Friday 5 June 2015

ஒரே தலைவர் - பெருந்தலைவர்


கோடி தலைவர்கள் வந்தாலும் சென்றாலும் பெருந்தலைவர் என்றால் அது பெருந்தன்மையின் மறு உருவமான எங்கள் ஐயா காமராஜரே!

 1967 தேர்தல். காமராஜர் தோற்றுப் போகிறார். விருதுநகரிலே நண்பர்கள், மறு எண்ணிக்கைக்கு முயல்கின்றனர் எனத் தெரிந்தவுடன் காமராஜர், அதை உடனடியாக நிறுத்தச் சொல்கிறார். "நாம வாங்கின சுதந்திரம் உண்மை, ஜனநாயகம் உண்மை என்பதெல்லாம் நிரூபணமாயிட்டுல்லா. நம்ம உழைப்பு வீண் போகல. அதான் நம்ம தோல்வி உணர்த்தும் பாடம்' என்றார்.

அடுத்து அவர் சொன்ன செய்தி, "தி.மு.க., இப்பத்தான் ஆட்சிக்கு வந்திருக்கு. ஆட்சியின் நெளிவு சுளிவுகளைப் புரிந்து கொள்ளவே ஆறு மாதம் ஆகும். அதுவரை இந்த ஆட்சியை யாரும் விமர்சிக்கக் கூடாது' என்றார்.

பிளவுபட்ட காங்கிரசின் பழைய காங்கிரஸ் தலைவராக காமராஜர், 1971 பொதுத் தேர்தலைச் சந்திக்கிறார். இந்திரா தலைமையிலான காங்கிரஸ் வெற்றி பெற்றது. "ரஷ்யாவில் இருந்து மை கொண்டு வந்து, ஓட்டுச் சீட்டுகளில் தடவி, வெற்றி பெற்றுவிட்டனர்' என்றார் குமரி அனந்தன்.

அது குறித்து சோ கேட்ட போது, காமராஜர், "தோத்துப் போயிட்டோம்னேன். இது என்ன சிறுபிள்ளைத் தனமான பேச்சு' என்று கடிந்து கொண்டார்.

நாகர்கோவில் இடைத்தேர்தல். காமராஜர் காங்கிரஸ் வேட்பாளர். சுதந்திரக் கட்சி, அவரை எதிர்த்துப் போட்டியிடுகிறது. 1963ல் தி.மு.க.,வில் இருந்து கொண்டே, "காமராஜர் என் தலைவர்; அண்ணாதுரை என் வழிகாட்டி' என்று பேசிய எம்.ஜி.ஆர்., "காமராஜரை எதிர்த்து பிரசாரம் செய்ய வர மாட்டேன்' என்றார்.

நாகராஜா திடலில் பொதுக் கூட்டம். சின்ன அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கிறார். காமராஜர் வந்துவிட்டார். சின்ன அண்ணாமலை, ராஜாஜி குறித்து பேசத் துவங்கினார். திடீரென எழுந்த காமராஜர், அவர் சட்டையைப் பிடித்து, இழுத்து, "நிறுத்துன்னேன்... அவரை நீ எப்படிப் பேசலாம்' என்று நிறுத்தினார். இத்தனைக்கும், காமராஜரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தியதே ராஜாஜி தான்.

இப்ப்டியும் ஒரு அரசியல்வாதி!!

No comments: