Tuesday 16 June 2015

மக்கள் தொண்டனாகவே வாழ்ந்த பெருந்தலைவர்


தமிழக அரசின் உயரதிகாரியாக இருந்த ராமமூர்த்தியின் மீது ஐயங்கள் வந்து, அது நிரூபிக்கப்பட்டபொழுது அவரை பணியிலிருந்து நீக்கினார் காமராஜர். நேருவிடமிருந்து அழைப்பு வந்தது. நேரு சொன்னார், “சிறுசிறு தவறுகளுக்கெல்லாம் பெரிய அதிகாரிகளை நீக்கினால் நிர்வாகத்தில் குறைபாடு வந்துவிடும். ராமமூர்த்தி சிறந்த நிர்வாகி, அவரை நீக்குவது அரசுக்கு நல்லதல்ல, அதனால் முடிவை மாற்றுங்கள்” என்றார். “ராமமூர்த்தி விஷயத்தில் நான் எடுத்ததுதான் முடிவு, வேறேதாவது இருந்தால் பேசுங்கள், இல்லையென்றால் போனை வைத்துவிடுங்கள்” எனச்சொல்லி வைத்துவிட்டார் காமராஜர். ஒரு வார்டு கௌன்சில் வேட்பாளர் தீர்வுக்குக் கூட, தில்லியை நோக்கும் இன்றைய காலகட்டத்தை நினைத்தால், அந்த மனிதரின் மீது எவ்வளவு பிடிப்பு வருகிறது பாருங்கள். எப்பேர்ப்பட்ட தலைவர்?. 

தள்ளாதவயதில் விருதுப்பட்டி வீட்டின் ஒரு மூலையில் துவண்டு போய்க்கிடக்கிறார் சிவகாமி அம்மாள். நாட்டை ஆளும் அரசனைப் பெற்ற தாய். “ஏம்பா மெட்ராசுல நீ இருக்க வீட்டுல, ஒரு ஓரத்தில ஒதுங்கிக் கிடந்துக்குவனே....என்னிய கூட்டிட்டுப் போயேன் காமராசு”. பொக்கை வாய் திறந்து புலம்பிய தாய்க்கு பதிலேதும் சொல்லாமல், வாகனத்துக்குள் தன்னை நுழைத்துக்கொள்கிறார்.

முருகதனுஷ்கோடி சொல்கிறார் “ பெரியவரே....அம்மா பாவந்தான....”. யார் என்ன சொல்லத் தொடங்கினாலும், முதலடியிலேயே அவர் சொல்ல வந்த பொருளைப் புரிந்துகொள்ளும் அறிவு அந்த மாமேதைக்கு இருந்தது. விழிகளில் நீர் அரும்ப அந்த அரசியல்துறவி சொன்னார் “ எனக்கு மட்டும் என்ன பாசம் இல்லாமலா இருக்குன்னேன்... என்ன பண்ணட்டும்....அத்தைய பாக்க வாறேன், சித்திய பாக்க வாறேன்னு வரிசையா வந்து நிப்பான்னேன்.....அதுல எவனாவது ஒருத்தன் நம்ம வூட்டு போன எடுத்து நான் முதலமைச்சர் வூட்டுல இருந்து பேசுறேன் னு சொன்ன அன்னைக்கி, என் அத்தனை நேர்மையும் அடகுக்கு போயிருமா இல்லையான்னேன்.... இங்கேயே  இருக்கட்டும்..அப்பப்ப வந்து பாப்போம்னேன்....”. 

இன்று எத்தனை வீடுகள்?. அங்கே எத்தனை உறவுகள்?. யார் யார் அதிகாரம் செய்கிறார்கள்?. சொந்தத் தாயைத் துறந்த தனயன் எங்கே?, இன்று உடன்பிறந்த, உடன்பிறவாத என்று அதிகாரம் பகிரும் இவர்கள் எங்கே?.அந்த மாமனிதன் அமர்ந்து ஆட்சி செய்த அதே நாற்காலிதான் இது.  ஆனால் காலம் எவ்வளவு மாறிவிட்டது?. 

ஒருமுறை ஒரு ஆட்சியர் “ நான் நெனச்சா முதலமைச்சர் ஆவேன், ஒங்க காமராஜர் நெனச்சா கலெக்டர் ஆக முடியுமா” ன்னு கட்சிக்காரர்களிடம் கேட்க, வேட்டு வைக்கும் எண்ணத்துடன் அதை அவர்கள் பெரியவரிடம் பகர, அந்த மனிதர் சொன்னார், “ சரியாத்தான சொல்லிருக்கான்னேன்.. அவன் நெனச்சா தேர்தல்ல நின்னு அமைச்ச்சராயிருவான், நான் என்ன செஞ்சாலும் இனிமே படிச்சு கலெக்டராக முடியுமாடா....”என்று கலகல வென்று சிரித்திருக்கிறார் காமராசர்.

இந்த நாட்டின் இரண்டு பிரதமர்களை தீர்மானித்த உண்மையான கிங் மேக்கர் காமராசர் மட்டுமே. நேரு இறந்தபோது, சாஸ்திரி, சாஸ்திரி மறைந்தபோது இந்திரா. இந்தியாவின் பிரதமரை தென் தமிழகத்து ஏழை ஒருவர் தீர்மாணித்தார் என்பது எத்தனை ஆச்சரியம். சாஸ்திரி மறைந்தபோது, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நீங்கள்தான் அடுத்த பிரதமரா என்ற வினாவுக்கு இந்திரா சொன்னார் “ my future is in the hands of Kamaraj, go and ask him. அதே இந்திராதான் பிரதமரான பின்னர் மாநிலத் தலைமைகளை ஒழிக்க நினைத்தபோது, நிஜலிங்கப்பா, நீலம் சஞ்சீவரெட்டி, காமராஜ் போன்றவர்களுடன் முரண்பட்டு. அதே போன்றதொரு பத்திரிகையாளர் பேட்டியில் Who is Kamaraj?”  என்று திருவாய்மொழிந்தார். அது காலத்தின் கொடுமை.

அரசு அதிகாரத்தில் தான் வகித்த எந்த பதவியும் தன் சுயவாழ்வை கிஞ்சித்தும் பாதிக்காதவண்ணம் வாழ்ந்த தலைவர் காமராசர். இத்தனை அதிகாரங்கள் மிக்க பதவிகளை அவர் அலங்கரித்தபோதும், அவர் அப்படியேதான் இருந்தார். இன்றைக்கு ஒரு கட்சியின் கிளைச்செயலாளர், ஒரு வார்டு கவுன்சிலர் பதவி போதும், வசதியாக வாழ்வதற்கு. சென்னையில் குத்தகைக்கு அவர் வாழ்ந்தவீடு ஏலத்துக்கு வந்தபோது, கவியரசர் கண்ணதாசன், தேவர்பிலிம்ஸ் சின்னப்பத்தேவர் எல்லாம் சேர்ந்து, அதை மீட்டுக் கொடுத்து, தெரிந்தால் மறுப்பார் என்று மறைத்தேவிட்டார்கள்.

ஒருக்காலமும் தன்னை ஒரு அதிகாரம் மிக்கவராகக் கருதாமல், மக்கள் தொண்டனாகவே நிறைவுக்காலம் வரை வாழ்ந்தவர் காமராசர் எனும் மாமேதை. கல்விக்கும் அறிவுக்கும் தொடர்பு உண்டு என்று எப்போதும் நான் நினைத்ததே கிடையாது. காரணமுண்டு. நான் பார்த்த பல மெத்தப் படித்த மேதாவிகளைவிட, எங்கள் ஊரில், உறவில் மழைக்குக் கூட பள்ளியின் தாழ்வாரத்தில் ஒதுங்காத தாத்தாக்களிடம் நான் கற்றதுதான் அதிகம். அதற்கு இன்னொரு உதாரணம்தான் படிக்காத மாமேதை காமராசர்.

No comments: