Saturday 27 June 2015

இந்தியாவும், இந்திராவும், நெருக்கடி நிலையும்! (பாகம் மூன்று)


ஜூன் 25 பின்னிரவு தொடங்கி 26 அதிகாலைக்குள்ளாக ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய், மதுதந்தவதே, ஜோதிர்மாய் பாசு, வாஜ்பாய், அத்வானி, முலயாம் சிங், லாலு என நாடு முழுவதும் 677 தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த கைது விவகாரமோ நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்ட விஷயமோ ஊடகங்கள் வழியாக மக்களுக்கு தெரிந்துவிடக் கூடாதென்பதற்காக பெரும்பாலான செய்தித்தாள் நிறுவனங்கள் செயல்பட்டு வந்த பகதுர் ஷா சபர் மார்க் பகுதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. தில்லியில் 34 அச்சகங்கள் மூடி சீல் வைக்கப்பட்டன. செய்தித்தாள்களை கடைகளுக்கு விநியோகிக்கும் ஏழாயிரம் பேர் சிறையிலடைக்கப்பட்டனர்.

அடுத்து வந்த நாட்களில் கருத்து சுதந்திரம் கடும் அச்சுறுத்தலுக்குள்ளானது. பத்திரிகைகள் கடும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. மத்திய அரசின் தணிக்கை அதிகாரிகள் மனம்போன போக்கில் செய்திகளை நீக்கவும் திருத்தவும் அதிகாரம் பெற்றிருந்தனர். எதிர்த்து எழுதும் பத்திரிகைகளுக்கு அரசின் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன. நெருக்கடி நிலையை எதிர்த்த இதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பஞ்சாபில் உருது இதழ்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப், அமெரிக்காவின் நியூஸ்விக் ஆகிய இதழ்களின் செய்தியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். கருத்துரிமையைப் பாதுகாக்கும் பொருட்டு 1966ல் உருவாக்கப்பட்ட பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா கலைக்கப்பட்டது. அரசின் கட்டுப்பாட்டிலிருந்த வானொலியும் தொலைக்காட்சியும் இந்திராவின் ஜால்ராக்களாக மாறிவிட்டிருந்தன.

ஜனநாயகத்தின் மற்றொரு தூணாக கொண்டாடப்படுகிற நீதித்துறையும் தப்பவில்லை. அதிகாரத்திற்கும் முறைகேடுகளுக்கும் துணை போகாதிருக்கும் ஜக்மோகன்லால் சின்ஹாக்களும் வி.ஆர்.கிருஷ்ணய்யர்களும் இருக்கிற நீதித்துறை இந்திராவைப் பொறுத்தவரை அநீதித்துறையே. எனவே அதை வெறுக்கவும் தன் கட்டுப்பாட்டின் கீழ் அத்துறையை வீழ்த்தவும் இந்திராவுக்கு நூறு நியாயங்களிருந்தன. அதன்பொருட்டு அவர் நீதிமன்றங்களின் அதிகாரங்களைக் குறைக்கும் ஏராளமான சட்டத் திருத்தங்களை கொண்டுவந்தார். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த மனசாட்சியோடு செயல்பட்ட நீதிபதிகள் கடும் அச்சுறுத்தலுக்காளாயினர். மொத்தத்தில் சட்டத்திற்கு மேலாக தன்னை நிறுவிக் கொண்டார் இந்திரா.

மிசா, இந்திய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நாடு முழுவதும் 1,11,000 பேர் சிறையிலடைக்கப்பட்டிருந்ததாக பத்திரிகையாளர் வி.கிருஷ்ணா ஆனந்த் தெரிவிக்கிறார். இவர்களில் 39 எம்.பி.களும் அடக்கம். 1976 ஜனவரி 31 அன்று தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. இக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் தொழுநோயாளிகளோடு சேர்த்து தங்க வைக்கப்பட்டனர். 24 மணிநேரமும் லாக்அப்பிலேயே வைத்திருப்பது, கடுமையாகத் தாக்குவது, மருத்துவ உதவியை மறுப்பது, குறைந்தளவே உணவளிப்பது, உணவில் வேப்பெண்ணையை கலந்து தருவது, தாகத்திற்கு தண்ணீர் கேட்டால் வாய்க்குள் சிறைக்காவலர்கள் சிறுநீர் கழிப்பது என காலனியாட்சியிலும் காணாத சித்திரவதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

இப்படியான கைதுகளும் சித்திரவதைகளும் எதிர்க்கட்சியினருக்கு மட்டுமல்ல, எந்தவொரு இயக்கத்திலும் தொடர்பு கொண்டிராத எளிய மக்களுக்கும் நேர்ந்த கொடுமைகள் என்பதற்கு உதாரணம்தான் கேரள மாணவர் ராஜன், மங்களூர் மாணவர் உதயசங்கர் ஆகியோரின் மரணம். கடும் சித்திரவதை காரணமாக கன்னட நடிகை சிநேகலதா, திமுக தலைவர்கள் சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் ராபின் கலிதா, போன்றவர்கள் அகால மரணமடைந்தனர். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இயக்கத்தின் பூமிய்யா, கிஸ்தே கவுடு ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். காவல்துறையின் வரம்பற்ற அதிகாரம் மக்களின் உயிர் குடிக்கும் எமனாய் இந்த மண்ணை ஆக்கிரமித்திருந்தது.



தொடரும்...

No comments: