Sunday 14 June 2015

காலச் சக்கரம் மாறிச் சுழல்கிறது!


பெருந்தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள பாரதீய சனதா கட்சியின் தலைவர் அமித்சா வருகையை ஒட்டி எனது தனிப்பட்ட கருத்து அலசல்களே இவை. இதற்கும் எந்த நாடார் சங்கங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!
பெருந்தலைவரின் இந்தப் பேச்சுதான் 07-11-1966ல் தில்லியில் அவரது உயிருக்கு ஆபத்து விளைவிக்கப் பார்த்திருக்கும் என கருதுகிறேன்:
"பணக்காரனும் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றவர்களும் தான் சோசியலிசத்திற்கு எதிரிகள். பிறப்பால் உயர்ந்தவர்கள் ஏன் சோசியலிசத்தை எதிர்கின்றார்கள் தெரியுமா? பணக்காரர்களோடு சேர்ந்து சோசியலிசத்தை வர விடாது தடுத்து விட்டால் தங்களுடைய சாதியின் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்டிக் கொள்ளலாம் என்று நினைகின்றார்கள். நாம் விட்டு விடுவோமா என்ன?" - நவசக்தி (3-11-1966)
பின்னர் அவர் வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்திற்கு பின்னர் சேலத்தில் ஆற்றிய உரையில்,
"குறிப்பாக அவர்களுக்கு பயம் என்னைப் பற்றித்தான். இந்த காமராஜ் தான் சோசியலிச சமுதாயத்தினை அமைத்தே தீருவேன் என்று சொல்கின்றான். அவன் தான் அதிலே தீவிரமாக இருக்கின்றான் என்று நினைகின்றார்கள். என் வீட்டுக்கு தீ வைக்கின்றான். ஆனால் நான் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். கடமையை நான் செய்தே தீருவேன்..." - 11-12-1966 சேலம் பேரூரை - நவசக்தி - 15-12-1966
பெருந்தலைவரின் பிறந்தநாள் அன்று விருதுநகரில் கொண்டாடப்படவிருக்கும் கல்வித் திருவிழாவிற்கு பாரதீய சனதா கட்சியின் தேசியத் தலைவர் வருகிறார். அவர் வரலாமா வரக்கூடாதா என பெரிய பட்டி மன்றமே நடந்து கொண்டிருக்கிறது. நான் வேறு வகையில் சிந்திக்கிறேன்! இதே "பாரதீய சனதா"வின் (அன்றைய "சன சங்கம்") துணையோடுதான் சுமார் 50 வருடங்களுக்கு முன் தில்லியில் சாதுக்கள் பெருந்தலைவரை உயிரோடு கொளுத்தப் பார்த்தனர். காலச் சக்கரம் மாறிச் சுழல்கிறது. எவரை அவரது கொள்கைக்காக எந்த கூட்டம் கொலை பண்ண முயற்சித்ததோ அதே கூட்டத்தின் தலைவர் இன்று பெருந்தலைவருக்கு மரியாதை செய்ய வருகிறார். அவர்கள் செய்த பாவத்திற்கு பிராயசித்தம் தேடி வருகின்றனரோ என்னவோ??!

இவர்களால் பெருந்தலைவருக்கு எந்த புகழும் வந்துவிடப் போவதில்லை என்பதென்னவோ உண்மைதான்... ஆனால் பெருந்தலைவரை நாடார்கள் சாதி வட்டத்திற்குள் குறுக்கி விட்டனர் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அதிலிருந்து பெருந்தலைவரை வெளிக்கொணர நாடார் மகாசனம் இது போல் சிந்தித்ததோ என்னவோ? பெருந்தலைவரால் நாடார் சமுதாயம் அடைந்த நன்மைகளை விட பிற சமுதாயங்கள் தான் அதிக நன்மை அடைந்தன! ஆனால் சாதீய வெறுப்புக்கள் பிற சமுதாயத்தினரை சமீப காலமாக பெருந்தலைவரைப் பற்றி அவதூறு பரப்ப வைக்கின்றன. நாடார் சங்கங்கள் பெருந்தலைவரின் பிற்ந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் பிற சமுதாய தலைவர்களை அழைத்து பெருந்தலைவருக்கு மாலை அணிவிக்க்க வைக்கலாம். இதனால் சாதி நல்லிணக்கமும் பெருந்தலைவர் சாதிக்கு அப்பாற்பட்டவர் என்ற உணர்வும் ஏற்படலாம். கள்ளர் சமுதாய்த்தை சேர்ந்த இயக்குனர் பாரதிராசா போன்றோர் பெருந்தலைவர் மீது பெரும் மதிப்பு கொண்டவர்களே.

 இதில் வேதனைப் பட வேண்டிய இன்னொரு விசயம் அமித்சாவின் வருகைக்கு நாடார்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் எந்த கட்சிக்காக சொத்தும் சேர்த்து அல்லும் பகலும் பாடுபட்டாரோ அந்த கட்சி எந்த வித சூடு சொரணையும் இல்லாமல் அமைதி காக்கிறது. இவர்கள் காமராசரை கைவிட்டதால்தான் நாடார் மக்கள் பெருந்தலைவரின் புகழ் பரப்பும் காரியத்தை கையில் எடுத்தனர். தமிழக மற்றும் தேசிய பாட நூல்களில் காமராசரின் வரலாறை பாடமாக்க நியாயப்படி இவர்கள்தான் முயற்சி எடுத்திருக்க வேண்டும். சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர்களுக்கு முகஸ்துதி செய்வதிலேயே இவர்கள் காலம் கடந்துவிட்டது. இவர்கள் தங்கள் கட்சித் தலைவராக அவரை பெருமைப் படுத்தி அவர் புகழ் பரப்பியிருந்தால் கண்டிப்பாக பெருந்தலைவர் சாதிய அடையாளத்திற்குள் வந்திருக்க மாட்டார். அது சரி தமிழகத்தில் குஷ்புவை நம்பி கட்சி நடத்துபவர்களிடம் இதற்கு மேல் எதிர்பார்ப்பதே தவறு.

No comments: