைவரும், காமராஜரின் அரசியல் குருவுமான எஸ்.சத்திய மூர்த்தி வீட்டில் தங்கினார். நாள் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த களைப்பு.

தூங்குவதற்காக கட்டிலில் படுத்தார், நேரு. ஆனால் தூங்க முடியவில்லை. காரணம், எங்கிருந்தோ ஒரு பெரும் இரைச்சல் சத்தம் வந்து, அவரைத் தூங்க விடாமல் செய்தது. பொறுமை இழந்த நேரு, கட்டிலில் இருந்து எழுந்து, அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று வெளியே வந்து பார்த்தார்.

வீட்டு வராந்தாவில் ஒரு காங்கிரஸ் தொண்டர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அவர் விட்ட குறட்டை ஒலிதான், தன்னை தூங்க விடாமல் செய்த இரைச்சல் சத்தம் என்பதை அறிந்து கொண்டார். நேருவுக்குக் கோபம் வந்து விட்டது. சத்தியமூர்த்தியை அழைத்தார்.

“இதோ பாருங்கள், சத்தியமூர்த்தி! இந்த நபரை சென்னையை விட்டு வெளியேற்றுங்கள். அல்லது என் படுக்கையை தூக்கிச்சென்று கடற்கரையில் போடுங்கள். இல்லாவிட்டால், என்னால் தூங்கவே முடியாது!” என்றார். நேருவின் கோபத்திற்கு ஆளான காங்கிரஸ் தொண்டர் வேறு யாருமல்ல; காமராஜர்தான்!

அன்று காமராஜரின் குறட்டை ஒலி கேட்டு அவரிடம் கோபம் கொண்ட நேரு, பிற்காலத்தில் அவர் சிலையைத் திறந்து வைத்து, புகழாரம் சூட்டி மகிழ்ந்தார்.

சென்னை மாநகராட்சி தி.மு.க. வசம் இருந்தபோது, அது நிறைவேற்றிய ஒரு தீர்மானம் எல்லோரையும் திகைப்படையச் செய்தது. “முதல்_அமைச்சர் காம ராஜர் உருவச்சிலையை சென்னையில் அமைக்க வேண்டும். அந்தச்சிலையை பிரதமர் நேருவைக்கொண்டு திறக்க வேண்டும்” என்பதே அந்தத் தீர்மானம்.

மாற்றுக் கட்சியைச் சேர்ந்த தலைவரின் சிலையை அமைக்க முன்வந்த சென்னை மாநகராட்சியை அனைவரும் பாராட்டினர். காமராஜர் உருவச்சிலை, சென்னை மவுண்ட் ரோட்டில் (தற்போதைய அண்ணா சாலையில்) ராஜாஜி மண்டபம் அருகே அமைக்கப்பட்டது. அதை பிரதமர் நேரு 1961 அக்டோபர் 9_ந்தேதி திறந்து வைத்தார்.

அவர் பேசுகையில் கூறியதாவது:_

“மதிப்புக்குரிய என் சகாவான காமராஜரின் சிலையை நான் திறந்து வைக்க வேண்டும் என்று சி.சுப்பிரமணியம் என்னிடம் வந்து, சென்னை மாநகராட்சி சார்பில் அழைத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதில் எனக்கு சங்கடம் ஏற்பட்டது.

காமராஜருக்கு உருவச்சிலை வைக்கும் இந்த விழாவில் நான் கலந்து கொள்ள விரும்பியபோதிலும், “உயிரோடு இருக்கும் தலைவர்களுக்கு உருவச்சிலை வைக்கக்கூடாது” என்று நான் கூறி வந்திருப்பதால், எனக்குச் சங்கடம் ஏற்பட்டது. இது விஷயத்தில் எனக்கு பெரிய மனப்போராட்டமே நடந்தது. கடைசியாக, இந்த விழாவில் கலந்து கொள்வது என்று தீர்மானித்து, விழாவுக்கு வந்து விட்டேன்.

நாட்டில் உள்ள பல்வேறு தலைவர்களுக்கும், காமராஜருக்கும் வித்தியாசம் இருக்கிறது. அவரது தலைமை தனிச்சிறப்பு பெற்றதாகும். காமராஜர், மக்களிடையே இருந்து, மக்களின் தலைவராகத் தோன்றி, மக்களுக்காகப் பணிபுரிந்து வருகிறார்.

முன்பெல்லாம் ஒரு சாதியார் தான் தலைவர்களாகத் திகழ முடிந்தது. ஆங்கிலம் படித்தவர்களைத்தான், இப்படி “சாதி” என்று குறிப்பிடுகிறேன். இவர்கள் ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள். அதைத்தான் பெருமையாக நினைப்பார்கள்.

அவர்கள் பேசுவது புரியாவிட்டாலும், மக்கள் கேட்டுக்கொள்வார்கள். காமராஜர், ஆங்கிலத்தை நல்ல முறையில் புரிந்து கொள்வதோடு, ஆங்கிலத்தில் பேசும் ஆற்றலையும் பெற்றிருக்கிறார். அவர் என்னுடன் ஆங்கிலத்தில்தான் பேசுவார். ஆனாலும் அவர் “ஆங்கிலம் படித்தவர்கள்” என்ற சாதியைச் சேர்ந்தவர் அல்ல.

காமராஜரின் தலைமை நாட்டுக்குப் புதுமையானது. அவர், ஆற்றல் மிக்க ஒரு தலைவராக விளங்குகிறார். மற்றவர்களுக்கு முன்மாதிரியான தலைவராகவும் திகழ்கிறார். சாதாரணத் தொண்டராகப் பொது வாழ்க்கையைத் துவக்கி, தமது உழைப்பால் உயர்ந்த அவருக்கு உருவச்சிலை எழுப்பியது மிகவும் பொருத்தமானதே.

எனவே, இந்த விழாவில் கலந்து கொண்டது பற்றி மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நீண்ட காலம் வாழ்ந்து, நாட்டுக்குத் தொண்டு புரிய விரும்புகிறேன்.”

இவ்வாறு நேரு கூறினார்.

7 அடி உயரமுள்ள இந்த வெண்கலச்சிலையை உருவாக்கியவர் சிற்பிஆர்.வெங்கடேசன். நிகழ்ச்சியின் முடிவில், தேசிய கீதம் பாடப்பட்ட பிறகு, நேரு மேடையை விட்டு இறங்கி, காமராஜர் சிலை அருகே சென்றார். அப்போது வெயில் `சுரீர்’ என்று அடித்த போதிலும், அதை நேரு பொருட்படுத்தவில்லை.

சூரிய வெளிச்சம் கண்ணில் படாமல் கையால் மறைத்த படி, காமராஜர் சிலையை பல கோணங்களில் பார்த்து மகிழ்ந்தார்.

No comments: